'தமிழர்கள் அழைத்தால் நானும் போராட வருகிறேன்..!' - மார்க்கண்டேய கட்ஜு பிரத்யேக பேட்டி #VikatanExclusive

மார்க்கண்டேய கட்ஜு

ல்லிக்கட்டு விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்தே ஆதரவுக் குரல் கொடுத்துவருபவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்த நிலையில், 'அவசரச் சட்டம் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒரே தீர்வு!' என்று அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கும் கருத்து தமிழக இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு மற்றும் தமிழர் பாரம்பர்யம் குறித்த நமது கேள்விகளுக்கு அவர் கொடுத்துள்ள பதில்கள் இங்கே....

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மாநில அரசு தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அது குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டை நானே முன்னின்று நடத்துவேன் என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் - இதை நான் மிகவும் வரவேற்கிறேன். மேலும் அவசர சட்டமானது குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடே அமல்படுத்தப்படுவதால் இனி இந்த வழக்கில் சட்டரீதியான பிரச்னை இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். 

ஜல்லிக்கட்டுக்கு நீங்கள் ஆதரவளிக்க காரணம் என்ன?

தமிழும் தமிழர்களும் நீண்ட பாரம்பர்யமும் பண்பாடும் உடையவர்கள். 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலேயே ஜல்லிக்கட்டுப் பற்றிய குறிப்புகளை நான் படித்ததாய் எனக்கு நினைவு. மேலும், பல கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பாரம்பர்யத்தையும் மதிப்பது அவசியமாகிறது. 

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிவரும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...

பதில் - அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதன்காரணமாக, அவர்களின் போராட்டம் வெற்றியடையும் என்றும் எனக்கு நம்பிக்கையுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இந்த வழக்கில், தீர்ப்பு காலதாமதம் ஆவதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பதில் - கடந்த காலத்தைப் பற்றிப் பேச வேண்டாம். இனிமேல், நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளுக்கு எதிரான எந்தவொரு செயலும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். 

 

 

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, இந்தாண்டே நடக்கும் பட்சத்தில், அதில் நீங்கள் பங்கேற்கும் எண்ணம் உள்ளதா?

பதில் - சட்டரீதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் பட்சத்தில், அதை நேரில் கண்டுகளிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்புகள் ஏதாவது எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால், அந்த அழைப்பை கண்டிப்பாக ஏற்பேன்.

 

மார்க்கண்டேய கட்ஜு அவர்களைத் தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் - mark_katju@yahoo.co.in  

 - ஜெ. சாய்ராம், மாணவ பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!