தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராகிறார் சசிகலா .....!!

சசிகலா

மிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக விளங்கிய இரு திராவிட கட்சிகளிலும் தலைமை மாறிவிட்டது. அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31 -ம் தேதி பதவி ஏற்றார். அதன் பின்னர் விரைவில் முதலமைச்சராகவும் சசிகலா பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம். எல். ஏக்கள்  கூட்டம் நடைபெறும் என்று (4.2.2017) சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு இந்த கூட்டத்தில் எம். எல்.ஏ-க்களின் ஆதரவை கோருவார் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.அதில் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.பின்னர் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தனது முதல்வர் பதவியை  பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியானது.சசிகலா சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு போயஸ் கார்டனில் ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.அதன் பின்னர் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 


இதன்மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சர் என்கிற தகுதியைப்  பெறுகிறார் சசிகலா நடராஜன். தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக அ.தி.மு.க-வின் ஜானகி ராமச்சந்திரன் 1988 - ம் ஆண்டு பதவி ஏற்றார்.பதவி ஏற்ற 23  நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சி பொறுப்பை இழந்தார்.இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெண் முதலமைச்சராக அதே கட்சியை சேர்ந்த ஜெயலலிதா 1991 - ல் பதவியேற்றார்.ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 5 -தேதி மறைந்தார்.

அவருடைய  மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று ஆட்சி பொறுப்பை வழிநடத்தினார். கடந்த டிசம்பர் 31 -ம் தேதி சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 61 வயதாகும் இவர் மன்னார்குடியில் பிறந்தவர். 

 

விவேகானந்தன்-கிருட்டிணவேணி தம்பதியனருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் சசிகலா ஐந்தாவதாக பிறந்தவர். ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனுக்கு  கேசட் கொடுக்க வந்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.அதன் காரணமாக ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக அவரது இறப்பு வரை இணை பிரியா தோழியாக இருந்தார்.பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றபோது இதனை அவரே கூறியுள்ளார்.ஜெயலலிதாவுடன் இருந்த நாட்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றார். பின்னர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை நீதிபதி குமாரசாமி வழக்கில் இருந்து விடுவித்தார்.சொத்துக்குவிப்பு வழக்கு ,அன்னிய செலாவணி  மோசடி வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கின்ற சூழலில் தற்போது தமிழகத்தின் மூன்றாவது  பெண்  முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் வி.கே.சசிகலா (எ) திருமதி.சசிகலா நடராஜன்.

-கே.புவனேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!