வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (28/01/2017)

கடைசி தொடர்பு:13:35 (28/01/2017)

கருணாநிதியின் உடல்நிலையும்... 'கிளாடியேட்டர்' படக்காட்சியும்... என்ன சொல்ல வருகிறார் வைகோ?

வைகோ

திருச்சி : "கலைஞர் நினைவு இருந்தும், நினைவு இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்" என நிகழ்ச்சியொன்றில் பேசிய வைகோ, தொடர்ச்சியாக கிளாடியேட்டர் படத்தின் காட்சியைச் சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இளைஞர்களை திராவிட பற்றுள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், 'திராவிட இளைஞர் விழிப்புணர்வு பாசறை' எனும் தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது ம.தி.மு.க. இதன் தொடக்க நிகழ்வு திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் வைகோ பங்கேற்று பேசியதாவது.

"தமிழக அரசியலில் தெளிவற்ற நிலை நிலவுகிறது. ஜெயலலிதா மறைந்துவிட்டார். கலைஞர் நினைவு இருந்தும், நினைவு இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கிளாடியேட்டர் திரைப்படத்தில் தன்னுடைய தந்தையிடம் மகன், தன்னை அரசனாக்கிட கோரிக்கை வைப்பார். அப்போது தந்தை, 'உனக்கு தலைமை ஏற்கும் பண்புகள் இல்லை' என மறுத்து விடுவார். அதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்யவும் துணிவார். அதற்காக இதை இதோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம்.

வைகோ

தி.மு.க.வில் தலைவர் பதவி இல்லை என அண்ணா பெரியாரிடம் சொன்னார். ஆனால் அண்ணா மறைந்த பிறகு அதை உடைத்தவர் கருணாநிதி, அண்ணன் கலைஞர், ஆட்சியைக் கைப்பிடிக்க எதையும் செய்ய துணிந்தவர். அந்தத் திறமை, செயல் தலைவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

1965-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராடினார்கள். அதற்கு வித்திட்டது தி.மு.க.. அதுபோன்ற கொந்தளிப்பு இப்போதும் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான மாணவர் போராட்டத்தில் அரசியல் கட்சி நுழையக் கூடாது  எனக் கூறினார்கள். அதை நான் முதலில் வரவேற்றேன். ஏனெனில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாணவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. மற்றக்கட்சிகளின் நிலை சொல்லத் தேவையில்லை. நம்மை தவறாக சித்தரிக்கிறார்கள். ஏனெனில் நம்மிடம் திராவிட கொள்கை அடர்த்தி இருக்கிறது. அதனால் தான் ம.தி.மு.க.வை அதிகமாக விமர்சிக்கிறார்கள். தமிழ் தேசியவாதிகள் மீதும் நம்பிக்கை இல்லை.

இந்தப் போராட்டத்தை வைத்து அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை. இந்த இளைஞர்கள் உணர்வோடு போராட வர மாட்டார்களா என ஏங்கியவன் நான். லட்சக்கணக்கான மக்களால் கட்டிய திராவிடக்கோட்டை நொறுங்கி விடக்கூடாது. எந்தப் போராட்டமாக இருந்தாலும் தொடங்குவது சுலபம். அதை எங்கே நிறுத்துவது என்பதுதான் பிரச்னை. சரியான இடத்தில் நிறுத்தாவிட்டால் அனைத்தும். விழலுக்கு இறைத்த நீராகிவிடும். மாணவர் போராட்டத்தில் முதல் ஆறு நாட்கள் நன்றாகத்தான் போனது கடைசி நாள் உள்ளே தி.மு.க. புகுந்து கலவரத்துக்கு வித்திட்டது. அதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

வைகோ

நான் பிரதமரை சந்தித்த 20 நிமிடத்தில் 12 நிமிடம் ஜல்லிக்கட்டு பிரச்னை பற்றி விவாதித்தேன். இப்போது ஜல்லிக்கட்டு தடை நீங்கி இருக்கிறது. வரும் 31-ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தாலும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும். நடக்கும் ஜல்லிக்கட்டை காவல்துறை தடுக்கக்கூடாது.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது. எந்தப் பிரச்னையும் ஆராய்ந்து பதிலளிக்கும் திறமை ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கிறது. அதனால் தான் ஸ்டாலின் வெளியேறுகிறார். .

நமது இலக்கு தனி ஈழம்தான். இப்போது இலங்கையில் சீனா இடம்பிடிக்கிறது. பாகிஸ்தான், சீனாவும் வடக்கிருந்து வராமல், தெற்கே கூடாரம் அமைக்கிறார்கள். இந்தியாவிற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. விடுதலைப்புலிகள் வலுவாக இருந்தால் இந்த பிரச்னை இருந்திருக்காது. நம்காலத்தில் நாம் தான் ஈழம் அமைக்கப் பாடுபட வேண்டும். 29வருடங்களுக்கு முன்பு இதே “தை அமாவாசை” இரவில்தான் ஈழத்துக்கு புறப்பட்டேன். நான் மீண்டும் உயிரோடு வருவேன் என நினைக்கவில்லை. இயற்கை என்னை விரும்புகிறது. என்னுடைய குறிக்கோள் நிறைவேறுகிற வரை இறக்க மாட்டேன். இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவுவதை முதலில் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் இனத்தை அழித்து விட்டது. பிஜேபி இனத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். சுதந்திர தமிழ் தேசத்தைக் கண்டு விட்டுத் தான் என் கண்கள் மூடும்" என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்