வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (11/01/2017)

கடைசி தொடர்பு:17:52 (11/01/2017)

'ஆணவ'க் கொலையில் முதல் தூக்கு! தம்பதியினருக்கு 'தூக்கு' கிடைக்க என்ன காரணம்?

death sentence தூக்கு தண்டனை தீர்ப்பு

நெல்லை: ஆணவக்கொலை வழக்கில் நெல்லை நீதிமன்றம் கொடுத்த இந்த தீர்ப்பு நிச்சயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆணவக்கொலை வழக்கில் கொடுக்கப்பட்ட முதல் தூக்குத் தண்டனை இது தான். கடந்த இரு ஆண்டுகளில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், இந்த தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வந்த விஸ்வநாதன், நெல்லை, வண்ணாரப்பேட்டை பகுதியில் தனது சகோதரி கல்பனாவின் வீட்டுக்கு வந்த போது, அவரது வீட்டின் அருகே வசித்து வந்த காவேரி என்ற பொறியியல் கல்லூரி மாணவி அறிமுகமானார். இருவருக்குமிடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.

விஸ்வநாதன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரின் காதலுக்கு காவேரியின் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காவேரியின் தந்தை சங்கரநாராயணன் இருவரையும் எச்சரித்தும், காதல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பு அதிகமானதால், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ம் தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

death sentence தூக்கு தண்டனை தீர்ப்பு

கைக்குழந்தை கண் முன் நிகழ்ந்த கொடூர கொலை

இதற்கிடையே காவேரியின் படிப்பு முடிந்ததால் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதையடுத்து 2016-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த சங்கரநாராயணனும் அவரது குடும்பத்தினரும் கடும் கோபம் அடைந்தனர். இந்த நிலையில், வெளியூரில் தலைமறைவாக இருந்த விஸ்வநாதன் தனது அக்காவின் வீட்டுக்கு காவேரியுடன் வந்திருப்பதாக சங்கரநாராயணனுக்கு தெரியவந்துள்ளது. இது பற்றி விசாரிக்க அவரும் அவரது மனைவி செல்லம்மாள் என்பவரும் சென்றுள்ளனர். ஆனால், அதற்குள்ளாக இருவரும் வீட்டில் இருந்து சென்று விட்டனர். வீட்டில் கல்பனா மட்டும் இருந்துள்ளார்.

தனது மகளைச் சந்திக்க முடியாத ஆத்திரத்தில் இருவரும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில், வீட்டுக்குச் சென்ற பின்னர், தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது செல்லம்மாள் தனது கணவரிடம், ‘நம்ம பிள்ளைய அடுத்த சாதிப் பய கூட்டிட்டு ஓடிட்டான். அவளக் கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வரமுடியல. அல்லது அந்தப் பயல வெட்டிட்டு வர முடியல. நீங்கள் ஆம்பளன்னு சுத்திக்கிட்டு இருக்கீங்க’ என கடுமையாக திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரநாராயணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு கல்பனா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கைக்குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த அவரைப் பார்த்ததும் கோபத்துடன், குழந்தையை இழுத்து வீசிவிட்டு, கல்பனாவை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனடியாக அவராகவே காவல்நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார். கடந்த ஆண்டு மே 13-ம் தேதி இந்த கோரச் சம்பவம் நடந்தது.

death sentence தூக்கு தண்டனை தீர்ப்பு

கொலை நடந்த 8 மாதங்களில் தீர்ப்பு

மாற்று சாதியைச் சேர்ந்த விஸ்வநாதன் தனது மகளை திருமணம் செய்ததால், விஸ்வநாதனின் அக்காவை வெட்டிக்கொன்ற இந்த ஆணவக்கொலை பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கு தூண்டுதலாக இருந்த செல்லம்மாளையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. கொலை வழக்கில் 17 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சங்கரநாராயணனும் அவரது மனைவி செல்லம்மாளும் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி அப்துல் காதர், இருவருக்கும் தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பைக் கேட்டதும் செல்லம்மாள் கோர்ட்டு வளாகத்திலேயே நீதிபதி முன்பாக தரையில் விழுந்து அழுதார். தண்டனையைக் குறைக்கும்படி அவர் நீதிபதியிடம் கெஞ்சினார். ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிபதி உறுதிப்படுத்தியதால் இருவரையும் போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கைப் பொருத்தவரையிலும், கொலை நடந்த 8 மாதங்களிலேயே விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சாட்சிகள் விசாரணை வேகமாக நடந்து முடிக்கப்பட்டதால் விரைவாக தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்றரை வயது உள்ள பச்சிளம் குழந்தையின் கண் எதிரிலேயே அந்தக் குழந்தையின் தாயை வெட்டிக் கொலை செய்த செயலை நீதிமன்றம் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் கொண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

