'எண்ணூர் விபத்தில், கசிந்த எண்ணெயின் இயல்புகள் இவைதான்!'

எண்ணூர்

'இரண்டு நாட்களில் அகற்றப்பட்டுவிடும்' என்று சொல்லியது அரசு. ஆனால், பத்து நாட்களைக் கடந்தும் தொடர்ந்து சென்னையின் கடலோரப் பகுதிகளில் வாளியில் எண்ணெயை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது. எண்ணூர் துறைமுகத்தில், கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எண்ணெயை அகற்றும் பணியில், கடலோரக் காவற்படையுடன் தன்னார்வலர்கள், மீனவர்கள் மற்றும் துப்புரவாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், தற்போது தமிழகத் தீயணைப்புத் துறையும் இப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 

கப்பலில் இருந்து கசிந்தது கச்சா எண்ணெய் என்றும் பெட்ரோலிய எண்ணெய் என்றும், கப்பலில் சரக்காக வந்த எண்ணெய் என்றும் பலவாறாகக் கூறப்பட்டன. ஆனால், ''கப்பலில் இருந்து கசிந்தது Heavy oil எனப்படும் கனரக எண்ணெய்.” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத துறைமுகப் பணியாளர் ஒருவர். 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கப்பல்களில் எரிபொருள் எண்ணெய் மாற்றப்படும். அதாவது, கப்பல்கள் நடுக்கடலில் இருக்கும்போது அவற்றை இயக்குவதற்கு கனரக எண்ணெய் மட்டுமே எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். மற்றபடி அவை துறைமுகத்தில் இருக்கும்போது மட்டும் டீசல் உபயோகிக்கப்படும்.

அந்த வகையில், கப்பல் விபத்துக்குள்ளான சமயத்திலும் இதே கனரக எண்ணெய் மட்டுமே கசிந்து உள்ளது.கப்பலின் சரக்கு மிக ஆழமான ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்பதால் அது எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இந்த கனரக எண்ணெய் க்ரீஸ் போன்று மிக அடர்த்தியானது. அதனால்தான் பம்ப் செய்து எண்ணெயை அகற்றும் முறையும் இயந்திரம் கொண்டு உறிஞ்சி எடுக்கும் முறையும் தோல்வி அடைந்தது. அதனால்தான் மனிதர்களைக் கொண்டே கழிவுகளை சுத்தப்படுத்தி வருகிறார்கள்'' என்றார் அந்த அதிகாரி.  

மேலும் அவர் கூறுகையில், ''கனரக எண்ணெய் கச்சா எண்ணெயைக் காட்டிலும் பாதிப்பு குறைவுதான் என்றாலும், இந்த வகை எண்ணெயினாலும் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு உண்டு. மேலும் இவற்றை வாளிகள் கொண்டு அள்ளவே கூடாது. எண்ணூரில் எண்ணெய் விபத்து ஏற்பட்ட அதே நாளில், மும்பையின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியிலும் எண்ணெய் விபத்து ஏற்பட்டது. ஆனால், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்களால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. நம்மால் அது இயலவில்லை என்பதற்கான காரணம் நம்மிடம் போதிய தொழில்நுட்ப வசதி இல்லை என்பது மட்டுமே. மும்பைக்கு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்திக் கொடுத்து பயிற்சி அளிக்க முடிந்த அதே அரசால் எங்களுக்கு அப்படியொரு  வசதியையும் பயிற்சியையும் ஏற்படுத்தித் தரமுடியவில்லை. சிதறிய எண்ணெயின் அளவு எவ்வளவாக இருந்தாலும் அந்தக் கழிவு அகற்றப்படும் வேகத்தின் அளவைப் பொறுத்தே சுற்றுச்சூழலுக்கு அது ஏற்படுத்தும் மாசு கணக்கிடப்படும். அந்த வகையில் பத்து நாட்களாக எண்ணெயை அகற்றிவருவது சுற்றுச்சூழலுக்கு சீர்கேடுதான்'' என்று ஆதங்கத்துடன் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

- ஐஷ்வர்யா 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!