வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (28/01/2017)

கடைசி தொடர்பு:18:53 (29/01/2017)

இரண்டாவது அனுதாப அலை: சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 23

சசிகலா, ஜெயலலிதா

ஜானகியின் இறக்கமும்... ஜெயலலிதாவின் ஏற்றமும்... 

ஜானகிஜானகி முதலமைச்சர் ஆகிவிட்டார்; அந்த அமைச்சரவையின் ஆட்டத்தைக் குலைக்க வேண்டும்; ஜானகி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; அதற்குப்பிறகு வரும் தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்; அதுவரை பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், நாவலர் நெடுஞ்செழியனை ஜெயலலிதாவின் பக்கமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அடுக்கடுக்காக பல திட்டங்களுக்கு  ‘ஸ்கெட்’ போட்டு வைத்திருந்தார் நடராஜன். இது தெரியாமலே, ஜெயலலிதாவுக்காக நாவலர் நெடுஞ்செழியன், ராஜாராம், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் ஓடி ஓடி உழைத்தனர்; நடராஜனின் திட்டங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக்கொண்டே இருந்தது; போயஸ் கேபினட்டின் நடவடிக்கைகள் புரியாமல், ஜானகியின் ‘கிச்சன் கேபினட்’ தப்பும் தவறுமாகவே அடுத்தடுத்த அடிகளை வைத்தது; ஒவ்வொரு அடியும் அவர்களை அரசியல் ஏணியில் இருந்து கீழே இறக்கிறது; ஜெயலலிதாவை மேலே ஏற்றியது. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, அ.தி.மு.க அலுவலகத்தின் முன் ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டமும் அந்நிகழ்வை ஒட்டி ஜானகி எடுத்த நடவடிக்கைகளும் அரசியல் வரலாற்றில் பதிவாகி உள்ளன.    

போர்க்களமான போயஸ் கார்டன்!

ஜெயலலிதாஅவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த ஜெயலலிதாவும், அ.தி.மு.க தலைவர்களும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அங்கிருந்து சீறிக் கிளம்பிய அந்த வேன் நீதிமன்றத்துக்கோ, காவல் நிலையத்துக்கோ, வழக்கமாக இதுபோன்ற அரசியல்கட்சிகளின் போராட்டக்காரர்களை அடைத்து வைக்கும் திருமண மண்டபத்துக்கோ போகவில்லை. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கே போனது. போயஸ் கார்டன் சந்துக்குள்  போலீஸ் வேன் திரும்பத் தொடங்கியதும், வேனுக்குள் இருந்த ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட ஆரம்பித்தனர். வேன் ஜெயலலிதா வீட்டு முன் நின்றது. ‘அனைவரும் வேனில் இருந்து இறங்குங்கள்’ என்று போலீஸ் உத்தரவிட்டது. வேனுக்குள் இருந்தவர்கள் இறங்க மறுத்தனர். “நாங்கள் உங்களைக் கைது செய்யவில்லை; உங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து இங்கே சேர்த்துள்ளோம்... அவ்வளவுதான்" என்றது போலீஸ். “எங்களுக்கு உங்களின்  பாதுகாப்புத் தேவையில்லை; எங்களை மறுபடியும் தலைமைக்கழகத்தின் முன் இறக்குங்கள்; நாங்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்துகொள்வோம்” என்றார் ஜெயலலிதா. அதற்கு போலீஸ் மறுப்புத் தெரிவித்தது. ஜெயலலிதா சொன்னதை போலீஸ் கேட்கவில்லை; போலீஸ் சொன்னதை ஜெயலலிதா கேட்கவில்லை. இந்தநிலையில், போயஸ் கார்டனில் தொண்டர்கள் திரளத் தொடங்கினர். தெருவின் எல்லா சந்திப்புக்களையும் ‘லாக்' செய்தது போலீஸ். அந்தத் தெருவில் வசிப்பவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தொண்டர்கள் ஆவேசம் அதிகமானது! வழக்கமாக அமைதியாக இருக்கும் அந்தச் சாலை கட்சித் தொண்டர்களின் முழக்கங்களால் அதிர்ந்தது; அங்கு வசிப்பவர்கள் நடுங்கிப் போனார்கள். அதே நேரத்தில் மூன்று பல்லவன் பேருந்துகளில் ஏற்றப்பட்ட அ.தி.மு.க தொண்டர்களை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இறக்கிவிட்டது போலீஸ். அதைத் தெரிந்து கொண்ட நடராஜன், உடனடியாக அந்தக் கூட்டத்தை போயஸ் கார்டனுக்கு திருப்பிவிடச் சொன்னார். கிடைத்த ஆட்டோக்களையும் லாரிகளையும் பிடித்து அந்தக் கூட்டமும் போயஸ் கார்டனில் வந்து குவிந்தது!

