மெரினா தாக்குதலும்... மீனவர்களை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியும்! #3MinsRead #Analysis #VikatanExclusive | Marina protest and Plan of Government to evacuate Fishermen...! #3MinsRead #Analysis #VikatanExclusive

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (02/02/2017)

கடைசி தொடர்பு:18:16 (07/02/2017)

மெரினா தாக்குதலும்... மீனவர்களை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியும்! #3MinsRead #Analysis #VikatanExclusive

நடுக்குப்பம் மெரினா

எம்.எஸ்.சுவாமிநாதன். இவருக்குப் பெரிதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்திய உழவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ரசாயனங்களையும், பூச்சிக்கொல்லியையும் வளர்ச்சியின் பெயரால் திணித்தவர்; பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய விவசாயிகள், தங்கள் அணுவில் சுமந்துவந்த மரபார்ந்த அறிவையும்... தங்கள் கைகளில் சுமந்திருந்த விதைகளையும் ஊடறுத்து, நவீனத்தின் பெயரால் அந்நிய விதைகளைத் திணித்தவர். சுனாமிக்குப் பின் அமைக்கப்பட்ட சுவாமிநாதன் குழு, இந்தியக் கடற்கரைகளை எப்படி மேலாண்மைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பான ஓர் அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 

இவரது பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, 2009-ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய இந்திய அரசு, ‘கடற்கரை மேலாண்மை’ என்னும் ஒரு திட்டத்துக்கான அறிவிக்கை வரைவை (Draft) வெளியிட்டது. 

அந்தத் திட்டத்தின் மையநோக்கம், மீனவர்களைக் கடற்கரையிலிருந்து வெளியேற்றுவது; கடற்கரைகளைப் பெருநிறுவனங்களிடம் தாரைவார்ப்பது; உப்பளங்களையும், மீனவர்கள் தங்கள் வலைகளைக் காயவைக்க, படகுகளை நிறுத்தவேண்டிய கடற்கரைகளையும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சொகுசு பங்களாக்களாலும், நட்சத்திர விடுதிகளாலும் ஜொலி ஜொலிக்கவைப்பது. அதாவது, மீனவப் பழங்குடிகளை, மண்ணின் மக்களைச் சொந்த மண்ணுக்கே அந்நியமாக்குவது.  

“கடல் நிறுவனங்களுக்குத்தான்... அவைகளுக்கு மட்டும்தான்!”

நடுக்குப்பம்

1991-ம் ஆண்டு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை வெளியிடப்பட்டது. உண்மையில், அந்த அறிவிக்கை மீனவர்கள் மீது நிரம்ப கரிசனமும், கடல் சார்ந்த சூழலியல் மீது அக்கறையும் கொண்டிருந்தது. அந்த அறிவிக்கை, மூன்று முக்கியக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தன. 

அவை, “தொழில் வளர்ச்சித் தேவைக்கும், இயற்கைவளப் பாதுகாப்புக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண வேண்டும். சில தொழிற் செயற்பாடுகள் கடற்கரைச் சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக் கூடியன. இவை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் அல்லது ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். கடற்கரைச் சூழலமைப்புப் பராமரிக்கப்பட்டால்தான் கோடிக்கணக்கான கடற்கரைச் சமூக மக்களின் பிழைப்பாதாரமும், சுற்றுச்சூழலும் பாதுக்காக்கப்படும். அதனால், அதனை முறையாகப் பாதுகாக்க வேண்டும்.”  

நேரடியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், கடலும்... கடல் சார்ந்த நெய்தல் நிலமும் மீனவப் பூர்வகுடிகளிடம் இருக்க வழிவகை செய்தது அந்த அறிவிக்கை. ஆனால், அந்த அறிவிக்கையை அரசுகள் எப்போதும் மதித்ததில்லை. அதுவும் குறிப்பாக நரசிம்ம ராவ் பிரதமராகப் பொறுப்பேற்றபின்... இந்தியச் சந்தை முழுவதுமாகத் திறந்துவிடப்பட்டபின், அந்த அறிவிக்கையை நீர்த்துப்போகச் செய்ய, சிதைக்க ஏறத்தாழ 19 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இறுதியில், அந்த அறிவிக்கையை மொத்தமாகக் கொல்லும் அளவுக்கு இருந்தது 2004-ல் கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் வரைவு. 

இந்தத் திட்டம் மீனவர்களையும் கருத்தில் கொள்ளவில்லை; கடற்கரைச் சூழலமைப்பையும் கண்டுகொள்ளவில்லை. ஆம், இந்த அறிவிக்கை நேரடியாகக் கடற்கரை முழுவதும் தொழிலகங்கள் கொண்டுவர வேண்டும் என்றது. 

‘கடற்கரை மேலாண் மண்டலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில், ‘தொழில் துறை வளர்ச்சிகள் வழிவகைச் செய்யப்படும் மற்றும் ஊக்கப்படுத்தப்படும்’ என்கிறது கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் வரைவு. அதாவது, ‘புதிதுபுதிதாக நிறுவனங்கள் முளைக்கக் கடற்கரைகள் தாரைவார்க்கப்படும்’ என்கிறது வரைவு. 

