“வங்கக் கடலை வாளியில் அள்ள முடியாது... அரசை நிர்பந்தியுங்கள்!” எண்ணூர் விபத்தும், நம் கடமையும்...! #3MinsRead

எண்ணூர்

ங்கக் கடலை வாளியால் அள்ளிக் கொண்டிருக்கிறது தமிழகம். இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன... யாருக்கும் காயமில்லை சாதரண விபத்துதான் என்று தொடங்கிய வழக்கமான சமாதானங்கள். இன்று, “கொஞ்சம் எண்ணெய் சிந்திவிட்டது. எல்லாம் சரியாக இன்னும் ஆறு மாதங்களாவது ஆகும்” என்ற அளவில் நிற்கிறது. சாதாரணமாக ஒரு கப்பல் ஆழ்க்கடலில்  மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றால், கப்பல் விபத்துக் குறித்து நம் அரசின் செயல்பாடுகள் மணிக்கு 4.5 கி.மீட்டர் வேகத்தில் கூட இல்லை. ஏதோ, கச்சத்தீவுக்கு அப்பால் கச்சா எண்ணெய் சிந்தியது போல மெளனியாக இருக்கிறது தமிழக அரசும், அதன் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும். பாவம், அப்பாவி தமிழன்தான் நடந்த விபரீதங்கள் புரியாமல் சமுக விரோதியென்ற பட்டத்தை ஏந்திக் கொண்டு வாளியுடன் கடலை அளந்துக் கொண்டிருக்கிறான்.  என்ன சொல்ல...? எப்போதும் மனதிலிருந்து சிந்திக்க பழகியவன் அவன். 

“பாதுகாப்பில்லை, சூழல் கேடு, வாழ்வாதார இழப்பு”

“கடலில் சிந்தியிருக்கிற எண்ணெய்யை வெறும் கைகளில் கையாள்வது உடனடியாக தீங்குவிளைவிக்காதென்றாலும்... நாட்கள் செல்லச் செல்ல தோல் நோய்கள் உட்பல சில நோய்கள் வர காரணமாக அமையும். உடல் பலகீனமானவர்கள் என்றால், மூச்சுத்திணறல் கூட வரலாம்” என்கிறார்கள் அறிவியலாளர்கள்.  இதை அரசுப் புரிந்துக் கொள்கிறதா இல்லை இவன் தானே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு எதிராகக் கோஷம் போட்டான். எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று வேண்டுமென்றே மெளனம் சாதிக்கிறதா என்று தெரியவில்லை.  

கடலில் இறங்கி அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவது மட்டும் ஆபத்தில்லை. அந்தக் கடற்கரை மண்ணிலும் எண்ணெய் படிமங்கள் படிந்திருக்கும். அதையும் முழுவதுமாகச் சுத்தப்படுத்த வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  இதில் கவனம் செலுத்த அரசுக்கு விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், அதே நேரம் தமிழக அரசு, உளவுத்துறையின் அனைத்துக் கரங்களையும் முடுக்கிவிட்டு, யாரை வீழ்த்த முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார யாகம் நடத்தினார் என்று மிக அக்கறையாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. 

இன்னொரு பக்கம்  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ,“கப்பல்கள் விபத்தால் உயிரிழப்பு ஏதும் இல்லை” என்கிறார். இவர்களுக்கெல்லாம்  பிரச்னையின் தீவிரம் புரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை?    உயிரிழப்பு மட்டும் இழப்பில்லை. கடல் சூழல் முழுவதுமாக சிதைந்து போனதும் இழப்புதான்  என்பதை எப்படி அவருக்குப் புரியவைப்பது?

எண்ணூர்

நேற்று காலை மீன்பிடிக்க எண்ணூர் பகுதியிலிருந்து படகை எடுத்த காந்தி, ஏறத்தாழ 7 நாட்டிகல் மைல் கடலில் பயணித்து... ஐந்து மணிநேரம் கடலில் வலையுடன் காத்திருந்து வெறும் மூன்று கிலோ மீனுடன் வீடு திரும்புகிறார். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்போல என்று தனக்குத் தெரிந்த கடலறிவிலிருந்து வெள்ளந்தியாகப் பேசுகிறார்.   இவருக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்புகளுக்கு யார் பொறுப்பு...?

 34,000 சதுர மீட்டர் பரப்பளவில் எண்ணூரிலிருந்து காசிமேடு வரை எண்ணெய் படிமம் பரவி  இருக்கிறது. இது என் கண்டு பிடிப்பல்ல. இது கடலோரக் காவல்படை அதிகாரி ராஜன் பர்கோத்ரா சொல்லிய கணக்கு.  இந்தளவுக்குப் பரவியுள்ள எண்ணெய் படிமங்களை  எத்தனை தசாப்தங்கள் ஆனாலும், நிச்சயம் வெறும் கரங்களால் வாளியை வைத்து அள்ள முடியாது.  அப்படியானால், இந்தப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாராம்?

ஆக, நம் அரசுகளிடம்  ஒரு விபத்து ஏற்பட்டால் அதைக் கையாளும் திறனுமில்லை, தொழில்நுட்பமும் இல்லை. குறைந்தப்பட்சம் அதை புரிந்துகொள்ளும் அறிவும் இல்லை. இப்படித்தான் , நம் அரசுகள் விபத்தைக் கையாளுமென்றால், கூடங்குளம், கல்ப்பாக்கம் அணு உலைகளில் நாளை விபத்து ஏற்பட்டால் அணுக்கதிர் வீச்சுகளை விசிறிவைத்து அரசு கையாளும் என்று ஒரு வாட்ஸ்அப் அங்கதம் உலாவுகிறதே அதை உண்மையென்று எடுத்துக் கொள்ளலாமா...?

எண்ணூர்

நீங்கள் செல்லாதீர்கள்... அரசை நிர்பந்தியுங்கள்...!

அறிவியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும், சூழலியலாளர்களும் சொல்வதில் எள்முனை அளவும் மிகையில்லை. அந்த எண்ணெய் படிமங்கள் ஆபத்து விளைவிக்கக்கூடியது. தோல் வியாதிகள் வரலாம். விபத்து நிகழ்ந்தால் நாம்தான் முன் நிற்கவேண்டும் என்கிற நம் இளைஞர்களின் வெள்ளை மனம் புரிகிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் நாம்தான் முன் நிற்போமென்றால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எதற்கு?  ஜல்லிகட்டுக்காக நாம் மெரினாவில் திரண்டோம். அது சரி ஆனால், இந்த முறை நாம் திரள வேண்டியது எண்ணூரில் அல்ல. நமக்கு வேறொரு கடமை இருக்கிறது.  அது அரசை நிர்பந்திப்பது. எங்கள் கடலை, தமிழர் கடலை சுத்தம் செய் நவீன தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்து. கடலை மாசாக்கிய அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடு. எண்ணூர் முதல் காசிமேடுவரை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கு என்று அரசுகளையும், ஆட்சியாளர்களையும் நிர்பந்திப்பதுதான் நம் கடமை. 

1500 பேர் மட்டுமே எண்ணெய்யை அப்புறப்படுத்துகிறார்கள். மெரினாவில் இருந்தவர்கள் எங்கே போனார்கள்? என்று கேட்கும் ராஜாக்களைப் புறந்தள்ளுவோம்.

அது நம் கடல்தான். அதை நாம்தான் பாதுகாக்கவேண்டும், சுத்தப்படுத்தவேண்டும். மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்தமுறை நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் மூலம் அதைச் செய்வோம். அதுதான் சரியும் கூட...!

- மு. நியாஸ் அகமது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!