இரண்டாவது அனுதாப அலை!

ஒருபுறம் ‘வேனில் இருந்து இறங்க முடியாது' என்று சொல்லும் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள்... இன்னொரு புறம் “அவர்களை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரக் கூடாது” என்று சொல்லும் உயர் அதிகாரிகள்! இவர்களுக்கிடையே சிக்கித் தவித்தனர் இந்த விவகாரத்தைக் கையாண்ட போலீஸ் அதிகாரிகள்!

ஜெயலலிதா

மூன்று மணி நேரம் நடந்த இந்த நாடகத்தின் ‘க்ளைமாக்ஸ்’,  “உங்களைக் கைது செய்திருக்கிறோம்... இப்போது ஜாமீனில் விடுகிறோம்” என்றது போலீஸ்! “நாங்கள் ஜாமீனே கேட்கவில்லை; நாங்களே கேட்காமல், நீங்களாக எப்படி ஜாமீன் கொடுக்க முடியும்? நீங்கள் கொடுக்கும் ஜாமீன் எங்களுக்குத் தேவையில்லை” என்றது ஜெயலலிதா கோஷ்டி! மறுபடியும் மேலதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீஸ், ‘கைது செய்த உங்களை விடுதலை செய்கிறோம்' என்று அறிவித்தது. அன்று ஜெயலலிதா மீது விழந்த தடியடியும், தலைவர்கள் மீது நடந்த தாக்குதலும் ஜெயலலிதா ஆதரவு கோஷ்டி மீது ஒரு அனுதாபத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடந்தபோது, ராணுவ டிரக்கில் இருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டபோது, அவருக்கு சாதகமாக தமிழக மக்கள் மனதில் முதல் அனுதாப அலை அடித்தது. ஆர்ப்பட்டத்தில் ஜெயலலிதா மீது விழுந்த அடி, தமிழக மக்கள் மனதில் இரண்டாவது அனுதாப அலையை உருவாக்கி அதில் ஜெயலலிதாவை நனைய வைத்தது. ஆனால், இந்தக் காட்சிகளும் அது அரங்கேற்றப்பட்ட ஆர்ப்பாட்ட நாடகங்களும் நடராஜன் நடத்திய பல ஒத்திகைகளால்தான் வெற்றிகரமாக ஓடியது. 

ஆர்ப்பாட்டத்துக்கான திட்டம் உருவான கதை! 

ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டம் 1988 ஜனவரி 13-ம் தேதி நடந்தது. ஆனால், அதற்கு முன்பு இப்படிப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஏதும் திட்டமிடப்படவில்லை. மாறாக, ஜனவரி 11-ம் தேதி. ஜெயலலிதா, மதுரையிலிருந்து  நான்கு நாள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தைத் துவக்குவார்' என்று வேறோரு நிகழ்ச்சிதான் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்காக 10-ம் தேதி இரவு, பாண்டியன் எக்ஸ்பிரஸில் பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜாராம், கோவை செழியன் ஆகியோருக்கு டிக்கெட் போடப்பட்டு தயாராக இருந்தது. திருநாவுக்கரசு மட்டும் 10-ம் தேதி காலை விமானத்தில் மதுரைக்குப் புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன. ஆனால், ஒன்பதாம் தேதி காலையில் இந்தத் திட்டங்கள் எல்லாம் தலைகீழாய் மாறுவதற்கான அறிகுறிகள் போயஸ் கார்டன் வீட்டில் தென்பட்டன. அன்று காலையில் இருந்தே ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை. ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை' என்று அனைவருக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்களுக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை. மதுரையில் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள், பெரிய ஹோட்டல்களில் ரூம்களைத் ‘புக்’ செய்துவிட்டுக்  காத்திருந்தனர். மதுரை கூட்டத்துக்குப் பிரம்மாண்ட போஸ்டர்களும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இப்படி எல்லாம் தயார்நிலையில் இருந்தபோது, திடீரென்று ஜனவரி 10-ம் தேதி காலையில் ‘ஜெயலலிதா கூட்டம் ரத்து' என்று பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தார். அதற்குக் காரணம், அந்த நேரம் முதலமைச்சர் ஜானகி டெல்லி சென்றிருந்தார். பிரதமர் ராஜிவ் காந்தியைச் சந்தித்து, தன் ஆட்சிக்கு ஆதரவு கேட்பதற்காகப் போய் இருந்தார்.

