வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (07/02/2017)

கடைசி தொடர்பு:14:48 (10/02/2017)

‘திட்டமிட்டு அரசியலற்றவர்கள் ஆக்கிவிட்டீர்கள்!’ சசிகலாவுக்கு எதிராக 'Kodaikanal Won't' சோபியா அஷ்ரப் #VikatanExclusive

சோபியா அஷ்ரப்

சோபியா அஷ்ரப். பெரிதாக அறிமுகம் ஏதும் தேவையில்லை. தன் இசையால் பெருநிறுவனங்களையும், அரசுகளையும் கேள்வி கேட்கும் ஜென் z யுவதி. பெருநிறுவனங்கள் எப்படி கொடைக்கானலை சிதைத்திருகின்றன என்று, தன் இசையால் சுட்டிக்காட்டி தமிழ் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியவர். இப்போது, புறவாசல் வழியாக சசிகலா அடுத்த முதல்வராக பொறுப்பேற்கப் போகும் செய்தி அறிந்து நடுநிசியில் தன்  இசைக் குழுவுடன் போயஸ் வீதியில் இறங்கி, கேலிக் கூத்தாகும் ஜனநாயகம்  குறித்து தன் இசையால் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதமான வெயில் படர்ந்திருந்த ஒரு மாலைப் பொழுதில் அவரது குழுவைச் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து... 

"தீடீரென  கொடைக்கானல் மக்களுக்காக களம் இறங்குகிறார், நோட்டாவை பயன்படுத்துங்கள் என்கிறார். நடுநிசியில் போயஸ் வீதியில் இறங்கி ஆட்சி அதிகாரங்களை கேள்வி கேட்கிறார். என்னத்தான் வேண்டும் சோபியாவுக்கு?"

பலமாகச் சிரித்துவிட்டு...பின் தீர்க்கமாகச் சொல்கிறார், " ‘ஜஸ்டீஸ்’.   நீதி வேண்டும். இது சோஃபி என்னும் ஒற்றை பெண்ணின் தேவை இல்லை. எங்கள் தலைமுறையின் தேவை. எங்கும்  எதிலும் அநீதி மட்டுமே படர்ந்திருக்கிறது. முன்பு மேஜையின் மீது தூசு படர்ந்திருந்தது. மெதுவாகத் தட்டினால் சுத்தமாகிவிடும் என்றிருந்தது. ஆனால், இப்போது மேஜைகளே தூசிகளால் செய்யப்பட்டு இருக்கிறது. தும்மி... தும்மி நுரையீரல் வலிக்கிறது. அந்த வலி தாங்காமல்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். நீதி கேட்கிறோம். அதை எங்களுக்குத் தெரிந்த மொழி மூலமாகக் கேட்கிறோம். இசை மூலமாகக் கேட்கிறோம்.  நான் தொடக்கத்தில் சொன்னதுபோல இது என் ஒருத்தியின் கோபமோ கேள்வியோ இல்லை. எம் தலைமுறையின் கோபம். அவரவர் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  எங்கள் குழு இசை மூலமாகக் கேட்பதால், எங்கள் சத்தம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வெளியே கேட்கிறது."

சோபியா

"எல்லாம் சரிதான், இரவில் போயஸ் வீதியில் இறங்கிக் கேள்வி கேட்கும் தைரியம் எங்கிருந்து வந்தது?" 

 "போயஸ் வீதியும் நம் தமிழ்நாட்டில் தானே  இருக்கிறது?  உண்மையில் அன்றிரவு நாங்கள் கிளம்பியது ஒரு ஆற்றாமையில். ஆம், ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். ஆனால், இன்று அந்த ஜனநாயகம் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இது பேரபாயம். யாருக்கும் நன்மை பயக்காது. அந்த விரக்தியிலும், ஆற்றாமையிலும்தான். எங்கள் குழு போயஸ் வீதியில் இறங்கி எங்கள் பாடல் மூலமாக சில கேள்விகளை எழுப்பியது. 

