“எம்.ஜி.ஆர். குருவிடம் அறை வாங்கியது ஏன்...?” நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 3

எம்.ஜி.ஆர்

ந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு சின்னப்பா, பி.ஜி. வெங்கடேசன், டி.எஸ் பாலையா, நன்னையா பாகவதர், கே.பி கேசவன், பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே. ராதா, கே.ஆர் ராமசாமி , காளி என்.ரத்தினம் என இந்த பட்டியல் ரொம்ப நீளம். இந்த பட்டியலில் ராம்சந்தருக்கும் ஓர் இடம் இப்போது.

பாய்ஸ் கம்பெனியில் சேர வெறும் கலை ஆர்வமும் நடிப்புத்திறனும் மட்டுமே தகுதிகளில்லை. கிட்டதட்ட அது ஓர் குருகுல வாசம்போல. நடிப்புப் பயிற்சிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை படிப்பு சொல்லித்தரப்படும். விடியற்காலை எழுந்ததும் தேகப்பயிற்சி, பின்னர் வீர திர விளையாட்டுப்பயிற்சி, நாடக வசனங்களை பாடம் செய்தல், பாடும் பயிற்சி, நடனப்பயிற்சி என  கிட்டதட்ட ஒருவனை நாடகத்துறையில் சகலகலா வல்லவனாக்கும் முயற்சிகள். அதேசமயம்  இத்தனை பயிற்சிக்குப்பின்னும் நாடகத்தில் சொதப்பினால் அதற்கு தண்டனைகளும் உண்டு.  அந்த தண்டனைக்கு பயந்தே நடிகர்கள் கண்ணும் கருத்துமாக பயிற்சிகளை செய்வார்கள். உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்க பாய்ஸ் கம்பெனி இட்ட இந்த உரம்தான் பின்னாளில் ராம்சந்தரை 'எம்.ஜி.ஆர்' ஆக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை. 

எம்.ஜி.ஆர்ராம்சந்தர் இப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ஒப்பந்த நடிகன். கம்பெனியில் சேர்ந்தபோது மாத சம்பளம் நாலணா. இப்போது 5 ரூபாய். சக்கரபாணிக்கும் அதேதான். பெருமிதமான இந்த அங்கீகாரத்துடன் தனது திறமையை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் புகழடையவேண்டும் என்ற எண்ணம் ராம்சந்தருக்கு தீவிரமானது. அந்நாளில் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு குருவாக இருந்தவர் எம்.கந்தசாமி முதலியார். இவர் தமிழகத்தில் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். 

நாடகங்கள் குறித்த முக்கியத்துவம், நடிகர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை ராம்சந்தருக்கு உணர்த்தியவர் எம்.கே என்றால், ஒரு நடிகன் கதாபாத்திரத்தில் சோபிக்க என்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை ராம்சந்தருக்கு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஆதாரமானவர்கள் இவர்கள் இருவரும். உதாரணமாக இவர்களுடனான ராம்சந்தரின் ஒரு அனுபவத்தை சொல்லலாம். 

ராம்சந்தர் அப்போது ராஜேந்திரன் என்ற நாடகத்தில் நடித்துவந்தார். ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெரும் பணக்கார வாலிபன் வேடம் அவருக்கு தரப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் மகனின் ஊதாரித்தனத்தால் அவனுக்கு தன் கணக்கில் வங்கியில் பணம் தர வேண்டாம் என அவரது தந்தை வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதுதெரியாமல் சென்று 'செக்' கிற்கு பணம் கேட்க வங்கி மறுக்கிறது. கோபமடைந்த வாலிபன் தன் செருப்பை கழற்றி வங்கி அதிகாரிகளை அடிப்பதுபோல்  ஓங்கியபடி வெறியாட்டம் போடுகிறான். நாடகத்திற்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி.என். ரத்தினம். 

முதல்நாள்  நாடக அரங்கேற்றம் நடந்து முடிந்து ஓய்வாக வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ராம்சந்தர். அப்போது வேகமாக அவரை நோக்கி முன்னேறி வந்த கந்தசாமி முதலியார் ராம்சந்தரின் முகத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்துபோயினர் அங்கிருந்தவர்கள். கந்தசாமி முதலியார் நடிப்பு விஷயங்களில் கொஞ்சம் முரட்டுமனிதர். அதனால் அவரிடம் சென்று ராம்சந்தரை அறைந்ததற்கான காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை. எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் வாத்தியார் அடித்தார் என கன்னத்தை பிடித்தபடி நின்றான் ராம்சந்தர். தந்தை என்பதால் எம்.கே.ராதா மட்டும் துணிந்துகேட்டார்.  எதற்காக அவனை அடித்தீர்கள் நன்றாகத்தானே நடித்தான்...?