இந்த வரவு அறிவிக்கையை நேரடியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நெய்தல் நில மக்களுக்கானது அல்ல... நிறுவனங்களுக்கானது. அவைகளுக்கானது மட்டும்தான் என்கிறது இந்த வரைவு அறிவிக்கை. 

இந்த வரைவு அறிவிக்கை மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, 2008-ம் ஆண்டு கோரியபோது... மீனவக் குடிகள் கொதித்துப் போனார்கள். கடற்கரை எங்கும் பெரும் போராட்டங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். இதன் பயனாக அரசு, இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் பின்வாங்கியது. ஆனால், ஆட்சிகளும் காட்சிகளும் மாறியப் பின்னரும்... இந்தச் சட்டத்தின் உள்ளீடுகளை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். நிலத்திலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த அனைத்துத் தகிடுதத்தங்களையும் ஆட்சியாளர்கள் செய்வதுபோல, கடற்கரையிலிருந்து மீனவர்களைத் துரத்தி... கடலையும், கடற்கரையையும் கைப்பற்றி நிறுவனங்களுக்கு தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். 

இதன் பின்னணியில், மெரினா சம்பவத்தைப் கொஞ்சம் உங்களுக்குள் குறுக்கு விசாரணை செய்துபாருங்கள்...

“மெரினா கலவரமும்... எண்ணூர் எண்ணெய்க் கசிவும்!”

எண்ணூர்

உண்மையில், மாணவர்களையும் இளைஞர்களையும் மெரினாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் அரசின் நோக்கமாக அன்று இருந்திருக்குமாயின்... அவர்களுடன் ஒரு நீண்ட உரையாடலை நிகழ்த்திக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அப்புறப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அன்று நிகழ்ந்தது என்ன...? அரசு, மாணவர்கள் மீது ஒரு வன்முறையை நிகழ்த்திக் காட்டியது. சம்பந்தமேயில்லாமல் மீனவர்களைக் கடுமையாகத் தாக்கியது; அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தது. 

இந்த மீனவக் குடியிருப்புகள் முழுவதும் கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகள்... இந்த இடங்களைப் பணமாகப் பார்ப்பீர்களென்றால், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பகுதிகள்; அரசின் கொள்கைகளுடன் பொருத்திப் பார்த்தால், நிறுவனங்களுக்கான பகுதிகள். 

கடற்கரையிலிருந்து அதன் பூர்வகுடிகளை அரசு வெளியேற்ற வேண்டும் என்று துடிப்பதற்கும்... அன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதலையும், அவர்கள் வாழ்வாதார எரிப்பையும் ஒப்பிட்டுப்பார்த்தால்...  அரசின் நோக்கம் என்ன என்பதே சந்தேகமாக இருக்கிறது. மாணவர்களைப் போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமா அல்லது நிரந்தரமாக மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது நோக்கமா...?

குறிப்பாக, அதிகம் தாக்குதலுக்கு உள்ளான நடுக்குப்பம் பகுதிக்கு ரணமான இன்னொரு வரலாறும் உண்டு. ஆம், 80-களில், அரசு அந்த நிலத்தைக் கைப்பற்ற, அந்த மக்கள்மீது ஒரு மோசமான வன்முறையை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. அதை முறியடித்துத்தான் இன்று வசித்துவருகிறார்கள். மீண்டும் அரசு அந்த இடத்தைக் கைப்பற்ற இத்தகைய வன்முறையை அங்கு நிகழ்த்திக்காட்டி இருக்கிறது என்று ஏன் சந்தேகிக்கக் கூடாது...?

நடுக்குப்பத்தில் வீட்டுக்கொருவர் தாக்கப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ 10 கோடி மதிப்பிலான தளவாடங்கள், மீன் சந்தை எரிந்து சாம்பலாகி இருக்கிறது. அவர்களது மீன்வலைகள், படகுகள் எல்லாம் சேதமாகி இருக்கின்றன. இவர்கள் இதிலிருந்து மீண்டுவரவே பல மாதங்கள் ஆகும். அதுமட்டுமல்ல, இந்த மீனவர்கள் எல்லாம் ஆழ்கடல் மீன்பிடிப்பாளர்கள் இல்லை. கரைப் பக்காமாக மீன்பிடிப்பவர்கள்தான். எண்ணூரில் ஏற்பட்ட கடல் விபத்து கடற்கரை மீன்பிடிப்புப் பகுதிகள் முழுவதையும் மாசாக்கிவிட்டது. இன்னும் சில மாதங்களுக்கு அவர்களது வாழ்வாதாரம் கேள்விகுறித்தான்... இதையெல்லாம்  ஒன்றுடன் ஒன்று என கோர்வையாகப் பொருத்திப் பார்த்தால்... கடலை மீனவனுக்கு அந்நியமாக்க அரசு முயல்கிறது என ஏன் சந்திக்கக் கூடாது...?

பிழைகளைச் சந்தேகிப்பதில் எந்தப் பிழையும் இல்லை... நிச்சயம் சந்தேகத்தினால் மட்டும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். சந்தேகிப்போம். 

- மு. நியாஸ் அகமது
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்