நடராஜன் எதிர்ப்பும்... ஆதரவும்... அ.தி.மு.க.வில் தொடர்கிறது குழப்பம்! | Support and Opposition to Natarajan in AIADMK

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (27/01/2017)

கடைசி தொடர்பு:13:10 (27/01/2017)

நடராஜன் எதிர்ப்பும்... ஆதரவும்... அ.தி.மு.க.வில் தொடர்கிறது குழப்பம்!

ரம்பத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டு விட்டார். கிட்டத்தட்ட அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் அவரை ஏற்று செயல்படவும் துவங்கி விட்டார்கள். ஆனால் சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட உறவினர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான குரல்கள் தற்போது எழத்துவங்கி இருப்பது அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நடராஜன், திவாகரன் ஆகியோர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வெளிப்படையாகவே பேச பரபரக்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

இந்த விவாதத்தையும், சர்ச்சையையும் துவக்கி வைத்தது தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில் அ.தி.மு.க பொதுச்செயலாளரின் கணவர் ம.நடராசன் ஆற்றிய உரைதான். 'ஜெயலலிதாவை பாதுகாத்ததே நாங்கள்தான், நாங்கள் இல்லாமல் ஜெயலலிதா இல்லை.  நாங்கள் குடும்ப ஆட்சி செய்வோம்'  என்றெல்லாம், நடராஜனும், திவாகரனும் பொங்கல் விழாவில் பொங்கித் தீர்க்க...  நடராஜனுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஏற்கெனவே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திடீரென்று கடந்த 16-ம்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து, “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவையும் இருட்டடிப்பு செய்யப் பார்க்கிறார்கள். தன்னுடய கணவர் ஆரம்பித்த கட்சி அழிந்துவிடக்கூடாது என்பதற்காக தன் கையெழுத்திட்டு கொடுத்தது ஜானகி அம்மையார் அவர்கள். ஆனால், வரலாற்று உண்மையை மறைத்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிந்திய குருதியை, லட்சக்கணக்கான தொண்டர்களில் உழைப்பை நடராசனும் திவாகரனும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். மற்ற கட்சிகளில் இருப்பதைப்போல அதிகார மையம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டுமென தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்படவேண்டும். குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டுமென்று சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்தடுத்த நாட்களிலும் நடராசன் ஓயவில்லை. தங்கள் சொன்ன கருத்தை வலுப்படுத்தியே பேசிவந்தார். உச்சகட்டமாக 'திவாகரன் ஏ.கே. 47 வைத்துக்கொண்டு ஜெயலலிதாவைப் பாதுகாத்தார்' என்று சொல்ல... மீண்டும் ஆவேசமடைந்தார் கே.பி.முனுசாமி.

“16-ம் தேதி  தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில், அதிமுக பற்றியும் ஜெயலலிதா பற்றியும் என்னைப் பற்றியும் நடராசன் பேசியுள்ளார். அதில் சில கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.  நாங்களும் எங்கள் குடும்பமும்தான் ஜெயலலிதாவை 33 ஆண்டுகளாக தோளில் சுமந்தோம் என நடராசன் கூறியுள்ளார். நடராசனையும் அவர் குடும்பத்தாரையும் கட்சியிலிருந்தே நீக்கியதோடு மட்டுமல்லாமல் அவருடனும் அவர் குடும்பத்தாருடனும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாராவது தொடர்பு வைத்துக்கொண்டால் அவர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்படுவார்கள் என்று அறிவித்தார் ஜெயலலிதா. அப்படிப்பட்டவர் இன்றைக்கு நான்தான் எல்லாம் என்று பேசுகிறார். ஜெயலலிதாவை காத்தோம் என்று கதை சொல்கிறார். போயஸ்கார்டன் இல்லத்தை என் வீடு என்கிறார். இது என்ன உங்க பாட்டன் சாம்பாதித்த சொத்தா.? சொந்தம் கொண்டாடுவதற்கு இது எங்கள் சொத்து. ஒன்றரை கோடி தொண்டர்களின் சொத்து.

