வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (01/02/2017)

கடைசி தொடர்பு:13:03 (01/02/2017)

கப்பலில் இருந்த மொத்த சரக்கு 55,000 டன்... கடலில் கொட்டியது எவ்வளவு? #ChennaiOilSpill

எண்ணெய் கசிவினால் உயிரிழந்த ஆமை

சென்னை கடற்கரையின் அழகையே சிதைத்துள்ளது, கடந்த சனிக்கிழமை நடந்த கப்பல் விபத்து. காமராஜர் துறைமுகத்தின் அருகே, இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதியதால், கப்பல்களில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடலின் பெரும்பாலான இடங்கள் கருமையாகக் காட்சியளிக்கின்றன. நண்டுகள், மீன்கள், ஆமைகள் எனப் பெரும்பாலான உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்க, கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது என நேற்று சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். ஆனால், அதைத்தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் செய்திகளோ, அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன. நேற்று, தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தன்னார்வலர்கள், 'இதுவரை எடுக்கப்பட்ட கழிவுகளின் அளவு  5 டன்களுக்கு மேல் இருக்கும்' என்றனர். ஆனால், தற்போது அவற்றின் அளவு 20 டன்களுக்கு மேல் இருக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள். இதுகுறித்த பணிகளில் மத்திய அரசின் இந்தியக் கடலோர காவல்படை ஈடுபட்டுவருகிறது.

கப்பல்களில் இருந்து கொட்டிய கழிவுகள்

இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய தமிழகக் கடலோர பாதுகாப்புப் படையின் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு, 'கடலில் கொட்டிய மொத்த எண்ணெயின் அளவு என்ன என்பது பற்றிய தகவல்கள் இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்தக் கப்பல்களில் இருந்த மொத்த சரக்குகளின் அளவு சுமார் 55,000 டன் இருக்கும். ஆனால், அவை அனைத்தும் கொட்டவில்லை. கப்பலின் ஒரு பகுதியில் இருந்து மட்டும்தான் எண்ணெய் கசிந்துள்ளது. குறைந்த அளவு மட்டுமே கசிந்த எண்ணெய்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அப்படியெனில், அதிக அளவு எண்ணெய் கசிந்திருந்தால் எந்தளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என சிந்தித்துப்பாருங்கள். 

பாதிக்கப்பட்ட கடற்கரை

காமராஜர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு சென்ற  M.T.BW மேப்பிள் என்ற கப்பல்தான் இடித்துள்ளது. M.T. டான் என்ற கப்பல்தான் இடிபட்டுள்ளது. மேப்பிள் கப்பலின் முன்பகுதியானது, டான் கப்பலின் ஸ்டார்போர்டு பகுதியில் இடித்துள்ளது. அப்போது டான் கப்பலில் இருந்த எண்ணெய் ஆனது கசிய துவங்கியுள்ளது. இது பெட்ரோல், டீசல் வகையை சேர்ந்த எண்ணெய் கிடையாது. தார் போல கெட்டியாக இருக்கும் ஃபர்னேஸ் ஆயில் ஆகும். பெட்ரோல் போல இருந்தால், அதை எளிதில் நீங்கிவிடும். ஆனால் இது ஃபர்னேஸ் ஆயில் என்பதால்தான் இவ்வளவு பிரச்னைகள். இந்த சுத்தகரிக்கும் பணிகள் முடிய இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும். இந்த பணிகள் அனைத்தையும் இந்திய கடலோர காவல் படைதான் மேற்கொள்ள வேண்டும். அவர்களிடம் அதற்கான உபகரணங்கள் இருக்கின்றன. 

எண்ணெய் கழிவுகள் சுத்தகரிக்கும் பணி

மேலும் படங்களுக்கு

இந்த விபத்து ஏற்படுத்திய கப்பல்களின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய அரசு விசாரணைக் குழு அமைத்து, இதற்கு காரணம் யார் என்பது குறித்து விசாரிப்பார்கள். அதன்பின்பு உரியவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
நீலாங்கரை முதல் ஆலம்பரை வரை மட்டும், நேற்றைய நிலவரப்படி இறந்த ஆமைகளின் எண்ணிக்கை 154 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி நீலாங்கரை - ஆலம்பரை இடையேயான 110 கி.மீ பரப்பளவில் மட்டும் இறந்த ஆமைகளின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. ஆமைகள், மீன்கள் போன்ற உயிரினங்கள் இறந்து மிதப்பதால் நம் பார்வைக்கு தெரிகின்றன. ஆனால் அவற்றை மட்டுமில்லாமல், நண்டுகள், நத்தைகள் மற்றும் சிறிய அளவிலான கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையுமே பதம் பார்த்திருக்கிறது இந்த விபத்து!

கடலில் இருந்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுடன் நீங்களும் இணையலாம் நண்பர்களே! அதுகுறித்த விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க!

- ஞா.சுதாகர்

படங்கள்: தி.குமரகுருபரன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்