சசிகலா முதல்வராக பொறுப்பேற்கட்டும். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், புறவாசல் வழியாக இல்லாமல், சசிகலாமுறையாக மக்களைச் சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன் பின் அவர் முதல்வராக பொறுப்பேற்கட்டும். அதுதான் ஜனநாயகமும் கூட. அவர், தன் சொந்த நலனுக்காக ஜனநாயகத்தைக் கொல்லவேண்டாம்.

இன்னொன்றையும் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அந்தப் பாடல் சசிகலா என்னும் ஒற்றை பெண்ணுக்கு எதிராக எழுதப்பட்ட பாடல் இல்லை. அந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்கள் என்றாலே புரியும். அது இப்போது நிலவும் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் புனையப்பட்ட பாடல்."

"இந்தத் தலைமுறை, எல்லாவற்றிலும் பிழை காண்கிறது. எல்லாம் சரியில்லை என்கிறது. ஆனால், பொறுப்புகளை எடுத்துக் கொள்ள மறுக்கிறது. எல்லாவற்றிலும் பிழை காண்பது சுலபம். ஆனால், பொறுப்புகளை எடுத்துக் கொண்டு நிர்வகிப்பது கடினம். இதை நாங்கள் எப்படிப் புரிந்துக் கொள்வது. இந்தத் தலைமுறைக்கு ஒரு கோபம் இருக்கிறது. ஆனால் தெளிவான பார்வை இல்லை எனலாமா?"

சோஃபியா"ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், எங்களை அரசியலற்றவர்களாக மாற்றியது யார்? எங்களை Depoliticize செய்தது யார்? முதலாளித்துவக் கருத்தியல் அரசுக்கு எதிராக கேள்விகேட்காதே. அரசு சொல்வதைக் கேள். அரசுக்குக் கீழ்படி. போராடாதே  என்கிறது. அதைதான், இந்தச் சமூகம் எங்கள் மீது திணித்தது. அந்தக் கருத்தியல் மீதுதான் எங்கள் கல்விமுறை கட்டமைக்கப் பட்டிருந்தது. திட்டமிட்டு எங்களை அரசியலற்றவர்களாக ஆக்கிவிட்டு, இன்று எங்களுக்குக் கோபம் மட்டும்தான் இருக்கிறது, தெளிவான பார்வை இல்லை என்பது என்ன நியாயம்? இப்போதுதான் நாங்கள் அரசியல் கற்க தொடங்கி இருக்கிறோம். வீதிக்கு வரத் தொடங்கி இருக்கிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் வரத் தொடங்கி இருக்கிறது. நிச்சயம் இன்னும் இருபது ஆண்டுகளில் பாருங்கள். மிகப்பெரிய மாறுதல் வரும்." 

"ஒருவேளை சசிகலா முதல்வராக பொறுப்பேற்றால், அவர் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?"

"நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்." 

"நீங்கள் சொல்வது புரியவில்லையே?"

"ஆம். அவர் முதல்வர் ஆன பின்னர், ஒரு ஆண்டு கழித்து அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். உங்களைப் பற்றி ஒரு ராப் பாடலை வெளியிட்டது நாங்கள் தான். உங்களைப் பிழையாக எண்ணிவிட்டோம் என்று மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக ஆட்சி செய்து, எங்களையும் வென்றெடுக்க வேண்டும்.  

குறிப்பாக, எங்களுடன் உரையாடவேண்டும் எங்களுடன் என்றால், எங்கள் தலைமுறையுடன் உரையாடவேண்டும். எங்களது அபிலாஷைகளை புரிந்து கொள்ளவேண்டும். நிச்சயம் உரையாடல் மூலமாக மாற்றங்கள் நிகழும். இதற்கான அழுத்தங்களை எங்கள் இசையின் மூலம் தொடர்ந்து கொடுப்போம்.  எம் இளைஞர்கள் அவரவருக்கு தெரிந்த மொழியில் கொடுப்பார்கள். எங்கள் தலைமுறை விழிப்படைந்துவிட்டது".

- மு. நியாஸ் அகமது  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்