வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (14/02/2017)

கடைசி தொடர்பு:11:30 (14/02/2017)

‘இத்தாலியில் சோனியா... இந்தியாவில் ராஜீவ்... '3 ஆண்டுகள் காத்திருந்து கரம் பிடித்த காதல் கதை!

 

''நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டபோது ஒரு உண்மையை நான் உணர்ந்திருந்தேன். அந்த சந்திப்பில் அவர் மீது நான் காதல் வயப்பட்டேன் என்பது தான் அது." இதைச்சொன்னவர் தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. அவர் குறிப்பிட்டது முன்னாள் பிரதமரும் தனது கணவருமான ராஜீவ் காந்தி பற்றி. சாதி, மதம், அந்தஸ்து மட்டுமல்லாது மொழி, நாடு என ஏகப்பட்ட வேறுபாடுகளை கடந்து இணைந்த காதல் கதை ராஜீவ் - சோனியாவின் காதல் கதை. பிரபலங்களின் காதல் கதை சுவாரஸ்யமானவை. அவற்றில் ஒன்று ராஜீவ் சோனியாவின் காதல்.

இரு மனங்கள் ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு இடத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ளும்போது உருவாகும் சலனமே காதல் என்பார்கள். சாதி, மதம், மொழி, இனம், நாடு, அந்தஸ்து என எதையும் பார்க்க விடாமல், காதல் கண்ணை கட்டி விடும் என்பார்கள். அப்படி கண்ட உடன் காதலித்து, அதற்காக 3 ஆண்டுகள் காத்திருந்து... காதலித்தவரை கரம்பிடித்த கதைதான் இது.

ராஜீவ் - சோனியா. இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்த இடம். லண்டனில் உள்ள ஒரு சிற்றுண்டி விடுதி. இந்திரா - பெரோஸ் காந்தி தம்பதியின் மூத்த மகனாக பிறந்த ராஜீவ் காந்தி, டேராடூனில் உள்ள பள்ளியில் படித்து முடித்ததும் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இம்பீரியல் கல்லூரியில் பொறியியல் படித்தார். அதே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இத்தாலி நாட்டின் புகழ்மிக்க கட்டடக்கலை நிபுணராக விளங்கிய ஸ்டெபனோ மைனோவின் மகளாக பிறந்த சோனியா, ஆங்கிலத்தை முக்கிய பாடமாக எடுத்து பயின்று கொண்டிருந்தார்.

இருவரும் ஒரே பல்கலைக்கழகம் என்றாலும், வெவ்வேறு வகுப்புகள், வெவ்வேறு துறை என்பதால் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட வாய்ப்பிருக்கல்லை. ராஜீவும் சோனியாவும் ஒரு சிற்றுண்டி விடுதியில் தற்செயலாக சந்தித்துக்கொண்டார்கள்.

தங்க நிற கூந்தலையும், கரிய விழிகளையும் கொண்ட சோனியாவை கண்டதும் காதல் ராஜீவ்க்கு. சோனியாவுக்கு அதே நிலைதான். விழிகள் மட்டுமே பேசியது அப்போது. யார் எப்படி பேசிக்கொள்வது என்ற தயக்கம் இருவருக்குமே இருந்தது அப்போது. இந்த நேரத்தில் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு, இருவரையும் அடுத்தடுத்த சந்திக்க செய்தது. இந்த சந்திப்புகள் இருவருக்குமிடையே புரிதலை ஏற்படுத்த இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்தனர்.

ராஜீவ் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. லண்டனில் இருந்து தனது தாய் இந்திரா காந்தியை தொடர்பு கொண்ட ராஜுவ்  சோனியா பற்றிய விவரங்களை சொல்லி... அவரை மணந்து கொள்ள விரும்புவதாகவும் சொல்ல... 'நீ யாரை விரும்புகிறாயோ, அந்த பெண்தான் எனது மருமகள். என் வருங்கால மருமகளை பார்க்க விரும்புகிறேன்' என்று காதலும் சம்மதம் தெரிவித்டுள்ளார் இந்திரா காந்தி.

ஆனால் சோனியா காந்தியின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.சோனியா காந்தி கத்தோலிக்க கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சோனியாவின் மூத்த சகோதரிகள் மூவருமே கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்களையே மணமுடித்திருந்தனர். ராஜீவ் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வேறு நாட்டைச் சேர்ந்தவர் என்பது அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமாக இருந்தது.

சோனியா அதிர்ந்து பேசாதவர். மிக சாதுவானவர். தந்தையின் பேச்சுக்கு எதிராய் அவரால் எதுவும் பேசமுடியவில்லை. அதே சூழலில் 'மணந்தால் ராஜீவைத்தான் மணப்பேன். வேறு எவரையும் மணக்க மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே லண்டன் வந்த இந்திரா காந்தி, சோனியா காந்தியை சந்தித்து பேசினார். 'நீ தான் என் மருமகள். உன் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்' என சோனியாவிடம் சொன்னார் இந்திரா காந்தி.

இந்த சூழலில் ராஜீவ்-ன் படிப்பு முடிந்தது. இந்தியா திரும்பிய ராஜீவ் பைலட் ஆகும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சோனியாவும் படிப்பை முடித்து விட்டு இத்தாலிக்கு சென்றார். அப்போது சோனியாவுக்கு வயது 18. இந்தியாவில் ராஜீவும், இத்தாலியில் சோனியாவும் இருந்தாலும் அவர்களுக்கிடையேயான காதல் அப்படியே இருந்தது.

3 ஆண்டுகள் இப்படியே கழிந்தது. சோனியா தனது 21வது வயதை எட்டினார். திருமண வயதை எட்டியதையடுத்து, அவரை இந்தியா அழைத்தார் ராஜீவ். இதையடுத்து 1968ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா வந்தார் சோனியா. டெல்லியில் சோனியாவை வரவேற்ற ராஜீவ் அவரை உறவினர் வீட்டில் தங்க வைத்தார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சோனியாவை ராஜுவ் தனது வாழ்க்கை துணையாக கரம் பிடித்தார். எளிய முறையில் நடந்த இந்த திருமணத்திற்கு பின் இந்திரா காந்தியின் இல்லத்திலேயே ராஜீவ்வும் - சோனியாவும் தங்கள் வாழ்க்கையை துவங்கினர்.

காதல் எல்லோரிடத்திலும் இருக்கும். அதனை முழுமையாக புரிந்து கொள்பவர்களிடம் எப்போதும் வாழும் என்பதன் நேரடி சாட்சிகள் ராஜீவ் - சோனியா தம்பதியினர்.

- இரா.மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்