“முட்டாள்தனமான நடிப்பு...எந்த பணக்காரனாவது பொது இடத்தில் இப்படி செருப்பை கழற்றி அநாகரீகமாக நடந்துகொள்வானா...ஏற்ற பாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டாமா... இப்படி நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் என்னையும் நம் நாடக குழுவையும்தானே தவறாக பேசுவார்கள். ரத்தினம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்தான் இவனுக்கு! ” என்று பொரிந்து தள்ளினார் கந்தசாமி முதலியார். ராம்சந்தருக்கு எந்த கோபமும் எழவில்லை. காரணம் தந்தையை இழந்து தாயை பிரிந்து வறுமைக்காக கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு எல்லாமுமாக இருந்து இதுநாள் வரை வழிநடத்தி வருபவர் எம்.கே முதலியார் என்பதால், அவர்   எதை செய்தாலும் அது தன் வளர்ச்சிக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்ததே. நல்ல படிப்பினையாக அந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டான் ராம்சந்தர்.

எம்.கே ராதா

அதேசமயம் தன்னை வாத்தியார் அடித்ததை யாரும் தட்டிக்கேட்க துணிவில்லாதபோது தைரியமாக தனக்காக தன் தந்தையையே எதிர்த்து கேள்வி கேட்ட எம்.கே.ராதாவின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். தன் சொந்த சகோதரர் சக்கரபாணிக்கு இணையான பாசத்துடன் இறுதிவரை அவரையும் தன் சொந்த சகோதரர் போன்றே மதித்து   பாசத்துடன் பழகினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு முன்னரே சந்திரலேகா, அபுர்வ சகோதரர்கள் பாசவலை போன்ற படங்களில் நடித்து பின்னாளில் புகழ்பெற்றவர் எம்.கே.ராதா. திரையுலகில்  புகழடைந்ததற்கு பின், எம்..ஜி.ஆர் பொது இடங்களில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கியது அரிதான சந்தர்ப்பங்களில்தான். அணணா கூட இடம்பெறாத இந்த பட்டியலில் எம்.கே ராதாவும், சாந்தாராமும் இடம்பெற்றிருந்தனர். தன் வாழ்நாளில் முக்கியமான எந்த நிகழ்வுகளுக்கும் எம்.கே.ராதாவை தேடிச்சென்று ஆசிபெறுவதை இறுதிவரை கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். எம்.கே.ராதாவின் மீது அத்தனை மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

இனி நடிப்பில் சோடைபோகக்கூடாது. வாத்தியாரிடம் அடி வாங்கக்கூடாது என அன்றே உறுதி எடுத்துக்கொண்டார் ராம்சந்தர். தொடர்ந்து மனோகரா உள்ளிட்ட பல நல்ல நாடகங்கள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில் பி.யு சின்னப்பாவை போல் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற ராம்சந்தரின் ஆசை ஒருநாள் கைக்கூடிவந்தது. 

எம்.ஜி.சக்கரபாணி

அப்போது  பாய்ஸ் கம்பெனி 'தசாவதாரம்' என்ற நாடகத்தை நடத்திவந்தது. சென்னையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்த வெற்றிகரமான நாடகம். பின்னர் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. இதில் பரதனாக பி.யு சின்னப்பா நடித்தார். ராம்சந்தருக்கு சத்ருகன் வேடம். பெயருக்குத்தான் வேடம்; அதில் நடிப்புத்திறமையை காட்டும் வாய்ப்பு துளியும் இல்லை. வேண்டா விருப்பமாகவே நடித்துவந்தார் ராம்சந்தர். ஒருநாள் புதுக்கோட்டையில் இருந்து பாலக்காட்டுக்கு பறந்து வந்தது அந்த 'அதிர்ச்சி' தந்தி. தந்தி சொன்ன சேதி என்ன...?

இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...- எஸ் கிருபாகரன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!