சசிகலாவின் குற்றச்சாட்டும்... ஸ்டாலினின் பதிலும்! #OPSvsSasikala

சசிகலா

சென்னை மெரினா கடற்கரை நிகழ்வானது, நேற்றிரவு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 40 நிமிடம் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதன்பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., தன்னை கட்டாயப்படுத்தியே ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்பது உள்ளிட்ட பல விவரங்களை வெளிப்படையாகச் சொன்னார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதல்வராகப் பதவியேற்றது, சசிகலா பொதுச்செயலாளர் ஆனது, தற்போது முதல்வர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்தது பற்றியெல்லாம் முதல்முறையாக பேசினார் பன்னீர்செல்வம். 'மக்கள் விருப்பப்பட்டால் தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்' என்றும் கூறினார். 

இதற்குப் பிறகு, போயஸ்கார்டனில் சசிகலாவை அனைத்து அமைச்சர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கட்சியில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தி.மு.க ஆதரவுடன்தான் பன்னீர்செல்வம் இப்படிச் செயல்படுகிறார்' என்று கூறினார். மேலும், "தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும், முதல்வர் பன்னீர்செல்வமும் சட்டசபையில் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்" என்ற குற்றச்சாட்டை சசிகலா தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், "எதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து சிரிப்பது குற்றமில்லை" என்று முதல்வர் கூறியுள்ளார். சசிகலாவில் இந்தக் குற்றச்சாட்டுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அவர் பதிவிட்டிருந்தது:

“எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அ.தி.மு.க-வின் 'அதிரடி' வரவான பொதுச்செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது, அவர் ஏற்கனவே “நான் பினாமி அல்ல” என்று “சொத்துக் குவிப்பு வழக்கில்” வைத்த உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினைத்த வேகத்தில், குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் தி.மு.க. மீது பொய்யான விமர்சனத்தை வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன். அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் கேலிக்கூத்துகளுக்கும், அரசியல் கோமாளித்தனங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை திருமதி சசிகலா நடராஜன் அறிய வேண்டும் என்றால், அவர் முதலில் “தமிழக அரசியலை” புரிந்து கொள்ள வேண்டும்.

மாண்புமிகு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அ.தி.மு.க தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, இப்படி தி.மு.க. மீது பழிபோடுவது அரைவேக்காட்டுத்தன அரசியல். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான், முதலமைச்சராக அம்மையார் ஜெயலலிதா பதவியேற்றபோது, அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களே, அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை, தோழி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் திருமதி சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து, திருமதி சசிகலா நடராஜன் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்க முடியுமா?

ஸ்டாலின்

அம்மையார் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தது, அவர் திடீரென மறைந்தவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது, அம்மையார் ஜெயலலிதாவின் பூத உடலின் அருகில் இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறியது எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடிக்கும் அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு மட்டுமே! அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும், அதே அரசியல் நாகரிகத்தை சட்டமன்றத்திலும், வெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்றது. தமிழக நலனுக்காக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்  இணைந்து செயல்படுவது ஒருவேளை, திருமதி சசிகலா நடராஜனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க. பொறுப்பாக முடியாது. ஆகவே, அ.தி.மு.க-வுக்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு” என்னைப் பார்த்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக்கேடானது. அதைவிட தனது எடுபிடியாக இருக்கும் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை மூலமாக ஒருபேட்டி கொடுக்க வைத்து, டெல்லி பயணம் என்றெல்லாம் கதை அளப்பது, “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்” கேவலமான செயல் என்பதை திருமதி சசிகலா நடராஜன் உணர வேண்டும்.

முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு, அவர் பட்ட அவமானங்களை, மறைந்த அம்மையார் ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு தி.மு.க.வை சீண்ட வேண்டாம் என்று திருமதி சசிகலா நடராஜனை எச்சரிக்க விரும்புகிறேன். அமைச்சர்களை வைத்து, துணை சபாநாயகரை வைத்து, அதிகாரப்பூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” இதழை வைத்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அவமானப்படுத்தியது திருமதி சசிகலா நடராஜனும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும்தானே தவிர, தி.மு.க. இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அ.தி.மு.க-வில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய திருமதி சசிகலா நடராஜனும், அவரது குடும்பத்தினரும் இப்போது முதலமைச்சரையே மிரட்டி கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக குடியரசு தின விழாவில் தனது மனைவியுடன் வந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத திருமதி சசிகலா நடராஜன், முதலமைச்சரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளார் என்பதுதான் உண்மை. ஆனால் அந்தக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு விட்ட நிலையில், இன்றைக்கு மாநிலத்தில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டு நிலையான ஆட்சியின் சக்கரம் தடுமாறி நிற்கிறது.

இன்றைக்கு முதலமைச்சரையே மிரட்டியிருக்கின்ற நிலையில், இந்த மிரட்டல் குறித்தும், போயஸ் கார்டனில் அமர்ந்து கொண்டு நிலைத்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதைவிட இதுகுறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மூன்று மாதங்கள், தேர்தலுக்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிப்பால் இரண்டரை மாதங்கள், அவர் மறைந்த பிறகு செயல்பட விடாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசால் இரண்டரை மாதங்கள் என்று ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு மேல் தமிழக அரசு நிர்வாகம் முழுவதும் செத்து விட்டது. நிர்வாக எந்திரம் நிலைகுலைந்து கிடக்கிறது. ஆகவே அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் பொறுப்பு ஆளுநர் அவர்கள் உடனடியாக சென்னைக்கு வந்து முகாமிட்டு, தமிழக நலனை பாதுகாக்க, நிலையான ஆட்சி அமைவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் சட்டத்தை தமிழகத்தில் செயல்பட வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு பதிவிட்டிருந்தார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பதிவிட்டிருந்த ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க லின்க்கை க்ளிக் செய்யவும்: https://www.facebook.com/MKStalin/posts/742869329206273:0

 - நந்தினி சுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!