திவாகரன் ஏகே47 வைத்துக்கொண்டு ஜெயலலிதாவை பாதுகாத்தார் என்றும் நடராசன் பேசியிருக்கிறார். ஏ.கே.47ஐ பற்றி தெரிந்துதான் நடராசன் பேசுகிறாரா.? எஸ்.பிக்கு கூட ஏ.கே 47 வைத்திருக்க அனுமதி இல்லை. அது ஒரு தடை செய்யப்பட்ட ஆயுதம்  இஸட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே அதை வைத்திருக்க அனுமதி உண்டு. இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. அப்படி திவாகரன் ஏ.கே47 வைத்துக்கொண்டு எந்நேரமும் ஜெயலலிதாவை பாதுகாத்தார் என்றால் அவருக்கு ஏ.கே47 எப்படி வந்தது? என்பதை நடராசன் விளக்க வேண்டும். நாங்கள் குடும்ப ஆட்சி செய்வோம் என்று வெளிப்படையாக மேடையில் அறிவிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி உறவுகளை அனுமதித்தது கிடையாது.

இப்போதைய பொதுச்செயலாளார் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது தர்மபுரி மாவட்டச் செயலாளராக எம்.ஜி.சேகர் இருந்த காலக்கட்டத்தில். நக்சல் ஆதரவாளர்  என்று சொல்லி சேகர் என்னை  ஓரம்கட்டுவதாக நான் நடராசனை சந்தித்து முறையிட்டதாகவும். நடராசன் எனக்கு சசிகலாவை அறிமுகம் செய்து வைத்ததாகவும் நான் சசிகலாவின் காலில் விழுந்ததாகவும் அதற்கு பிறகுதான் எனக்கு பதவி கிடைத்ததாகவும் அபாண்டமான பொய்யை சொல்லியிருக்கிறார் நடராசன். ஜெ, ஜா அணியாக பிரிந்தபோது நானும் சேகரும்தான் ஜெயலலிதாவுக்கு தமிழகத்திலேயே முதல் போஸ்டரை ஒட்டினோம். அவரும் நானும் நல்ல நண்பர் நடராசன் சொல்வது பொய்," என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் எம்.பியும், முன்னாள் தர்மபுரி அ.தி.மு.க மாவட்டக் கழக செயலாளருமான எம்.ஜி.சேகர் இன்று  தர்மபுரியில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில்,  “1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்கள் அ.தி.மு.கவை தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்தவரே அண்ணன் நடராசன்தான். ஜெயலலிதாவின் முதல் மாநாடான கடலூர் மாநாடு வெற்றி பெறுவதற்கு நடராசனும் சின்னம்மா அவர்களும்தான் காரணம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக  ஆலோசனை சொன்னதே நடராசன் தான். சேடப்பட்டி முத்தனையாவின் தலைமையில் ஒரு டீமையும் என் தலைமையில் ஒரு டீமையும் தனித்தனி விமானத்தில் அழைத்துச் சென்று தேர்தல் ஆணையத்தின் முன் நிறுத்தி ஜெ.அணியின் பெரும்பான்மையை காட்டி, புகழ் பெற்ற வழக்கறிஞர் கபில் சிபில் மூலம் வழக்கை நடத்தியது நடராசன்தான். 

1991-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிப்பதற்கு ஆலோசகராக இருந்து தேர்தல் அறிக்கை தயார் செய்தது நடராசன்தான். ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தியதில் நடராசனின் பங்கு மகத்தானது. கே.பி.முனுசாமி நகரச்செயலாளராக இருந்தபோது  கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக அப்போதைய நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நான்தான் நடராசனிடம் கே.பி.முனுசாமியை அறிமுகம் செய்து வைத்தேன். சின்னம்மா காலில் விழுந்துதான் மாவட்ட அளவிலான பல பதவிகளைப் பெற்றார். இப்போது ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதை போல நன்றிகெட்டு பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நடராசன் அ.தி.மு.கவுக்கு ஆற்றிய பணிகள் எனக்குத் தெரியும். கே.பி.முனுசாமி நடராசனை விமர்சித்து பேசுவதை,  அடிப்படை உறுப்பினர் பல பொறுபுகளை வகித்தவன் என்கிற முறையில் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அதனால்தான் இதை எதிர்க்கிறேன் என்றவரிடம், 'அப்படியென்றால் ஜெயலலிதா நடராசனை கட்சியிலிருந்து வெளியேற்றும்போது நடராசனுக்கு ஆதரவாக பேசவில்லை..?' என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார்.

- எம்.புண்ணியமூர்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்