எஸ்.எஸ். வாசன் கதையில் திரைப்பட வாழ்வைத் துவக்கிய எம்.ஜி.ஆர்! - நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் - 12

எம் ஜி ஆர்

சினிமா வாய்ப்புக்காக கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர் சகோதரர்கள் அவரது வீட்டில் சந்தித்தபோது, அப்போது தான் நடித்துவரும் நேஷனல் ஸ்டுடியோ தயாரிப்பான ராஜ்மோகன் என்ற படத்தில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் அவர். ஆனால் அதற்கு பல மாதங்கள் கடந்தன. சகோதரர்கள் சோர்ந்த ஒரு சமயம், கம்பெனியில் தன்னைவிட காளி.என் ரத்தினத்துக்கு நல்ல வாய்ஸ் இருப்பதால் அவரை சென்று சந்திக்கும்படி சொன்னார் அவர். சகோதரர்களுக்கு உதறல் கண்டுவிட்டது. நாடக கம்பெனியில் ஏற்கனவே அவருக்கும் சகோதரர்களுக்கும் ஏழாம் பொருத்தம். இதில் எங்கே நமக்கு உதவப்போகிறார் என நம்பிக்கை இழந்தனர்.

தன் தாயாரிடம் இதை சொல்லி வருத்தப்பட்டனர். “டேய் பெரிய மனுஷங்க எப்போதும் கோபத்தை மனசில வெச்சிக்க மாட்டாங்கடா...குழம்பாம கேசவன் சொன்னமாதிரி ரத்தினத்தை போய்ப் பாருங்க...” தாயார் தந்த தைரியத்தில் சகோதரர்கள், காளி.என் ரத்தினத்தை சந்திக்க முடிவெடுத்தனர். தாயாரின் வாக்கு பலித்தது. ரத்தினம் அன்பொழுகப் பேசினார். படத்தின் இயக்குனரிடம் சகோதரர்களை அறிமுகப்படுத்தி வாய்ப்பு தரும்படிகேட்டார். 

எம்.ஜி.ஆரை பல கோணங்களில் பரிசோதித்துவிட்டு நடித்துக்காட்டச் சொன்னார் இயக்குனர். மனோகரன் நாடகத்தின் பாடங்களை பேசி பல பாவத்துடன் நடித்துக்காட்டினார் எம்.ஜி.ஆர். கிட்டதட்ட ஒருமணிநேரத்திற்கு மேலாக இதுதொடர்ந்தது. எப்படியும் வாய்ப்பு கிடைத்துவிடும் என நம்பிக்கை பிறந்தது எம்.ஜி.ஆருக்கு.

எம். கந்தசாமி முதலியார்

ஆனால் நடந்தது வேறு. “தம்பி நல்லா நடிக்கிறே...அழகா இருக்க...ஆனால் உன் தாடையில் ஒரு சின்ன பள்ளம் இருக்கே. அது காமிராவில் எடுப்பா தெரியும்...போய் வாங்க பார்ப்போம்” - இதயத்தில் எரிமலைக் குழம்பை ஊற்றியதுபோன்ற அதிர்ச்சிக்கு ஆளானார்கள் சகோதரர்கள். வீடு திரும்பும் வரை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. பேசவும் முடியவில்லை! இருவரிடமும் அத்தனை இறுக்கம். சக்கரபாணிக்கு அதை ஜீரணிக்க கஸ்டமாக இருந்தது. “பிறந்தது முதல் எம்.ஜி.ஆரை கொஞ்சுபவர்கள் அவரது தாடையில் இருக்கும்  பள்ளத்தைக் கிள்ளி முத்தமிடுவர். ராம்சந்தருக்கு இது ராசியானது என்பார்கள். ஆனால் இன்று சினிமா இயக்குனர் சொன்னது அவன் எதிர்கால வாழ்க்கையையே அல்லவா கேள்விக்குறியாக்கியிருக்கிறது. அப்படியானால் தம்பியின் எதிர்காலம் அவ்வளவுதானா...” சக்கரபாணி உள்ளத்தில் ஆயிரம் சிந்தனைகள்.

வீட்டிற்கு வந்தபின் வழக்கம்போல் தாயிடம் பேசி ஆறுதலடைந்தார்கள். இப்போது எம்.கந்தசாமி முதலியாரை சென்று சந்திப்பதென முடிவெடுத்தனர். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. வழக்கம்போல் ஆறுதலாகப் பேசியவர், சகோதரர்களின் நிலை குறித்து விசாரித்தார். 

சதி லீலாவதி

அப்போது, தான் பங்கேற்றிருக்கும் ஒரு படத்தில் அவர்களுக்கு வாய்ப்பு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார். எம்.ஜி.ஆரின் திரைப்பட வாய்ப்பு கனிந்தது.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசன் கதையில், அமெரிக்க இயக்குனர் எல்லிஸ் ஆர் டங்கனின் இயக்கத்தில், எம்.கந்தசாமி முதலியார் கதை வசனத்தில் உருவான சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது...

தன் முதல் பட வாய்ப்பு குறித்து எம்.ஜி.ஆர் என்ன சொல்கிறார் என பார்ப்போமா...

- எஸ்.கிருபாகரன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!