வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (15/02/2017)

கடைசி தொடர்பு:11:59 (15/02/2017)

"பன்னீர்செல்வத்தின் பரமபதமும்... எடப்பாடி பழனிச்சாமியின் எமோஷனும்...!"

பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது புதிராத இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் முதல்வர் அரியணையில் ஏறிவிடக்கூடாது என்பதில் பன்னீர்செல்வம் அணி கவனம் செலுத்தி வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலிலதா மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அதை சசிகலா விரும்பவில்லை. இருப்பினும் அன்றைய சூழ்நிலையில் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அடுத்து, சசிகலா, பொதுச் செயலாளராகவும், அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். அ.தி.மு.க.வில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. உடனடியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். தற்போது அவர்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு பத்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இருப்பினும் மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வராகி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மூலம் அவரது முதல்வர் ஆசை பறிக்கப்பட்டு விட்டது. உடனடியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும், ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்து விட்டு அவரது அழைப்புக்காக காத்திருக்கிறார்.
சசிகலா முகாமிலிருந்து 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பன்னீர்செல்வம் தரப்பினர் காத்திருக்கின்றனர். ஆனால், பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா முகாமில் மதில் மேல் பூனையாக 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இன்னும் சிலர் சசிகலாவின் முகாமில் இல்லாமல் தங்களது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் சிறைவாசத்துக்குச் செல்ல சசிகலா தயாராகி விட்டார். அதற்கு முன்பு கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து எம்.எல்.ஏ.க்களிடமும் கட்சி தொண்டர்களிடமும் உருக்கமாக பேசினார். அவரது பேச்சிலிருந்தே சசிகலாவின் மனநிலையை தெரிந்து கொள்ள முடிந்தது. 'சிறையிலிருந்தே சின்னம்மா அ.தி.மு.க.வை வழிநடத்துவார்' என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். கட்சியை வழிநடத்தவும், பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்கவும் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்துள்ளார் சசிகலா. 
அதே நேரத்தில் பன்னீர்செல்வம் எதிர்பார்த்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லை. இதனால் அவரால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதே சூழ்நிலைதான் சசிகலா தரப்பிலும் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் கடைசி வரை அனைவரும் அந்த முகாமில் இருப்பார்கள் என்றால் அது சந்தேகம்தான். இந்த சூழ்நிலையில் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனால் அடுத்து எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிப்பது போன்ற முடிவை ஆளுநர் எடுக்கலாம். இல்லையெனில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 355ஐ பயன்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், "நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையிலேயே எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதை நிலவரப்படி ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைத்தால் மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பில்லை. அதே நிலையில்தான் சசிகலா தரப்பும் இருக்கிறது. சசிகலா தரப்பு கட்டுப்பாட்டிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எங்களை முழுமையாக ஆதரித்தால் மட்டுமே பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சியை தொடர முடியும். ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இருந்தும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எதையும் தீர்மானிக்க முடியவில்லை. 
ஒருவேளை மெஜாரிட்டி நிரூபிக்கப்படாமல் ஆளுநரால் ஆட்சி கலைக்கப்பட்டாலும் அடுத்து வரும் தேர்தலை சந்திக்க இப்போதே தயாராகி விட்டோம். இதற்காகத்தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் கைகோர்த்துள்ளோம். ஜெயலலிதாவின் முகசாயலில் இருக்கும் தீபாவின் தேர்தல் பிரசாரம் நிச்சயம் எங்களுக்கு பயன்அளிக்கும். மீண்டும் பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமையும்" என்றனர் நம்பிக்கையுடன். 

சசிகலா தரப்பில் கேட்ட போது, "மெஜாரிட்டியான எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமி சட்டசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளோம். இந்த முறை எந்த காரணத்தையும் சொல்லி எங்களை காலதாமதப்படுத்த வழியில்லை. அதையும் மீறி ஆளுநர் காலதாமதப்படுத்தினால் குடியரசுத் தலைவரை சந்திப்போம். இதற்காகத்தான் டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச் செயலாளராக சின்னம்மா நியமித்துள்ளார்" என்றனர். 

டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "ரிசார்ட்டில் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யும் போதே ஆறு மாதங்கள் நீங்கள் முதல்வராக பதவியில் இருங்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளதாக தகவல் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பிறகு டி.டி.வி.தினகரன்தான் அடுத்த முதல்வர்" என்றார் சந்தோஷத்துடன். சசிகலாவின் இந்த திட்டம், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை வருத்தமடைய வைத்துள்ளது. 

 -எஸ்.மகேஷ் 


டிரெண்டிங் @ விகடன்