வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (08/02/2017)

கடைசி தொடர்பு:10:40 (08/02/2017)

எண்ணெய்க்கசிவு விபத்தும், எக்கச்சக்க குழப்பங்களும்...இதுவரை நடந்தது என்ன? #ChennaiOilSpill #Timeline

எண்ணூர் கடற்கரை

டந்த மாதம் 28-ம் தேதி காமராஜர் துறைமுகம் அருகே நடந்த கப்பல் விபத்தும், அதைத் தொடர்ந்து நடந்த எண்ணெய் கசிவும், மக்கள் மனதில் பல சந்தேகங்களையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டன. கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்துக் கொண்டிருந்த வங்கக் கடல் திடீரென, கறுமை நிறமாக மாறியது முதல் அதிர்ச்சி. ஆனால் அதற்கு பிறகும் கூட, அரசு இயந்திரம் முழுவீச்சுடன் களம் இறங்காமல், தன்னார்வலர்களே களம் இறங்கி, சுத்தம் செய்தது அடுத்த அதிர்ச்சி. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த, சென்னை எண்ணெய் கசிவின் டைம் லைன் இங்கே...

28/01/2017 :

எண்ணூர் துறைமுகம் அருகே, கப்பல்கள் மோதி விபத்து!

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது.  எல்.பி.ஜி கேஸ் உடன் சென்ற M.T.BW மேப்பிள் மற்றும் பெட்ரோலிய, எண்ணெய் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த M.T. டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்களும் அதிகாலை நான்கு மணி அளவில், மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் கடலில் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டது. பிறகு மீட்பு படையினரால் இந்த இரண்டு கப்பல்களும் உடனே மீட்கப்பட்டது. 

29/01/2017:

கரை ஒதுங்கிய உயிரினங்கள்:

எண்ணெய் கழிவுகள்

எண்ணெய்க் கசிவு நடந்ததுமே, எண்ணெய் நீரில் கலக்க துவங்கியது. இதனைத் தொடர்ந்து கடல் மாசடைய துவங்கியது. மீன்கள், நண்டுகள், ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்க துவங்கின. சில ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த விஷயம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, வெறும் விபத்தாக மட்டுமே இருந்த இந்த விஷயம், சுற்றுச்சூழல் கேடாக மாறி, பலரின் கவனத்தை ஈர்த்தது. கடலோர காவல் படையினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

30/01/2017:

மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அதிகமாக இறந்து ஒதுங்கிய மீன்கள் மற்றும் ஆமைகளால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசத் துவங்கியது. அத்துடன் எண்ணெய் கழிவுகள் எண்ணூரில் மட்டுமில்லாமல், மெரினா வரையிலுமே கூட, பரவியது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் தவித்தனர். எண்ணெயினை சுத்தகரிக்கும் பணியும் தொடர்ந்து நடந்து வந்தது. 

அப்போது பேசிய கடலோர காவல்படை அதிகாரிகள், "காமராஜர் துறைமுகத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் இருந்து, எண்ணெய் கசிவு நடந்துள்ளது. சுமார் 100 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் அளவுக்கு எண்ணெய் ஆனது கடலில் பரவியுள்ளது" என்றார். கடலில் கொட்டிய மொத்த எண்ணெய் அளவு எவ்வளவு என்பது குறித்து அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

31/01/2017:

அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "இரு கப்பல்கள் மோதியதில் ஒரு டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவு பிரச்னையை சரி செய்ய பத்து நாட்கள் ஆகும். இதனால் கடலுக்கு செல்ல முடியாமல், பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்' என்று கூறினார். கடலில் கொட்டப்பட்ட எண்ணெய் குறித்து, அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட முதல் தகவல் இதுதான்.

நீலாங்கரை முதல் நேப்பியர் பாலத்திற்கும் இடைப்பட்ட பரப்பில் மட்டுமே 153 ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்தது தெரிய வந்தது. ஆண்டுதோறும் மீன்பிடி வலைகள் சிக்கி, ஆமைகள் இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டில், இந்த எண்ணெய் கசிவும் சேர்ந்துவிட, இதனால்தான் ஆமைகள் உயிரிழக்கிறதா என்ற சந்தேகம் வலுத்தது. கடலோர காவல்படை மட்டுமின்றி, தன்னார்வலர்களும், மீனவர்களும் களத்தில் இறங்கி கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 டன் அளவிலான, கழிவுகள் கடலில் இருந்து அகற்றப்பட்டதாக அவர்கள் கூறினர். இந்த பிரச்னையால் மீன் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது

எண்ணூர் எண்ணெய் கழிவுகள்

01/02/2017 : 

கடலில் கொட்டப்பட்ட எண்ணெய் 20 டன்னா?

கடலில் கொட்டப்பட்ட மொத்த எண்ணெய் அளவு குறித்து, சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், மொத்த எண்ணெய் அளவு 20 டன்கள் இருக்கும் என அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியானது

இதுகுறித்த வழக்கை விசாரித்த, சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், "இந்த விபத்து தொடர்பாக, இரு கப்பல் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி, எண்ணெய் படலங்களை வேகமாக அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டது.

03/02/2017:

கப்பல் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு!

கப்பல்கள் விபத்து தொடர்பாக எண்ணூர் துறைமுகத்தின் பொதுமேலாளர் குப்தா அளித்த புகாரையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேப்பிள் கப்பல் நிறுவனத்தின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணையைத் துவங்கினர்.

