“சுயநலத்துக்காக அவசர சட்டம் கொண்டுவரும் போது ஜல்லிக்கட்டுக்கு ஏன் கூடாது?” தகிக்கும் போராட்டக்காரர்கள்

ஜல்லிக் கட்டு அவசர சட்டம்

ல நாட்கள் மெளனத்துக்குப் பிறகு முதல்வர் பன்னீர் செல்வத்துடனான சந்திப்புக்குப் பின்னர் ஜல்லிக்கட்டு பற்றி வாய்திறந்துள்ள பிரதமர் மோடி, "ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர இயலாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் வரை அதில் தலையிடமுடியாது. உதவி செய்ய முடியாது" என்று சொல்லி இருக்கிறார்.  

மோடி சொன்னதில் எவ்வளவுதூரம் உண்மை இருக்கிறது? இந்தியாவில் பல்வேறு விஷயங்களுக்காக ஆளும் அரசியல்வாதிகளால் தங்களுக்குச் சாதகமாகவும், பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகவும் அவசர சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதற்கு பல முன் உதாரணங்கள் இருந்திருக்கின்றன.

அவசர சட்டம் சில காரணங்கள்

இந்திய அரசியல் சட்டத்தின் 123-வது பிரிவின் படி அவசர முக்கியத்துவம் கருதி, பொதுமக்கள் நலனுக்காக எந்த ஒரு விஷயத்தின் மீதும் அவசர சட்டம் பிறப்பிக்க முடியும். நாடாளுமன்றம் நடைபெறாத காலத்தில் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஒப்புதலுடன் கொண்டு வரப்படுகிறது. பின்னர்  நாடாளுமன்றம் கூடியதும் அவசர சட்டத்துக்குப் பதிலாக சட்டமசோதா நிறைவேற்றப்படும்.  

679 அவசர சட்டங்கள்

இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின் அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் 1950 முதல் 2014-ம் ஆண்டு டிசம்பர் வரை 679 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதில் காங்கிரஸ் ஆட்சி செய்த 50 ஆண்டு காலத்தில் 456 முறை பிறபிக்கப்பட்டுள்ளன. முந்தைய பி.ஜே.பி கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமர் ஆக இருந்தபோது 1998 முதல் 2004 வரை 58 முறை கொண்டு வரப்பட்டன.

அதிகாரி நியமனத்துக்காக

மோடி அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புதிதில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஒரு அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்பேந்திரா மிஸ்ரா என்பவரை பிரதமரின் முதன்மைச் செயலாளராகப் பதவியில் அமர்த்த, தொலைத்தொடர்பு துறையில் இருந்த அவரை பணிமாற்றம் செய்வதற்காக டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்திருத்தத்தின் மீது அவசர சட்டம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டு அது ஜனாதிபதி ஒப்புதலுடன் அவசர சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது. 

நரேந்திரமோடி-பன்னீர் செல்வம் சந்திப்பு

ஒரே அவசர சட்டம் 3 முறை

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2013-ல்  நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும், தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தங்களை மேற்கொள்ள மோடி திட்டமிட்டார். இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மக்களவையில் பி.ஜே.பி-க்கு பெரும்பான்மை இருந்ததால் மசோதா எளிதாக நிறைவேறியது.  மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அங்கு நிறைவேறவில்லை. இதையடுத்துத்தான் நிலம் கையகப்படுத்தலுக்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அவசர சட்டத்துக்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனால் இரண்டு முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கடந்த  2015-ம் ஆண்டு  மே 31-ம் தேதி 3-வது முறையாகவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர்தான் காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தி ஒரு வழியாக நில கையகப்படுத்துதல் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது.

இதெல்லாம் யாருக்காக?

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தொழில் அதிபர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்காகவே நிலம் கையகப்படுத்தும் மசோதாவை 3 முறை அவசர சட்டமாக மோடி அரசு கொண்டு வந்தது.
மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் அவசரச் சட்டங்களுக்கு, ஜனாதிபதியாக இருப்பவர்கள் எந்தவிதக் கேள்வியும் கேட்காமல் கையெழுத்துப் போட்டு விடுவார்கள். பி.ஜே.பி அரசால் அடுத்தடுத்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசும் போது, "அவசர சட்டத்தின் வழியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது" என்று கூறி இருக்கிறார். அவர் இப்படி பேசிய பின்னரும் மேலும் சில விஷயங்களுக்காக அவசரச் சட்டங்களை  பி.ஜே.பி அரசு கொண்டுவரத்தான் செய்தது.   

ஜல்லிக் கட்டு போராட்டம்

உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறார்களாம்

இன்னொன்றையும் மோடி சொல்லி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவசர சட்டம் கொண்டு வர வாய்ப்பில்லை என்று சொல்லி இருக்கிறார்.

காவிரி வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உத்தரவு வெளியான மூன்று நாட்கள் கழித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட அட்டார்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்றார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாடாளுமன்றம், மத்திய அரசுக்கே உரிமை உள்ளது என்று கூறினார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், அதை நிறைவேற்ற முடியாது என்று சொல்லி இருக்கிறது மோடி அரசு.

மோடி அரசு உச்சநீதிமன்றத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று தெளிவாகிறது. இப்படி இருக்கும் போது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது தன் கையில் இல்லை என்று கூறுவது யாரை ஏமாற்ற?

சுயநலத்துக்காக, சுய லாபத்துக்காக அவசர சட்டம் கொண்டு வரும் மோடி அரசு ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசர சட்டம் கொண்டு வர இயலாது என்று சொல்வது தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கை என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

பிடிவாதம்தான் காரணம்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் பேசினோம். "ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவது பெரிய விஷயம் அல்ல. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் அவசர சட்டம் கொண்டு வர வாய்ப்பில்லை என்று மோடி கூறி இருக்கிறார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசர சட்டம் எல்லாம் கொண்டு வரத்தேவையில்லை என்று மோடி முடிவு செய்து விட்டார். அவர் ஒரு முடிவு செய்து விட்டால் அதில் இருந்து அவர் மாறமாட்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒருமுறை உட்கார்ந்திருந்தார். அப்போது அவரிடம் சென்று, "2000ம் ஆண்டு பராம்பர்யம் மிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு உதவ வேண்டும்" என்று கேட்டேன்.  அதற்கு அவர், "நீங்கள் எல்லாம் சேர்ந்து உறியடிக்கு தடை விதித்து இருக்கிறீர்கள்" என்று சொல்கிறார். ஒருவித வஞ்சத்துடன் அவர் இதைக் கூறியது போல இருந்தது. தமிழகத்தில் மக்களிடம் இருக்கும் எழுச்சியை தடுக்க, வேறு விவகாரங்களை எழுப்பி கவனத்தை திசை திருப்ப முடியும் என்று மோடி நினைக்கிறார். பி.ஜே.பி இனி தமிழகத்தில் செல்லாகாசாகிவிடும் என்பதைத்தான் இது காட்டுகிறது" என்றார்.

-கே.பாலசுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!