வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (27/01/2017)

கடைசி தொடர்பு:11:04 (27/01/2017)

பத்மஸ்ரீ வென்ற இந்த 8 விளையாட்டு வீரர்களின் சிறப்பு என்ன?

பத்ம விருதுகள் என்பது இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு அரசால் வழங்கப்படும் உயர் ரக விருதுகளாகும். 1954 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆரம்பத்தில் பத்ம விருதுகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. பாரத ரத்னா , பத்ம விபூஷண் ஆகியவைத் தரப்பட்டன. அதன் பிறகு பத்ம விபூஷண் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் ஒரு ஆண்டில் அதிகபட்சம் 120 பேருக்கு மட்டும் தான் பத்ம விருதுகள் தரப்பட வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். நாட்டில் இதுவரை பாரத ரத்னா விருது வெறும் 45 பேருக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது.

இந்தாண்டு பத்மஸ்ரீ விருது பட்டியலில் எட்டு விளையாட்டு வீரர்கள் இடப்பெற்றிருக்கிறார்கள். இவர்களை பற்றிய சிறு அறிமுகம் இங்கே!

பத்மஸ்ரீ  விருது வென்ற சேகர் நாயக்

 1. சேகர் நாயக்:- 

கர்நாடகாவைச் சேர்ந்த நாயகன் சேகர் நாயக் பற்றி இந்த தேசம் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. பார்வையற்றவரான சேகர் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். அரவணைக்க யாரும் இல்லையென்றாலும், இந்த உலககத்தில், தான் ஏதோவொன்றை சாதிக்கத் பிறந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர். பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இவர் சாதித்தது ஏராளம். 2000 வது ஆண்டில் கர்நாடக அணிக்காக இவர் விளையாடிய போது ஒருநாள் போட்டி ஒன்றில் 249 ரன்கள் எடுத்து மிரளவைத்தார். அதன் பிறகு படிப்படியாக பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் இந்திய அணிக்குத் தலைமையேற்கும் அளவுக்கு திறன் பெற்றவராக உருவெடுத்தார். 2012 பெங்களூரில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை ஜெயித்தது இவரது கேரியரில் ஆகச்சிறந்த சாதனை. 

பத்மஸ்ரீ விகாஸ் கவுடா

2. விகாஸ்  கவுடா:- 

33 வயதாகும் விகாஸ் கவுடா கர்நாடக  மாநிலத்தை சேர்ந்தவர். விகாஸ் வட்டு எறிதல் வீரர். ஏதென்ஸ், பீஜிங், லண்டன், பிரேசில் என நான்கு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட பெருமைக்குரியவர். 2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமைச் சேர்த்தவர் இவர். 2015 ஆம் ஆண்டு  ஆசிய சாம்பியன்ஸ் போட்டியிலும் தங்கம் வென்றார். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை 2013 ஆசிய போட்டியில்,  64.90 மீட்டர் தூரத்துக்கு வட்டு எரிந்து சாதனை படைத்ததுதான் இவரது அதிகபட்ச தூரம். பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது, எதிர்பார்க்காதது. பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என சொல்லியிருக்கிறார் விகாஸ். 

பத்மஸ்ரீ தீபா மாலிக்

3. தீபா மாலிக்:-

ஷாட் புட் வீராங்கனையான தீபா மாலிக் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். 42 வயதாகும் தீபா மாலிக் கடந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளில் சரித்திரம் படைத்தார். சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தீபா மாலிக். மாற்றுத்திறனாளியான தீபா கடந்த ஆண்டு பாராலிம்பிக்  தொடரில் ஷாட் புட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்தார். இவர் ஏற்கனவே அர்ஜுனா விருது ஜெயித்தவர். தற்போது பத்மஸ்ரீ விருது ஜெயித்திருக்கிறார்.

பத்மஸ்ரீ மாரியப்பன் தங்கவேலு

4. மாரியப்பன்:- 

சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தனது கேரியரில் எவரெஸ்ட் உயரம் தாண்டியிருக்கிறார். பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் இவர் படைத்த சாதனைகள் இவரது சரித்திரத்தை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குச் சொல்லும். அப்பாவால் கைவிடப்பட்ட குடும்பம்; வருமானத்துக்கு வழி இல்லை; காய்கறி விற்று பிழைக்கும் அம்மா என வறுமைச் சூழல் ஒருபக்கம் வாட்ட, திறமை இருந்தாலும், நல்ல ஆசிரியர்கள் உடன் இருந்தாலும் விளையாட்டு வீரர்களை கை தூக்கிய விடாமல் எட்டியே நிற்கும் தமிழக அரசின் பாராமுகத்துக்கு மத்தியில் மகத்தான சாதனைகள் படைத்திருக்கிறார் மாரியப்பன். ஒலிம்பிக்கில் தங்கம் ஜெயித்த இந்த தங்க மகனுக்கு இப்போது பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. 

