வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (16/02/2017)

கடைசி தொடர்பு:19:58 (17/02/2017)

9 நாட்கள் ரிசார்ட் வாசம் முடிந்து திரும்பும் எம்.எல்.ஏக்களுக்கு தமிழகக் குடிமகனின் 11 கேள்விகள்! #VikatanExclusive

‘ஓட்டுப் போட்டாச்சுல்ல? அதோட உங்க வேலை முடிஞ்சது’ என்கிற தோரணையில்தான் இருக்கிறார்கள் எம்.எல்.ஏக்கள். 9-வது நாளாக கூவத்தூரில் குடிகொண்டிருந்தார்கள். அங்கே என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், அவர்கள் எங்கே இருந்துகொண்டு என்ன செய்துகொண்டிருக்க வேண்டியவர்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்துக் கொண்டுதான் இருப்பான்.

இதோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள். ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருப்பதால், வேறு வழியில்லை. வந்துதான் ஆகவேண்டும். 

கூவத்தூர் எம் எல் ஏ

ஆனால் ஒரு குடிமகனாக, நம்மிடம்  சில கேள்விகள் இருக்கின்றன. அதற்கான பதில்களுடனும் அவர்கள் வந்தால்.. வரவேற்கலாம்.

Bullet எந்த வேலைக்குச் சேர்ந்தாலும், வேலை சார்ந்த நெறிமுறைகள் கொடுக்கப்படும். அப்படி உங்களுக்கு ஏதும் கொடுக்கப்பட்டதா? இப்படி இத்தனை நாள், பணியை விட்டு இருக்கலாம் என்று அந்த நெறிமுறைகளின் இண்டு இடுக்குகளில் எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா?

Bulletபத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் சொல்லும்போது, “எங்ககிட்ட 124 பேர் இருக்காங்க. அங்க 8 பேர்தான் இருக்காங்க. 124 பெரிசா 8 பெரிசா?” என்று கேட்கிறார் ஒரு அமைச்சர். நிச்சயம் 124 பெரிசுதான் சார். எதிரணி என்பதையெல்லாம் விடுங்கள். அடுத்த முறை ஓட்டு வேண்டும் அல்லவா? உங்கள் சொந்தத் தொகுதியில், உங்களுக்கு ஆதரவாக 8 மக்கள் இருக்கிறார்கள். எதிராக 124 மக்கள் இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள். 8 பெரிசா, 124 பெரிசா? ‘இல்லை... இந்த முறை முடிந்தவரை சம்பாதித்து விடுகிறோம். அடுத்த எலக்‌ஷனெல்லாம் அப்புறம்..” என்பீர்களானால்.. சொல்ல ஒன்றுமில்லை.

 இதற்கு முன், உங்கள் முதல்வராக இருந்தவர் மக்களுக்கு எதிராக ஒரு முடிவெடுக்கும்போதோ, உங்கள் சொந்தத் தொகுதியின் முன்னேற்றத்திற்கு எதிராக ஒரு முடிவெடுக்கும்போதோ, இப்படி ஒற்றுமையாக, பலநாட்கள் நின்று போராடி அதை எதிர்த்திருக்கிறீர்களா?

 நாங்கள் வேலைக்குச் சென்றால்தான் சம்பளம். இல்லையென்றால் Loss Of Payதான். குறிப்பிட்ட நாட்கள் மட்டும் Work From Home என்று பணிபுரியலாம். Work From Resort எல்லாம் சாத்தியமே இல்லை. நீங்கள் விடுதியில் இருந்த இத்தனை நாட்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்வீர்களா? சம்பள ஸ்லிப்பை தொகுதி மக்களுக்குக் காட்டுவீர்களா? முழு சம்பளமும் பெறுவீர்கள் என்றால்.. அதை வாங்கும்போது கை கூசாதா உங்களுக்கு?

 நீங்கள் ‘தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காக’ உழைத்துக் கொண்டிருந்த காலங்களில் எல்லாம் உங்கள் மனைவி, மகன், மகள்கள் ‘ஒருவாரம் எங்காவது டூர் போகலாம்’பா என்று அழைத்திருப்பார்கள்தானே. இப்படி இத்தனைநாள் நீங்கள் ரிசார்ட்டில் இருந்ததைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள், என்னவெல்லாம் நினைத்திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?

 எங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒருவாரம் விடுமுறை கிடைத்தாலும், குடும்பத்தோடு இருந்தாலும் அவ்வப்போது செய்யும் வேலைகுறித்த சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். ‘திரும்ப அலுவலகம் செல்லும்போது இதையெல்லாம் செய்யவேண்டும்’ என்று குறிப்பெடுத்துக் கொள்வோம். அப்படி நீங்கள் இருந்த இத்தனை நாட்களில், உங்கள் தொகுதிக்கு இதை இதையெல்லாம் செய்யவேண்டும் என்று எதுவும் திட்டம் தீட்டினீர்களா? 

 இன்னமும் எம்.ஜி.ஆர்.தான் உங்கள் USP. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டுதான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். தவறொன்றுமில்லை. அவர் பொதுச்செயலாளராக இருந்த இடத்தில் சசிகலா பெயரை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றும்போது உங்களுக்கு எப்படி இருந்தது? சரி.. அதையும் விடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என்று ஒருவர் பெயரை அறிவித்திருக்கிறாரே.. அப்போது என்ன நினைத்தீர்கள்? ‘அவர் கட்சிக்குச் செய்த தியாகங்களைச் சொல்லுங்கள்’ என்று யாரும் கேட்டால் ஒரு நாலு விஷயங்களைச் சொல்ல முடியுமா?

 இந்தக் கூவத்தூர் கூத்தெல்லாம் முடிந்து தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கத்தானே வேண்டும்? அதைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அப்படி செல்லும்போது மக்களை நேர்மையாக அவர்கள் இடத்தில் சென்று பார்க்கும் எண்ணம் உண்டா? பார்க்கும்போது அவர்கள் என்னென்ன கேள்வி கேட்பார்கள் என்று யூகித்து வைத்திருப்பீர்கள். அவற்றிற்கெல்லாம் பதில் இருக்கிறதா உங்களிடம்?

  வழக்கமாக இப்படி வேலைகள் தவிர்த்து அலுவலகம் விட்டு இத்தனைநாட்கள் இருந்தபிறகு, மீண்டும் அலுவலகம் வரும்போது இரட்டிப்பு சுறுசுறுப்புடன் இருப்போம். அதேபோல, இத்தனை நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட நீங்கள் அடுத்த நான்காண்டுகளுக்கு தொகுதி மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுவீர்கள் என எதிர்பார்க்கலாமா?

 போன பத்தியைப் படிக்கும்போதே, ‘நாங்கள் ஓய்வெடுத்தோம் என்று யார் சொன்னது? தொகுதி வேலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன’ என்று நீங்கள் நினைத்தீர்களா? சரி...  நீங்கள் இல்லாமலே நடக்கிறதென்றால்.. அப்புறம் நீங்கள் எதுக்கு?

 கடைசியாக ஒன்றே ஒன்று: ரிசார்ட்டில் வேளா வேளைக்குச் சாப்பிட்டீர்களா? 

- பரிசல் கிருஷ்ணா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்