ஏன் விலகினார் ஷீலா பாலகிருஷ்ணன்? பின்னணி!

ஷீலா பாலகிருஷ்ணன்

.தி.மு.க ஆட்சியில் தலைமைச் செயலாளர் எனும் அதிகார மையமாக செயல்பட்டவர் ராம மோகன ராவ். அவர் பதவியில் இருந்த போதே அவரது வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் நடந்த வருமான வரித்துறையின் சோதனை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இதையடுத்து அவரது மகனும் - கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். ராம மோகன ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் ஆய்வு நடத்திய போது வருமான வரித்துறையினருக்கு  பகீர் தகவல்கள் கிடைத்தன. கைப்பற்றப்பட்ட அந்த ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென்று பிப்ரவரி 3-ம் தேதி அன்று அவரது பணியில் இருந்து விலகிவிட்டார். விலகலுக்கான பின்னணி குறித்து விசாரித்தபோது, ''ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 'அம்மா உத்தரவு' என்று கூறி தமிழகத்திலும், டெல்லியிலும் நிறைய வேலைகளை செய்து முடித்துக்கொண்டார் ஷீலா. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு ரேட் வைத்து வசூல் வேட்டையும் நடத்தியுள்ளார். முதல்வர் அலுவலகத்தில் இருந்த முக்கிய அதிகாரிகளும் இவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். முறைதவறி வந்த பணத்தைக்கொண்டு தங்க, வைர நகைகள் மற்றும் தென் தமிழகத்தில் பினாமிகள் பெயரில் நிலங்கள் வாங்கிக் குவித்துள்ளாராம். இதுதவிர, பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இதையெல்லாம் ஒரு டீம் ரகசியமாக விசாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் அனுப்பி இருக்கிறது. அந்த புகார் பட்டியல் அப்படியே கார்டனுக்கும் தெரியவந்துள்ளது. அதையெல்லாம் பார்த்து போயஸ் கார்டன் வட்டாரம் அதிர்ந்துவிட்டதாம். எனவேதான் இந்த நடவடிக்கை’’ என்கிறார்கள். 

அரசு நிர்வாகத்தில், மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன் பதவிக்காலம் மார்ச் 31-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில்தான் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தலைமைச் செயலகத்தில் கொடுத்துள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இருந்த வெங்கடரமணன் மற்றும் இன்னொரு செயலாளரான ராமலிங்கம் ஆகியோரும் முதல்வர் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வெங்கடரமணன் 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவரது ஓய்வுக்குப் பிறகு முதலமைச்சரின் செயலாளராக 5 ஆண்டுகாலப் பணி வழங்கப்பட்டது. ராமலிங்கம் தற்போது சிட்டிங் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதால், முதலமைச்சரின் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ராம மோகன ராவ் ரெய்டு பின்னணியில்தான் இம்மூவரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இம்மூவர் மீது எந்நேரத்திலும் வருமான வரித்துறையினரின் ரெய்டு அல்லது வேறு விதமான  அதிரடி நடவடிக்கைகளோ பாயலாம் என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

இவர்கள் பினாமிகள் பெயரில், வாங்கிக் குவித்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சம்பந்தமான ஆவணங்கள்தான் தற்போது இவர்களுக்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!