வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (17/02/2017)

கடைசி தொடர்பு:14:48 (17/02/2017)

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தப்புமா? ஓர் அலசல்!

எடப்பாடி பழனிசாமி

"ன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினர்" என்று ஓ.பன்னீர்செல்வம் கொளுத்திப்போட்ட வெடியால் எழுந்த தமிழக அரசியல் அதிர்ச்சி சற்றே ஓய்ந்திருக்கிறது என்று சொன்னாலும், அது உண்மை அல்ல. எடப்பாடி பழனிசாமி 124 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து, அவருக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். எடப்பாடியோடு சேர்த்து 31 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

117 எண்ணிக்கை தேறுமா?

18-ம் தேதி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறி உள்ளார். பழனிசாமி, தமக்கு 124 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையே போதுமானதுதான். ஆனால், இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் பலர் இன்னும் முழு மனதோடு எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
18-ம் தேதி, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை 124 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பார்களா? என்ற சந்தேகம் காரணமாகத்தான் கூவத்தூரிலேயே இன்னும் அவர்களைத் தங்கவைத்துள்ளனர். எம்.எல்.ஏ-க்கள் தங்களின் கூட்டை விட்டுப் பறந்துவிடக் கூடாது என்பதில் டி.டி.வி தினகரன் எச்சரிக்கை உணர்வோடு இருக்கிறார்.

அதிரடி ஆர்.நட்ராஜ்

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த தருணத்தில், மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.நட்ராஜ், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய தாக்கத்தில் மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் இதே போன்ற முடிவை எடுக்கக் கூடும். எனவே, 7 முதல் 8 எம்.எல்.ஏ-க்கள் கடைசி நேரத்தில் சபைக்கு வராமல்போய்விட்டால் அல்லது எதிர்த்து ஓட்டளித்தால், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். ஆட்சி கவிழக்கூடும்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் 10 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள். தி.மு.க-வும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டது.

எடப்பாடிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற சந்தேகம் எல்லா தரப்பிலும் எழுந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், "அ.தி.மு.க-வுக்கு போதுமான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே, எங்களுடைய ஆதரவு அவர்களுக்குத் தேவையில்லை" என்று சொல்லி இருக்கிறார்.

காங்கிரஸ் ஆதரவா?

ஆதரவு அளிக்க மாட்டோம் என்று அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவர் ஏதோ பொடி வைத்துப் பேசியது போலவே தெரிகிறது என்கின்றனர்.  இது குறித்து திருநாவுக்கரசரிடம் பேசினோம்.

"யாரும் எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை என்று சொன்னேன். யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்ய எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று (பிப்ரவரி 17) மாலை நடைபெறுகிறது. எம்.எல்.ஏ-க்களுடன் கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்போம்" என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அணிக்கு மறைமுகமாக பி.ஜே.பி ஆதரவு அளிக்கிறது என்ற பேச்சு இருக்கிறது. இப்போது மைலாப்பூர் எம்.எல்.ஏ- நட்ராஜ் கலகக்குரல் எழுப்பி இருக்கிறார். நட்ராஜ், அண்மையில் பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் உண்டு.

அதன் பின்னர்தான் இப்படி ஒரு அதிரடி முடிவை அறிவித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். எனவே, பி.ஜே.பி-க்கு எதிராக, மதவாதத்துக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தில் காங்கிரஸ் கட்சி கடைசி நேரத் திருப்பமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஜெயலலிதா, உடல் நலம் இன்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, திருநாவுக்கரசர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துவருகிறார். ராகுலை சென்னை வரவழைத்து, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்கவைத்ததும் திருநாவுக்கரசர்தான். எனவே, தமிழக அரசியலில் நாளை 11 மணிக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது.

- கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்