வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (23/01/2017)

கடைசி தொடர்பு:12:25 (24/01/2017)

ஜல்லிக்கட்டு மசோதாவை நிறைவேற்ற முதன்முறையாக நடந்த சட்டமன்ற சிறப்புக்கூட்டம்!

ஜல்லிக்கட்டு

ல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. 23-ம் தேதி மாலையில் நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் அவசர சட்டத்துக்குப் பதில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஒரு மசோதா கொண்டு வருவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தப்படுவது இது முதன்முறை என்று கூறப்படுகிறது.

சிறப்புக் கூட்டம்

தமிழக சட்டசபை பொதுவாக 3 முறை கூட்டப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்காகவும், அது தொடர்பாக விவாதம் நிறைவேற்றுவதற்காகவும் சட்டமன்றம் கூடும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ஒருமுறை சபை கூடும். பின்னர் நவம்பர் மாதம் ஒருமுறை சபை கூடும். சட்டசபை நடக்கும் நாட்களில் ஒரு நிகழ்ச்சி நிரலாக மசோதா நிறைவேற்றப்படுவதுதான்.

வழக்கமான நிகழ்வு

ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான மசோதா நிறைவேற்றுவதற்காக 23-ம் தேதி மதியம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் 6 மாதங்கள் அமலில் இருக்கும் என்றாலும் கூட, நிரந்தர சட்டம் தேவை என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதையடுத்துத்தான் இப்போது சிறப்புக் கூட்டத்தின் மூலம் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமசோதாவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதனை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. இதையடுத்து ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேறி இருக்கிறது

முதன்முறை

இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம்.
பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ., காங்கிரஸ்; "சட்டமன்றம் கூட்டப்படும்போது காலை, மாலை இருவேளைகளிலும் சபை நிகழ்வுகள் நடப்பது வழக்கம். ஆளுநர் உரை நிகழ்த்திய நாளன்று மாலையில் மசோதா நிறைவேற்றுவதற்காக இது போன்று கூட்டம் நடத்தப்பட்டதில்லை. இதுதான் முதன்முறை. மற்றபடி மாலையில் சபை நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன"

வழக்கமான நிகழ்வு

பாலபாரதி,  முன்னாள் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்; "கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க-தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இதற்குமுன்பு எல்லாம் அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இப்போது சபை கூடும் நாளில் மசோதாவை நிறைவேற்றி இருக்கின்றனர். இது சிறப்பு சட்டமன்ற கூட்டம் அல்ல. வழக்கமான நிகழ்வுதான்"

சட்டத்தில் என்ன இருக்கிறது?

விஜயன், வழக்கறிஞர்; "மசோதாவில்  3 (பி) என்று ஒரு பிரிவு இருக்கிறது. இந்தப் பிரிவின் படி ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விதிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவானது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால், தனியாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று இன்னொரு பிரிவு சொல்கிறது. ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை. இதுபோன்ற முரண்பாடுகளை நீக்க வேண்டும்"

சட்டமசோதா நிறைவேற்றியதன் மூலம் ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் முடிவுக்கு வருகின்றன. மசோதா நிறைவேறும் வரையாவது போலீஸார் பொறுமை காத்திருக்கலாம் என்று அனைத்து தரப்பிலும் சொல்லப்படுகிறது.

- கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்