ஜென் Z இளைஞர்களின் போராட்டம் இப்படித்தான் இருக்குமா?

இளைஞர்களின் மெரினா போராட்டம்

நிச்சயம் இது வரலாற்றில் பதிவான ஒரு போராட்டம்தான். அதை யாருமே மறுக்க முடியாது. இறுதி நாட்களில் யாரும் எதிர்பாராதவிதமாக சில அசம்பாவிதங்கள் நடந்தாலும் கூட, அதற்கு முன்பு  ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும், இளைஞர்களும் முன்னெடுத்து சென்ற அறப்போராட்டங்கள் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துவிட்டன. தமிழகம் முழுவதும், எல்லா மாவட்டங்களிலும் மக்களோடு ஒன்று திரண்டு, போராடிய இந்த தலைமுறையினர், சமூகத்திற்கு பல்வேறு விஷயங்களை கற்றுத்தந்துள்ளனர். அதுவும் தலைநகர் மெரினாவில் போராடிய இந்த ஜென் Z தலைமுறை இளைஞர்களின் போராட்ட வழிமுறைகள், இதற்கு முன்பு யாருமே பார்த்திராதது. நமது கையில் இருக்கும் ஒரு மொபைல் போனால், என்ன செய்துவிட முடியும் என்பதனை நமக்கே உணர்த்தியுள்ளார்கள். அதன் சில பதிவுகள் இங்கே...

விதைபோட்ட சமூக வலைத்தளங்கள்:

பொங்கலுக்கு முன்பிருந்தே ஜல்லிக்கட்டுக்கான கோஷங்களும், ஆதரவு கருத்துக்களும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்களில் உலா வரத்துவங்கின. இதே கருத்துப் பரவல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நடந்தவைதான் என்பதால், இதனை யாருமே பெரிதுபடுத்தவில்லை. ஆனால் கடந்த 8-ம் தேதி ஃபேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்து, மெரினாவில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் திடீரென கூடி, ஜல்லிக்கட்டுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியது, அனைவருக்குமே ஆச்சர்யம். 

உந்தித்தள்ளிய ஹேஷ்டேக்ஸ்:

அத்துடன் பொங்கல் பண்டிகை நெருங்க, நெருங்க ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் ஆதரவுக் குரல்களின் அளவு அதிகமானது. #ISupportJallikattu #I_Need_Jallikattu #WeNeedJallikattu #WeDoJalikattu என்ற ஹேஷ்டேக்களால் சமூக வலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தினர் நெட்டிசன்ஸ். மீம்ஸ், யூ-டியூப் சானல்கள், ஃபேஸ்புக் பக்கங்கள் என அனைத்துமே 'ஜல்லிக்கட்டை' ஆதரித்து குரல் கொடுத்தன. இந்த தாக்கம், இணையத்தில் மட்டுமில்லாமல், நிஜ உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

களம் கண்ட காளைகள்:

இளைஞர்களின்  மெரினா புரட்சி

ஆனால் இந்த முறை வெறும் ஃபேஸ்புக் போராளிகளாக மட்டுமில்லாமல், களத்திலும் இறங்கினர் இளைஞர்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் அனைத்துமே, வெறும் தகவல்தொடர்பு ஊடகங்கள்தானே தவிர, அதுவே போராட்ட களம் கிடையாது. அதை உணர்ந்தவர்களாக மாநிலம் முழுக்க, உணர்ச்சியுடன் ஒன்று கூடினார்கள் இளைஞர்கள். கடந்த 16-ம் தேதி முதலே, மெரினாவில் இளைஞர்கள் கூட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல, போராட்டக் காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. சமூக வலைத்தளங்கள் அனைத்திலுமே மெரினாவை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டன. இறுதியாக இதனை தற்காலிக போராட்டமாக இல்லாமல், நிரந்தரமான போராட்டமாக மாற்றிக் காட்டினர் இளைஞர்கள்.

அன்றைக்கு இளைஞர்களின் எண்ணிக்கை கடற்கரையில் அதிகரித்த வண்ணமே இருக்க, திடீரென மெரினாவில் விளக்குகள் அதிகாரத்தின் கைகளால் அணைக்கப்பட்டன. ஆனால் கொஞ்சமும் அசராமல், உடனே தங்கள் மொபைல் போனின் டார்ச் லைட்டை ஒளிரவிட்டு 'கெத்து' காட்டினார்கள் இளைஞர்கள். இதன் பின்பு மெரினாவின், போராட்ட முறையாகவே மாறிப்போனது இந்த டார்ச் லைட் போராட்டம். இறுதியில் இந்த சம்பவம் இந்த ஆண்டின் சிறந்த தருணங்களில் ஒன்றாக பதிவானது.

டார்ச் லைட் போராட்டம்

இது வேற மாதிரியான போராட்டம்:

ஒரு அரசியல் கட்சியினரின் போராட்டம் என்றால், எப்படி இருக்குமோ, அதற்கு நேர்மாறான போராட்டத்தை நம் கண்முன் காட்டினர் இளைஞர்கள். அதிலும் தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்திய விதம், வித்தியாசமானது. 