பத்மஸ்ரீ திபா கர்மாகர்

5. திபா கர்மாகர் :- 

இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்று திரிபுரா. பத்மஸ்ரீ திபா கர்மாகர் பிறந்ததும் இந்த மாநிலத்தில்தான். சின்ன  வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம். ஆனால் தட்டையான பாதம் இருந்ததால் ஜிம்னாஸ்டிக்கில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. தினமும் கடினமான பயிற்சிகளை செய்து அந்த பிரச்னையை சரி செய்தார் திபா. 

இந்தியாவில் சர்வதேச தரம் வாய்ந்த ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடங்கள் கிடையாது, உபகரணங்கள் கிடையாது, பயிற்சியாளர்கள் கிடையாது, ஸ்காலர்ஷிப்பும் கிடையாது. இப்படியொரு சூழ்நிலையில் தான் ஜிம்னாஸ்டிக்கில் மிகவும் கடினமான உயிருக்கே உலை வைக்கக் கூடிய செயல்வகையான ப்ரோடுனோவா வால்ட்டில் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். உலகிலேயே இந்த வால்ட்டை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஐந்தாறு பேர்தான் அதில் திபாவும் ஒருவர். ஜிம்னாஸ்டிக்னா என்ன என கேட்கும் நாட்டில் இருந்து சென்ற திபா ரியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பதக்கம்  தவற விட்டார். நான்காமிடம்தான் என்றாலும், அந்தத் தருணத்தில் திபாவின் ஆற்றலை டிவியில் பார்த்த அத்தனை இந்தியர்களிடம் இருந்தும் ஆனந்த கண்ணீர் வடிந்தது. மென் மேலும் வெல்வாய் மகளே எனச் சொல்லி இந்தியாவே கொண்டாடியது! 

பத்மஸ்ரீ  ஸ்ரீஜேஷ்

6. பி.ஆர். ஸ்ரீஜேஷ் : -

கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்த விவசாயி மகன். சிறுவயதில் ஹாக்கி குறித்து பெரிய அறிமுகம் எல்லாம் கிடையாது. ஆறாம் வகுப்பு படிக்கும்போது தான் ஸ்ரீஜேஷுக்கு ஹாக்கி என்ற விளையாட்டு இருப்பதே தெரியும். எட்டாவது வகுப்பு  படிக்கும்போது முதன் முறையாக ஹாக்கி விளையாடவே ஆரம்பித்தார். ஆனால் அடுத்த இரண்டு வருடத்தில்  ஜுனியர் இந்திய அணிக்கு தகுதி பெரும் அளவுக்கு வளர்ச்சி.  பள்ளி, கல்லூரி படிப்பை தொடர்வதா, இல்லை ஹாக்கியை தொடரட்டுமா என பெற்றோரிடம் கேட்டார் ஸ்ரீஜேஷ். 'உனக்கு பிடிச்சத பண்ணுடா கண்ணு' என்று சொன்ன ஸ்ரீஜேஷின் தந்தை மாடுகளை விற்று ஹாக்கி விளையாடுவதற்கான உபகரணங்களையும், கோல்கீப்பருக்கான ஹெல்மெட்டையும் வாங்கித் தந்தார். படித்துக்கொண்டே  ஹாக்கியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்ரீஜேஷ். 

பொதுவாக கேரளாவில் ஹாக்கி விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைவு, கேரளாவைச் சேர்ந்த வீரராக இருந்தாலும், நல்ல கோல்கீப்பர் என்ற நற்பெயர் நேஷனல் டீம் செலெக்ஷனுக்கு உதவியது. 2008ஆம் ஆண்டு ஜுனியர் பிரிவில் ஆசிய கோப்பை விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய கோப்பையை இந்தியா வெல்ல, கோல்கீப்பர் ஆஃப் த டோர்னமெண்ட் விருதை ஜெயித்தார் ஸ்ரீஜேஷ். 

