“எங்களுக்கு கவுதமியிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லையே..?” பிரதமர் அலுவலகம்

கவுதமி

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதனை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் எழுதியிருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பரில் தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கே வரவே இல்லை என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாக, தற்போது சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவுதமி பிரதமருக்கு ஜெயலலிதாவின் மரணம் குறித்து கடிதம் எழுதியிருந்தார்.அந்த கடிதத்தில் "சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் திடீர் மரணத்தினால் துக்கத்தில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி. இந்திய அரசியலில் அவர் ஓர் உயர்ந்த ஆளுமை. பலதரப்பட்ட பெண்களுக்கும் பெரிய உந்துசக்தியாக இருந்தவர். அவரது தலைமையில் தமிழகம் பல துறைகளில் முன்னணிக்கு வந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

அப்படிப்பட்ட  பெண்மணியின் மறைவு சோகமானதாகவும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தது முதல் மரணம் அடைந்தது வரை பலவித சந்தேகங்களை எழுப்புகிறது. அவரது மரணத்தைச் சுற்றி பதிலளிக்கப்படாத கேள்விகள் நிறைய உள்ளன.ஜெயலலிதாவின் மரணத்தில் மறைந்துள்ள சந்தேகங்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்று எழுதியிருந்தார். இந்தக் கடிதம் குறித்து செய்தித் தாள்களும், ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன. சில ஊடகங்கள் கவுதமியின் நடவடிக்கையை பாராட்டியும் எழுதியிருந்தன.

 

இந்தச் சூழ்நிலையில் சென்னையைச் சேர்ந்த தீபக் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வழியாக நடிகை கவுதமி எழுதிய கடிதத்தின் நகல் கிடைக்குமா? என டிசம்பர் 12-ம் தேதி ஆன் லைன் வாயிலாக கேட்டுள்ளார். இதற்கு 27.1.2017 தேதியிட்டு ஆன்லைனில்  NO INFORMATION AVAILABLE ON RECORDS என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.இதனால் நடிகை கவுதமி அப்படி ஒரு கடிதமே அனுப்பவில்லை எனத்தெரிய வந்துள்ளது.

இது குறித்து தீபக்கிடம் பேசியபோது, "பிரபலமானவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்கிறார்களே உண்மையாக எழுதுகிறார்களா?அல்லது விளம்பரத்துக்காக எழுதுகிறார்களா ? என்று தெரிந்து கொள்ளவே கேட்டிருந்தேன். ஆனால் பிரதமர் அலுவலகமோ அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று கூறியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். மேலும் கவுதமியும் விளம்பரத்துக்காகத்தான் கடிதம் எழுதியுள்ளாரோ? என்று தோன்றுகிறது. பிரதமர் அலுவலகம் தவறான தகவல் கொடுக்க வாய்ப்பில்லை. கவுதமிதான் இதற்கு விளக்கம் தரவேண்டும்" என்று கூறினார்.

இது குறித்து கவுதமியை நாம் தொடர்பு கொண்டபோது போனை துண்டித்தார். மீண்டும் நாம் தொடர்பு  கொண்டும் குறுஞ்செய்தி அனுப்பியும் அவர் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.

- கே.புவனேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!