'சசிகலா முதல்வராவது கடினம்..!' சிக்கல்களைச் சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்

சசிகலா

ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22 -ம் தேதி அப்போலோவில் காய்ச்சல் மற்றும்  நீர்சத்துக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி அறிவித்தது.

அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் தமிழக முதல்வராக ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க-வில் அடுத்த தலைமை யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் திடீரென்று கடந்த டிசம்பர் 31-ம் தேதி சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுச் செயலாராகப் பதவி ஏற்ற சில நாட்களில் சசிகலா முதலமைச்சராகவும் பதவி ஏற்கப்போகிறார் என்று தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏ- க்கள் கூட்டத்தில்  அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இன்று (7.2.2017) சசிகலா நடராஜன் பதவி ஏற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பதவி ஏற்புக்கான விழா ஏற்பாடுகள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. எப்போது நடைபெறும் என்றும் தெளிவான தகவல் இல்லை. 

 அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது....

சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (5.2.2017) வழக்கறிஞர் விஜயன் தனது பேஸ்புக் பதிவில் சட்டசிக்கல்கள் குறித்துத் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவரிடம் பேசியபோது "மூன்று விவகாரங்களில் சசிகலா பதவி ஏற்பதற்கான தடைகள் உள்ளது. அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வரவுள்ளது. இப்படி அவர் மீது உள்ள வழக்குகளாலும் சசிகலாவுக்கு சிக்கல் உள்ளது. 

மற்றொரு தடையாக , சட்டமன்றத்துக்கு ஒருவர் செல்லவேண்டும் என்றால் இந்திய அரசியலைமைப்பின் 188-வது பிரிவின்படி உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கே உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று விதியில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் முதலமைச்சராகப் பதவி ஏற்கும் ஒருவர் எப்படி உறுதிமொழி ஏற்காமல் பதவி ஏற்க முடியும் ? பதவி ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்துக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிடுவேன் என்பது  இந்திய அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது" என்றார் .

 விஜயன் சார்பாக வைக்கப்படும் வாதங்கள்.....

1. இந்திய அரசியலமைப்பு -10-வது விதியின் படி நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க வேண்டும். விஜயன்(legislative member ) சசிகலா அவர்கள் உறுப்பினராக இல்லை.

2.ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவையில் அமர்வதற்கு பிரமாணம் எடுக்க வேண்டும். அப்படியே முதலமைச்சராக வந்தாலும் 6 மாதகாலம்  உறுப்பினராக இல்லாமல் எப்படி அமர முடியும். 

இவ்வாறு வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார்.மேலும் "இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள முதலமைச்சருக்கான விதிகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

சசிகலா பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற  நிலையில்,தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் டெல்லியில் இருந்து மும்பை சென்று விட்டார். சசிகலா பதவி ஏற்பதில் உள்ள சட்ட சிக்கல்களை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே,அவர் தமிழகம் திரும்பலாம் என்று சொல்லப்படுகிறது.  

- கே.புவனேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!