ஜூனியர் ஆசிய கோப்பை அடையாளம் காட்ட, உடனே அள்ளிக் கொண்டது சீனியர் அணி. ஸ்ரீஜேஷ் அணியில் சேர்ந்த காலகட்டம் இந்தியாவில் ஹாக்கிக்கு சோதனை காலமாக இருந்தது. 2008 பீஜிங் ஒலிம்பிக்குக்கு இந்தியா தகுதி பெறாததால், வசவுகளும், விமர்சனங்களும் அணியை பாதித்தது. இந்திய ஹாக்கி அணியின் சீரமைப்பு காலத்தில் தனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் ஸ்ரீஜேஷ். 2001ல் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சீனாவில் நடந்து. இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அனல் பறந்த அந்த போட்டியின்  இறுதிக்கட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில், பாகிஸ்தானின் கடைசி  இரண்டு பெனால்டி வாய்ப்புகளையும் கோல் விழாமல் அருமையாக தடுத்தார் ஸ்ரீஜேஷ், இந்தியா சாம்பியன் ஆனது. ஸ்ரீஜேஸ் வைரலானார். அதன் பின்னர் இந்திய அணியில் இன்றுவரை அசைக்க முடியாத கோல்கீப்பராக தொடருகிறார் ஸ்ரீஜேஸ். "கோல்கீப்பர் பணி என்பது ஒரு நன்றி கெட்ட வேலை என்பதே எனது எண்ணம், நீங்கள் ஆயிரம் கடுமையான சவால்களை முறியடித்தாலும் அதை மக்கள் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் ஒரே ஒரு கோல் உங்கள் மீது வசவுகளை அள்ளித்தெளிக்க போதுமானதாக இருக்கும். ஆனால் எனக்கு கோல் கீப்பிங் தான் பிடிக்கும். ஏனெனில் அதுதான் எனக்கு இன்று வரை சோறு போடுகிறது" கோல்கீப்பர் பணி குறித்த ஸ்ரீஜேஷின் லேட்டஸ்ட் ஸ்டேட்மென்ட் இது தான். 

பத்மஸ்ரீ  சாக்ஷி மாலிக்

7.  சாக்ஷி மாலிக் : -

ஹரியானாவில் உள்ள மோக்ரா கிராமத்தில் பிறந்தவர் சாக்ஷி மாலிக். ஆயிரம் ஆண்களுக்கு 822 பெண்கள் என்ற மோசமான விகிதாசாரத்தை கொண்டிருக்கும் ஊர் கிராமம். பெண் குழந்தைகள் என்றாலே முளையிலே  கொள்ளி வைக்கும் ஊரில் இருந்து பலசாலி ஆண்களை மூர்க்கத்தனமாக தோற்கடிக்கும் வல்லமையுடன் வளைய வந்தவர் சாக்ஷி மாலிக்.

பொண்ணுங்களுக்கு இதெல்லாம் தேவையா? இவளை யார் திருமண செய்து கொள்வார் என ஊரார் தொடர்ந்து வசை பாடிய போதும் 12 வயதிலேயே சாக்ஷி விருப்பப்படி மல்யுத்தப் பயிற்சிக்கு துணிந்து அனுப்பினார் தந்தை சுக்பீர். மாவட்டம், மாநிலம், தேசம் என பதக்கங்களை வென்றவர், இதோ கடந்த ரியோ ஒலிம்பிக்கில் சர்வதேச  அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறார், சாக்ஷி மாலிக் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலம், வெறும் பதக்கம் மட்டுமல்ல, இனி அந்த கிராமத்தில் பெண் குழந்தைகளை கொல்லத் துணியும் கைகளுக்கு போடப்படும் கடிவாளம்.

virat kohli

8. விராட் கோஹ்லி : -

இப்படியொரு வீரன் சாத்தியமே இல்லை என உலகமே வாயைப் பிளக்கிறது. விராட் கோஹ்லியின் கன்சிஸ்டன்சி நினைத்துப் பார்க்க முடியாதது. அவரின் தன்னம்பிக்கை அளவில்லாதது. வெற்றி மீது வெறி கொண்ட இந்த கிரிக்கெட் காதலன் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொட்டதெல்லாம் பொன்.

டெஸ்ட் போட்டியோ, ஒருநாள் போட்டியோ, டி20 போட்டியோ எதுவாக இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக பொறுப்புடன் ஆடி அணியை வெற்றியடைச் செய்வதில் தீராத  தாகம் கொண்டவர். பேட்ஸ்மேனாக கலக்கிக் கொண்டிருக்கும் அதே சமயம் கேப்டனாகவும் எக்கச்சக்க சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். 28 வயதில் கோஹ்லி கிரிக்கெட்டில் படைத்திருக்கும் சாதனைகள் மிரட்டல் ரகம். பாண்டிங்க்கு பிறகு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய வீரர் என்ற பெருமை கோஹ்லிக்கு கிடைத்திருக்கிறது. 

நீ கலக்கு தல! 

- பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்