அ.தி.மு.கவோடு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க இரண்டாக உடைந்து நிற்பதை விரும்பவில்லை. அதைக் கணித்து, ஜானகி அம்மாளிடம் ஒரு சமாதானத் திட்டத்தை ராஜீவ்காந்தி தரப்பு முன்வைத்தது. அதற்கு ஜானகி என்ன சொன்னாரோ தெரியவில்லை... ஆனால், ஜெயலலிதாவுக்கு கூட்டம் செயற்குழு கூட்டம் நடத்தும் நாளில், தன்னுடைய ஆதரவாளர்கள் நடத்தத் திட்டமிட்டு இருந்த செயற்குழு கூட்டத்தை ரத்து செய்தார். அதன்பிறகு, ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டவர்கள்,  ‘டெல்லி சமாதானத்தை விரும்புகிறது' என்ற தகவல் கொடுத்தனர். அத்துடன் ஒரு சமாதானத் திட்டத்தையும் முன்வைத்தனர். அதில், “ஜானகி முதலமைச்சர்; ஜெயலலிதா பொதுச் செயலாளர்; இருக்கின்ற அமைச்சரவை அப்படியே நீடிக்கும்” என்று இருந்தது. இந்தத் தகவல் வெளியில் கசிந்ததும், ‘டெல்லியின் உத்தரவினால்தான், ஜெயலலிதா மதுரைக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்' என்று வதந்திகள் பரவின. ஜெயலலிதாவை நம்பிப் போன முன்னாள் அமைச்சர்கள் குழம்பிப் போனார்கள். ‘ஜெயலலிதாவை நம்பியது தவறோ!' என்றுகூட அவர்களுக்குப் பயம் உண்டானது. ‘முதல் கோணல்... முற்றிலும் கோணல்' என்ற விரக்தி பேச்சுக்கள் தலைதூக்கின. ஆனால், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் கேபினட் தெளிவாக யோசித்து திட்டமிட்டது. ‘டெல்லியின் சமாதானம் நமக்கு உதவாது; ஜானகி அரசுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை; அவர்களோடு இணைந்து இரண்டாண்டுகள் ஆட்சி நடந்தால், பிறகு நாம் மக்களைச் சந்திக்கவே முடியாது; மேலும் காங்கிரஸ் சொல்லும் இந்த சமாதானத்திட்டம் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.-வை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்’ என்று நடராஜன் ஆணித்தரமாக வாதிட்டார். அப்படியானால் என்ன செய்வது என்று யோசித்தபோது நடராஜனே அதற்கும் ஒரு திட்டம் வைத்திருந்தார். “அ.தி.மு.க-வை அழிக்க காங்கிரஸ் போட்ட சமாதானத் திட்டத்தை அடித்து நொறுக்க வேண்டும்; தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும்; மக்களின் கவனத்தை நம்பக்கம் திருப்ப வேண்டும்; அதற்கு உடனடியாக செயற்குழுவைக் கூட்ட வேண்டும்” என்றார். அதற்கு எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.  ‘‘கட்சிக் கட்டடத்தில் நுழைந்தே தீருவது, அதற்குத் தடை விதித்தால், அதையும் மீறுவது. சிறை சென்றாலும் பரவாயில்லை. அதுதான் நமக்கு அனுதாபத்தைப் பெற்றுத் தரும்' என்று முடிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதா கோஷ்டி சாதுரியமாக விரித்த இந்த வலையில், ஜானகி அரசு வசமாகச் சிக்கியது. நடராஜன் எதிர்பார்த்தபடி, ஜெயலலிதாவும் அவரது கோஷ்டியும் தமிழக மக்களின் அனுதாபத்தைப் பெற்றது. 

கதை தொடரும்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளீக் செய்யவும்

ஜோ.ஸ்டாலின்
படங்கள் - சு.குமரேசன்.

 


டிரெண்டிங் @ விகடன்