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்


போராட்டம் ஒரு நாளை கடந்ததுமே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடிவு செய்து, களத்தில் குதித்தனர் தன்னார்வலர்கள். உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் போன்றவற்றை அவர்கள் விநியோகித்தனர். மறுபக்கம் இளைஞர்கள், உணவு கொடுக்க தயாராக இருக்கும் தன்னார்வலர்களின் எண்கள், தேவைப்படுவோரின் விவரங்கள் ஆகிய இரண்டையும் இணைத்து சில மணி நேரங்களிலேயே ஃபார்வேர்டு மெசேஜ்களாக வாட்ஸ்அப்பில் பரப்பி அசத்தினர்.

பிளக்ஸ் போர்டு ஆன செல்ஃபி ஸ்டிக்:

போராட்டங்கள் என்றாலே கோஷங்கள் இல்லாமலா? அதுவும் இங்கே இருந்ததன. ஆனால் அவற்றின் வடிவம் முற்றிலும் வேறுபட்டது; புதியது. எப்படி உணர்ச்சிகளுக்கு உருகொடுத்து, ட்வீட்டாக, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆக பதிவு செய்கிறோமோ, அதைப்போல முலாம் பூசாத வார்த்தைகளாக, அதிகாரத்திற்கு எதிரான அரிதாரம் பூசாத கோபமாக இருந்தன அந்த கோஷங்கள். '50 MB-க்கு இருக்குற பவர் கூட, 50 MP-க்கு இல்ல' என்ற கோஷத்தை நாம் ஒரு 10 வருடங்களுக்கு முன்பு யோசித்திருக்க முடியுமா என்ன?

போராட்ட கோஷங்கள்

போராட்டக் களத்தில் இருந்த இவர்களின் செல்ஃபி ஸ்டிக்குகள், வெறும் செல்ஃபிக்கள் எடுக்க மட்டுமே பயன்படவில்லை. மாறாக அதில் தங்கள் மொபைல் போனை மாட்டி, அதிலும் போராட்ட வாசகங்களை ஒளிக்க செய்தார்கள் இளைஞர்கள். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, போராட்ட இளைஞர்களே சாலை போக்குவரத்தை சரிசெய்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள், ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நின்றிருக்க, அதில் ஒருவர் மட்டும் தன் செல்ஃபி ஸ்டிக்கை, ஃபேன்ட் பாக்கெட்டில் சொருகியிருந்தார். அதில் மாட்டியிருந்த செல்போனில் ஸ்க்ரோல் ஆன வாசகம், 'We Do Jallikattu'.

We Do Jallikattu

உதவிக்கு வந்தது போலிஸ் அல்ல...ஸ்மார்ட்போன்தான்!

ஒருபக்கம் தன்னார்வலர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கிக் கொண்டே இருக்க, எந்தவித அடிதடிகளும், ஆரவாரங்களும் இல்லாமல், தேவையானவர்கள் மட்டுமே அதனைப் பெற்றுக் கொண்டனர். கூட்டத்தில் இருப்பவர்களுக்கு இதில் பற்றாக்குறை ஏற்பட, உணவு வேண்டுபவர்கள் தங்கள் செல்போன் மூலமே அதனைப் பெற்றுக்கொண்டனர். எப்படித் தெரியுமா? தங்கள் போனில் 'Showit' என்னும் ஆப்பை இன்ஸ்டால் செய்து, அதில் 'Food' என டைப் செய்து மேலே உயர்த்திக்காட்ட, அதனைப் பார்த்தவர்கள் அவர்களுக்கு உணவை விநியோகித்தனர்.

உதவிய இளைஞர்கள்

எந்த நேரத்திலும் இணைய இணைப்பு துண்டிக்கப்படலாம் என திடீரென வதந்திகள் பரவ, உடனே கொஞ்சமும் சலனமும் இன்றி, வாட்ஸ்அப்பிற்கு பதிலாக 'FireChat' ஆப்பை இன்ஸ்டால் செய்து, உறவாடினர் இளைஞர்கள். 

கரம் கோர்க்க வைத்த இணையம்:

ஜல்லிக்கட்டுக்காக மட்டும் போராடினால் போதுமா, இனிமேல் இப்படி ஒரு கூட்டம், ஏதேனும் ஒரு பிரச்னைக்கு ஒரு கூட்டம் கூடுமா, என வெளியே இருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருக்க, களத்தில் இருந்த இளைஞர்களோ ஒவ்வொருவரும் தங்கள் வாட்ஸ்அப் எண்ணை தங்களிடையே பகிர்ந்து கொண்டனர். மெரினாவில் பிரிந்தாலும் கூட, இப்போதும் பலர் வாட்ஸ்அப்பில் குழுவாக இணைந்துள்ளனர். 

மெரினாவில் போலீசார் குவிப்பு

சரி...இவர்களால் இறுதியில் வன்முறைகள் எல்லாம் அரங்கேறிவிட்டதே என்கிறீர்களா? நேற்று முதல் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்து கொட்டும், வீடியோக்களும், உங்கள் மனசாட்சியுமே அதற்கு பதில்! இனிமேல் நீங்கள் மெரினா சென்றால், தலைவர்களின் நினைவிடங்கள், கடற்கரை காற்று, காதலர் கூட்டம் ஆகிய அனைத்தையும் விட, முதலில் உங்கள் நினைவுக்கு வருவது கூட, ஜல்லிக்கட்டாகத்தான் இருக்கும்! அதுதான அவர்களின் வெற்றி!

- ஞா.சுதாகர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!