death sentence தூக்கு தண்டனை தீர்ப்பு

தூக்கு தண்டனை ஏன்?

நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘காதல் விவகாரத்தை சாதிய பிரச்னையாக்கியதுடன், அதில் கொஞ்சம் சம்பந்தமே இல்லாத அப்பாவிப் பெண்ணை கொலை செய்துள்ளனர். கணவனும் மனைவியும் கூட்டுச் சதி செய்து இந்தக் கொலைச் சம்பவத்தை நடத்தி இருக்கிறார்கள். கைக்குழந்தையை மடியில் வைத்திருந்த பெண்ணை அந்தக் குழந்தையின் எதிரிலேயே கொடூரமாக வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். இது போன்ற குற்றச் செயல்களுக்கு மிகவும் கடுமையான முறையில் தண்டனை விதிக்க வேண்டும் என்பதை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வdeath sentence தூக்கு தண்டனை தீர்ப்புலியுறுத்தி இருக்கிறது.

சங்கரநாராயணனும், அவரது மனைவி செல்லம்மாளும் கொடூரமாக கொலை செய்தது நிரூபணமாகி இருப்பதால் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. செல்லம்மாள் இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளார். அவரை பெண் என்பதற்காக கருணை காட்ட இயலாத வகையில் அவரது தூண்டுதல் இருந்துள்ளது. அதனால் இருவரையும் சாகும்வரை தூக்கிலிட வேண்டும். இருவருக்கும் கூட்டுச் சதிக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் சங்கரநாராயணனுக்கு 11 வருடமும் செல்லமாளுக்கு 6 வருடமும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இருவருக்கும் தலா 3000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட கல்பனாவின் கணவர் சற்குணம் வேன் டிரைவராக உள்ளார். அவருக்கு அரசு 8.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய குழந்தை தீபக் சிறுவயதாக இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவருக்கும் உதவித் தொகை வழங்க உத்தரவிடுகிறேன். அந்த குழந்தை 21 வயது ஆகும் வரை அல்லது பட்டப் படிப்பை முடிக்கும் வரையிலும் மாதந்தோறும் 11 ஆயிரத்து 600 ரூபாய் உதவித் தொகையாக அரசு வழங்க வேண்டும்’ என நீதிபதி அப்துல் காதர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

'ஆணவக் கொலையில் இது தான் முதல் தூக்கு'

ஆணவக் கொலைச் சம்பவங்கள் தொடர்பான பல வழக்குகள், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இன்னும் சில வழக்குகள் முடிவடைந்த போதிலும் அவற்றில் உரிய சாட்சிகள் இல்லாததாலும், சாட்சி சொல்ல பலரும் தயக்கம் காட்டியதாலும் குற்றச் செயல்கள் நிரூபிக்கப்படாத நிலையே உருவானது. ஆனால், நெல்லையில் நடந்த இந்த ஆணவக் கொலை வழக்கை வேகமாக நடத்தி முடித்ததுடன், கொலை நிரூபணமானதால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆணவக் கொலை வழக்கில், அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இது குறித்து பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞரான ராஜ பிரபாகரன், ‘இது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பு. ஆணவக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. இது போன்ற தீர்ப்புகளின் மூலமாக ஆணவக் கொலை செய்பவர்களுக்கு அச்சம் ஏற்படும். அத்தகைய சம்பவங்கள் குறைவதற்கு இது போன்ற தீர்ப்புகள் காரணமாக அமையும்’ என்றார் நம்பிக்கையுடன்.

- ஆண்டனிராஜ்,

படங்கள்: எல்.ராஜேந்திரன்


டிரெண்டிங் @ விகடன்