வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (14/02/2017)

கடைசி தொடர்பு:10:27 (17/02/2017)

‘தினகரனால் வந்த திருப்புமுனை!' ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! - அத்தியாயம் 2

பன்னீர்செல்வம்

பேச்சிமுத்து ‘டூ’ பி.வி.கேண்டீன் முதலாளி!

பன்னீர்செல்வம்தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயக்குடியானவர் ஓட்டக்காரத்தேவர்; அவரது மனைவி  பழனியம்மாள்; இவர்களின் குலதெய்வம் பேச்சிமுத்து. அதனால், ஓட்டகாரத்தேவர்-பழனியம்மாள் தம்பதி, அவர்களுக்குப் பிறந்த முதல் பிள்ளைக்கு பேச்சி முத்து என்று பெயர் வைத்தனர். ஆனால், வீட்டில் அந்தப் பிள்ளையை பன்னீர்செல்வம் என்று வேறு பெயர் வைத்து அழைத்தனர். அந்தப் பெயர்தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போதும் கொடுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் பி.யூ.சி படித்துவிட்டு, பி.ஏ.,பொருளாதாரத்தை ‘உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா’ கல்லூரியில் போய்ப்படித்தார்.

நட்பு, காதல், மோதல், கேலி, கிண்டல் என நவரசங்களும் கொட்டிக்கிடக்கும் கல்லூரியிலும் பேச்சிமுத்து அமைதியான மாணவர். கல்லூரிப் பருவத்துக்குரிய உற்சாகத் துள்ளல் எதுவும் அவரிடம் இருக்காது. மதிய உணவு இடைவேளையில்கூட சக மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிடமாட்டார். யாரும் இல்லாத இடமாகப் பார்த்து, தனியாகப்போய் சாப்பிடுவதுதான் பன்னீரின் வழக்கம். கல்லூரியில் இப்படி ஒரு மாணவர் படித்தார் என்ற தடமே இல்லாதவகையில் கல்லூரிப் படிப்பை முடித்த பன்னீர், பெரியகுளம் கைலாசநாதர் கோயில் அருகே, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த நிலத்தில் விவசாயம் பார்க்கத் தொடங்கினார்.

அதில்பெரிய பிடிபாடு இல்லை. வேறு ஏதாவது தொழிலும் கைவசம் இருந்தால்தான் குடும்பத்தை ஓட்ட முடியும் என்று முடிவெடுத்தவருக்கு, பெரியகுளத்தைச் சுற்றி ‘டீ ஸ்டால்’களுக்கு பால் கிராக்கி இருப்பது தெரியவந்தது. அதனால், அந்தக் கடைகளுக்கு மாட்டுப்பால் சப்ளை செய்யலாம் என்று முடிவெடுத்தார் பன்னீர். அதற்காக தங்கள் நிலத்திலேயே பால்பண்ணை ஒன்றை அமைத்தார். பால்பண்ணை அமைக்க ஜாமீன் கையெழுத்து போட்டவர் பன்னீரின் நண்பர் விஜயன். பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் டீக்கடைகளுக்கு பால் சப்ளை செய்ததுபோக, எஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்தவர், அதை விற்றுக் காசாக்கத் தனியாக ஒரு டீ கடையையும் ஆரம்பித்தார். அந்த கடையின் பெயர் ‘பி.வி கேண்டீன்’. பி - என்பது பன்னீர்செல்வம் என்ற பெயரின் முதல் எழுத்து; வி - என்பது வங்கிக் கடனுக்கு ஜவாப்தாரியான நண்பர் விஜயனின் பெயரில் உள்ள முதல் எழுத்து. பன்னீர் ஆரம்பித்த டீக்கடை இப்போதும் இருக்கிறது... ஆனால், அந்தக் கடையில் பி.வி.கேண்டீன் என்ற பெயர் இப்போது இல்லை. 

நடிகர் திலகம் டூ மக்கள் திலகம்!

பன்னீர்செல்வத்துக்கு சிறு வயதில் இருந்தே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்களின் மீதுதான் ஈர்ப்பு. அதனால், விடலைப் பருவத்தில் தீவிர சிவாஜி ரசிகராக வலம்வந்தார் பன்னீர். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, பன்னீர் அதில் சேர்ந்துகொண்டார். அப்போது, பெரியகுளம் தேனிக்குள் இருந்தது; தேனி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்துக்குள் இருந்தது. அ.தி.மு.க-வில் இலக்கிய மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்த கம்பம் செல்வேந்திரன் அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர். அவரது ஆதரவாளராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார் பன்னீர்செல்வம். கம்பம் செல்வேந்திரனின் கனிவு, பன்னீருக்கு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜா.அணி - ஜெ.அணி என அ.தி.மு.க பிளவுற்றபோது, ஜானகி அணியை நடிகர் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி ஆதரித்தது. தனது அரசியல் குருவான கம்பம் செல்வேந்திரனும் அதே அணியைத்தான் ஆதரித்தார். அதனால், பன்னீர்செல்வமும் ஜானகி அணிக்காகவே வேலை பார்த்தார். 

வெண்ணிற ஆடை நிர்மலாவுக்குப் பின்னால் பன்னீர்!

ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஜெ.அணி-ஜா.அணி இரண்டுக்கும் வாழ்வா? சாவா? போராட்டமாக இருந்தது அந்தத் தேர்தல். சசிகலாவின் கணவர் நடராஜன், ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவான தொகுதிகளைத் தமிழகம் முழுவதும் தேடினார். “வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக இருக்க வேண்டும்; இரண்டே நாட்களில் பிரச்சாரத்தை முடிக்கக்கூடிய அளவுக்கு சிறிய தொகுதியாக இருக்க வேண்டும்” என்று நினைத்துத் தேட ஆரம்பித்த நடராஜன் ஸ்ரீரங்கம், போடி தொகுதிகளை ஜெயலலிதாவுக்காகத் தேர்ந்தெடுத்தார். இரண்டு தொகுதிகளையும் சுற்றிப்பார்த்த ஜெயலலிதா போடி தொகுதியை டிக் செய்தார். ஜெயலலிதா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து ஒரு பிரபலமான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று ஜானகி அணி நினைத்திருந்தது.

அவர்கள் அதற்காக தேர்ந்தெடுத்தது நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை. அன்றைய அரசியல் சூழலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை மடக்கிவிட நடராஜன் பல வியூகங்களை வகுத்து வைத்திருந்தார். அதை அறிந்துகொண்ட ஜானகி அணி, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா வேட்புமனு தாக்கல் செய்யும்வரை, அவரை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பை கம்பம் செல்வந்திரனிடம் ஒப்படைத்தது. அவர் பன்னீரின் துணையுடன் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து வேட்புமனுத்தாக்கல் செய்ய வைத்தனர். அதன்பிறகு, ஜெயலலிதாவும் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

போடி தொகுதியில் கடும்போட்டி நிலவியதுபோன்ற தோற்றம் இருந்தது. ஜெயலலிதாவை வீழ்த்த வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக பன்னீர்செல்வம் கடுமையாக வேலை பார்த்தார். ஆனாலும், ஜெயலலிதாவே ஜெயித்தார். தேர்தலுக்குப் பின்னர் ஜெ.-ஜா. அணிகள் இணைய, ஜெயலலிதாவின் தலைமையைப் பணிவாக... மிகப் பணிவாக... மிகமிகப் பணிவாக ஏற்றுக்கொண்டார் பன்னீர். அதன்பிறகு கட்சியில் பெரியகுளம் நகரச் செயலாளர் பதவி கிடைத்தது. பெரியகுளம் நகராட்சித் தேர்தலில் சீட்வாங்கிப் போட்டியிட்டு சேர்மன் பதவியைப் பிடித்தார். 1999-ம் ஆண்டுவரை பன்னீரின் வாழ்க்கை பெரியகுளம் என்ற வட்டத்துக்குள் மட்டுமே சுழன்று கொண்டிருந்தது. 

டி.டி.வி.தினகரனால் வந்த திருப்புமுனை!

ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன்

 

1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் போயஸ் கார்டனின் செல்லப் பிள்ளையாக வலம்வந்தவர் டி.டி.வி.தினகரன். சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மூத்தமகன். அவருக்கு பெரியகுளத்தில் போட்டியிட சீட் வாங்கிக்கொடுத்தார் சசிகலா; டி.டி.வி.தினகரனை பெரியகும் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா; டி.டி.வி.தினகரன் பெரியகுளத்தில் முகாமிட்டார். கட்சிக்காரர்கள் வரிசையாக வந்து தினகரனுக்கு வணக்கம் வைத்தனர். பன்னீர்செல்வம் சாஷ்டாங்கமாக விழுந்து தினகரனை வணங்கினார். தினமும் தினகரன் முன் ஆஜரானார். பன்னீர்செல்வம் அவரது தம்பி ராஜாவின் வீட்டை தேர்தல் அலுவலகமாக மாற்றி, தினகரனை அங்கு வரவழைத்தார்.

பன்னீரின் உபசரிப்புகள் பிடித்துப்போக, பன்னீரின் தம்பி ராஜாவின் வீட்டிலேயே தினகரன் தங்கினார். அப்போது பன்னீருக்கு ஒதுக்கப்பட்ட வேலை, தேர்தல் வரவு-செலவுகளைப் பார்ப்பது. ஆனால், பன்னீர் அதை மட்டும் பார்க்கவில்லை. இருக்கின்ற வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு பார்த்தார். எதிர்முகாமில் இருந்த ‘ஆக்டிவ்’ புள்ளிகளை அமைதியாக்கினார். அந்தச் சூட்சுமங்கள் பலன் அளிக்க... தினகரன் ஏகபோகமாக வென்றார். வெற்றிக்கு கைமாறாக பன்னீர்செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார் தினகரன். அப்போது மேலேபோக ஆரம்பித்த பன்னீருக்கு 2016-வரைக்கும் எந்தச் சறுக்கலும் இல்லை. அந்தளவுக்கு சுலபமாக பன்னீரின் அரசியல் பயணம் மேடேறிவந்தது. 

பயணம் தொடரும்!

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளீக் செய்யவும்

ஜோ.ஸ்டாலின்.
படங்கள்-சு.குமரேசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்