வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (22/01/2017)

கடைசி தொடர்பு:13:54 (23/01/2017)

‘வதந்திகள் பரவலாம்... நிதானம் இழக்க வேண்டாம்.. கவனம் மாணவர்களே...!’

மெரினா ஜல்லிக்கட்டு

 

ல்லிக்கட்டு பரபரப்பு காரணமாக கொதிநிலையில் இருக்கும் தமிழக நகரங்களில் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்க  ஏதேனும் கடுமையான  உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என தகவல்கள் பரவுகின்றன. ஆனால், அவை எதுவும் ஊர்ஜிதமான தகவல்களாக இல்லை. 

 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இதுதவிர சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டக்குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமையே இல்லாமல் அறவழியில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.

ஆறாவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தின் பலனாக, தமிழக அரசு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை பிறப்பித்தது... ’ஆறு மாத காலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி’ என்ற ஆளுநரின் அறிவிப்பு உற்சாகம் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு சடுதியில் கலைந்தது. மெரினா முதல் அலங்காநல்லூர் வரை ஆளுநரின் அறிவிப்பு எந்த உற்சாகக் கூக்குரலையும் எழுப்பவில்லை. 

இதனிடையே ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைக்க சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

ஆனால் மக்கள் அவரை வரவேற்க தயராக இல்லை. அவர்கள் தெளிவாக, “ஆறு மாத காலத்துக்கு அனுமதி என்பது நிரந்தரத் தீர்வல்ல. எங்களுக்குத் தேவை உறுதியான, உண்மையான தீர்வு. தற்காலிக தீர்வு என்பது எங்கள் நோக்கமல்ல! முந்தைய காலங்களில் நடந்தது போலவே கண்துடைப்பாக ஏதேனும் அறிவித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்க மாட்டோம். நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஜல்லிக்கட்டை எந்த இடையூறும் இல்லாமல் இனி ஆண்டாண்டு காலம் நடத்தச் செய்யும் வகையில் காட்சிப் பட்டியல் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்ற நிரந்தரத் தீர்வை எட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும்!’ என்று பன்னீர்செல்வத்தை திரும்பி அனுப்பினர்.

இந்நிலையில் மக்களின் தன்னெழுச்சியைக் கட்டுக்குள் கொண்டுவர, அரசு ஏதேனும் கடுமையான முடிவுகள் எடுக்கலாம் என்று மாணவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

முதல்வர் அலங்காநல்லூர் செல்வதற்கு திட்டமிடும் முன்பே, அவர் தலைமையில் தமிழக டி.ஜி.பி. (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இந்த எழுச்சியைக் கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதோடு சட்டம்- ஒழுங்கை சிக்கல் இல்லாமல் கையாளவும் மாநிலம் முழுக்க அமைதியை நிலவச் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஏதேனும் தடை உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது தவறான நோக்கத்தோடு பயன்படுத்தப்படாது. லட்சக்கணக்கில் கூடியிருக்கும் மக்களை எந்த அசம்பாவிதமும் நிகழாமல் வீடு திரும்பச் செய்யும் நடைமுறைக்காக மட்டுமே அந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம். போராட்டக் குழுவினர் இதுவரை அமைதியாக அறவழியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. ‘ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்’ என்ற கோரிக்கையை போராட்டக் குழுவினர் வலியுறுத்தி, அதனால் ஏதேனும் களேபரமானால், அது பரவாமல் இருக்க சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும்!" என்றனர்.

எந்த சூழ்நிலையிலும் இயல்பை இழக்காதீர்கள்!

மாணவர்களே, இளைஞர்களே....  நீங்கள் ஒரு மகத்துவமான போராட்டத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். வரலாறு உங்களை கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள்  எது நடந்தாலும்  எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் இயல்பை இழக்காதீர்கள். அமைதியை இழக்காதீர்கள். இதுநாள் வரை நீங்கள் கடைபிடித்த அமைதி, அறவழி போராட்டத்தை, அந்த மனநிலையை எந்த நொடியிலும் தக்க வைத்திருங்கள். வதந்திகள், ஹேஷ்யங்கள் பரவினாலும் சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாகச் செயல்படுங்கள். கூட்டத்தைக் கலைக்கும் கெடுபிடிகளோ, வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளோ மேற்கொள்ளப்பட்டால், பொறுமையாக ஒத்துழையுங்கள்... அல்லது அமைதி வழியில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் நிதானம் இழக்க வேண்டாம்... அது மட்டும் முக்கியம்..!

ஏனென்றால், மெரினா முற்றுகை ஒரு வரலாற்று பாடம். அதைத்தான் நாளைய தலைமுறை படிக்கப்போகிறது. அதில் ஒரு பிழையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் செய்வீர்கள்... அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!

- எஸ். மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்