கடலோர காவல்படை ஐஜி எஸ்.பரமேஷ், "கடலில் எண்ணெய் கலக்கவில்லை. எண்ணெய் கசடு மட்டுமே கலந்துள்ளது. இதுவரை 116 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டுவிட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது’" எனக் கூறினார்.

எண்ணூர் கடற்கரை

இந்த விபத்து குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி, செயலாளர் ராஜீவ் குமார் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜீவ்குமார் கூறுகையில், 'இந்த விபத்தில் 10,000 டன் எண்ணெயில், 20 டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் கடலில் படிந்துள்ள எண்ணெய் முழுமையாக அகற்றப்படும். இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். கப்பல் நிறுவனங்களிடம் இருந்து முதல்கட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் கிடைக்க ஒரு மாதம் ஆகும்' என்றார்.

நவீன இயந்திரங்கள் ஏதுமின்றி, இளைஞர்களும், பொதுமக்களும் வாளியைக் கொண்டு, கழிவுகளை அகற்றிய சம்பவங்கள், சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. கச்சா எண்ணெயால், உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், இதனை அரசேதான் செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்தன.

04/02/2017:

ஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டனர்!

கப்பல் விபத்து நடந்த எண்ணூர் கடல் பகுதியை, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'கப்பல் விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு கப்பல்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 12 கி.மீ தூரத்துக்கு எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது. எவ்வளவு எண்ணெய் கசிந்தது என்பதை தோராயமாக கூற முடியாது. கடலில் கலந்துள்ளது கச்சா எண்ணெய் அல்ல. அது கப்பலின் எரிபொருள். எண்ணெய் கழிவுகளை அகற்ற மனிதர்களுடன் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கரையோரங்களில் உள்ள கழிவுகளை இயந்திரங்களால் அகற்ற முடியாத சூழல் நிலவுகிறது' என்றார்.

எண்ணூரில் கரை ஒதுங்கிய ஆமை

05/02/2017:

முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு:

எண்ணூரில் கழிவுகளை அகற்றும் பணியை அப்போதைய தமிழக முதல்வர், ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோரும் இருந்தனர்.

அதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், 'மத்திய அரசுடன் இணைந்து எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 1800 பேர் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் படலத்தை அகற்றுவதில் 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இந்த விபத்தினால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.' என்று தெரிவித்தார். 

06/02/2017:

எண்ணூர் நிலவரம் குறித்து அமைச்சர் விளக்கம்:

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "இதுவரை 160 டன் எண்ணெய்க் கழிவு அகற்றப்பட்டுள்ளது. எண்ணெய்க் கழிவின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், இயந்திரத்தையும் பயன்படுத்த முடியவில்லை. ஆழ்கடலில் எண்ணெய்க் கழிவின் பாதிப்பு இல்லை, எனவே அச்சமில்லாமல் மீன்களைச் சாப்பிடலாம்' என்று தெரிவித்தார். 

இதுகுறித்து விளக்கமளிக்க கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநர் மாலினி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,"சேதமடைந்த கப்பலில் இருந்த கச்சா எண்ணெய், பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டது. பாதிப்புகளுக்கு வர்த்தக கப்பல் சட்டத்தின் படி உரிய நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.

மத்திய அரசுக்கு, பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்:

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஆகியவை இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது.

எண்ணெய் கழிவுகளை சுத்தகரிக்கும் பணி

சில சிக்கல்களும் சந்தேகங்களும்!

இந்த விஷயத்தால், கடலின் பல்லுயிர் தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதிவரை மட்டும் 374 ஆமைகள் உயிரிழந்துள்ளன. இவை அனைத்தும் எண்ணெய் விபத்தால்தான் இறந்தன என சொல்ல முடியாது. டிசம்பர் மற்றும் ஜனவரி காலங்களில் ஆண்டுதோறும் மீன்பிடி வலைகளில் சிக்கி இந்த ஆமைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த முறையும் எண்ணெய் விபத்தால் மட்டுமின்றி, மீன்பிடி வலைகளாலும் ஆமைகள் அதிக அளவில் இறந்துள்ளன. இந்த விபத்து பல்வேறு சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது.

1. முதலில் இருந்தே, எண்ணெய் கசிவு தொடர்பான சரியான அளவீடுகளும், அதன் ஆபத்து பற்றியும் அரசு சார்பில் இருந்து எந்தவித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை. இதனால் எண்ணெய் அளவு, உயிரிழந்த உயிரினங்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் எக்கச்சக்க குழப்பங்கள் நிலவின. கடலில் அதிக அளவில் கருமையான திட்டுகள் தென்படத் துவங்கியதும்தான் சுத்தப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

கப்பல் விபத்து கழிவுகள்

2. கடலோரப் பாதுகாப்பு படை, துப்புரவுப் பணியாளர்கள், மீனவர்கள் ஆகியோருடன் தன்னார்வலர்களும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது மக்களிடையே மிகுந்த எதிர்ப்பைக் கிளப்பியது. இதுபோன்ற விபத்துகளை கையாளும் அளவிற்கு, நமது அரசிடம் போதுமான ஆட்களும், தொழில்நுட்பங்களும் இல்லையா, கச்சா எண்ணெய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது உடல்நலக் குறைபாடுகள் ஏற்படாதா போன்ற கேள்விகளும் எழுந்தன.

3. விபத்து நடந்து 8 நாட்கள் கழித்து கூட, முழுமையான கழிவுகள் கடலில் இருந்து நீக்கப்படவில்லை. சுத்தகரிக்கும் பணிகள் இவ்வளவு தாமதமாக யார் காரணம்?

எந்த கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகளிடம் பதில் இல்லை. 

- ஞா.சுதாகர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்