வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (21/02/2017)

கடைசி தொடர்பு:16:56 (22/02/2017)

நான் எங்கே இருக்கேன்னு நீங்க ஏன் கேட்குறீங்க...?” : தகிக்கும் எம்.எல்.ஏ

கூவத்தூர்

டந்த ஏழாம் தேதி திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தியானத்தை மேற்கொண்டார். சுமார் 45 நிமிடம் தியானத்தில் இருந்துவிட்டு பின்னர் மௌனம் கலைத்து பன்னீர்செல்வம் பேசிய வார்த்தைகள் அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியது. "நிர்பந்தித்த காரணத்தால்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்.'' என்று சசிகலா மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார் ஓ.பன்னீர்செல்வம்.

இதனைத்தொடர்ந்து இரண்டு தரப்புக்கான அதிகாரப்போட்டி உச்சத்தை எட்டியது. ஒரு புறம் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் என்றும் மற்றொரு புறம் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் என்றும் பிரிந்தனர். இந்த நிலையில், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது எம்.எல்.ஏ-க்களை சசிகலா தரப்பினர் மிரட்டி வைத்துள்ளார்கள் என்று புகார் எழுந்தது. அது மட்டுமின்றி ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ-க்களின் தொலைபேசிகளின் இயக்கமும் முடக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதும், ''எம்.எல்.ஏ-க்கள் யாரும் மிரட்டப்படவில்லை. இங்கு சுதந்திரமாக இருக்கிறார்கள்.'' என்று சசிகலா பேட்டி அளித்தார். அவ்வாறு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போதே பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து க்ரீன்வேஸ் சாலைக்கு விரைந்தார் எம்.எல்.ஏ சரவணன். அப்போது பேசிய அவர், 'கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தான் மாறுவேடத்தில் தப்பித்து வந்ததாகத் தடாலடிக் குற்றச்சாட்டை வைத்தார்.

இப்படி இரு தரப்புக்கு இடையே மோதல் போக்கு நீடித்துக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சசிகலாவின் தலையில் இடியாய் விழுந்தது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீது  தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என்று கூறியது. இதனால் சசகிலா சிறைக்குச் சென்றார். அவர் சிறை செல்வதற்கு முன் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், டி.டி.வி தினகரனை அ.தி.மு.க  துணைப்பொதுச் செயலாளராகவும் நியமித்துவிட்டுச் சென்றார். எடப்பாடி பழனிசாமிக்கு போதுமான ஆதரவு எம்.எல் .ஏ-க்கள் இருந்தபோதும்  ஆளுநர்  மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு கொடுத்தார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் அவை களேபரமானது.

தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு சபாநாயகர் தனபால் வாக்கெடுப்பு நடத்தினார். அப்படி எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அரசை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததாகவும் தெரிவித்து, அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தார்  சபாநாயகர் தனபால். மக்கள் செல்வாக்கை இழந்துள்ள எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு  5 ஆண்டுகளையும் நிறைவு செய்வது கேள்விக்குறியே என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்த எம் .எல் .ஏ-க்கள் மீது தொகுதி மக்கள்  கடும் கோபத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர். மேலும் 122 எம்.எல்.ஏ-க்களும் தொகுதி பக்கம் செல்லவே அஞ்சுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர், ''அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மக்களைப் போய் சந்திக்கட்டும்... அப்போது தெரியும் உங்களுடைய பெரும்பான்மை...'' என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சட்டமன்ற உறுப்பினர்கள்  விடுதிகளிலேயே முடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து அம்பத்தூர் எம்.எல்.ஏ அலெக்ஸாண்டரை தொடர்புகொண்டு பேசினோம். "நான்  தொகுதிப்பக்கம் போய்க்  கொண்டேதான் இருக்கிறேன். என் வீடும் அதே தொகுதியில் இருப்பதால் எனக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எந்த பிரச்னையும் இல்லை.'' என்றார். மேலும், ''எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்... அந்தப் பகுதிக்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்."  என்றார்.

அதனைத்தொடர்ந்து, ''அனைத்து எம் .எல் .ஏ-க்களும் விடுதியிலேயே  தங்கி இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளதே அது குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்ற கேள்வியை முன்வைத்தபோது... 

"என்ன பேச வேண்டும் அதை மட்டும் ஒழுங்கா பேசுங்க... ஏடாகூடமா பேசினா பிறகு நாங்களும் அதே மாதிரி பேச வேண்டி வரும். விடுதியில் இருக்கேனா? இல்லையா? என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. பிரஸ் ரிப்போர்ட்டர் மாதிரி பேசுங்க... விடுதியில் இருக்கேனா? இல்லையா என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது... விடுதியில்  இருக்கேனா என்று ஏன் கேட்கிறீர்கள்? அதையல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது.'' என்று வெடித்தார். 

ஏற்கெனவே சென்னை அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதை பிடிக்காத தொண்டர் ஒருவர் எம்.எல்.ஏ-வுக்கு போன் செய்து, ''தயவு செய்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம்.'' என்று பேசியுள்ளார்.

இதற்கு, பதிலளித்த அம்பத்தூர் எம்.எல்.ஏ, தொண்டரிடம், ''நீங்கள் எனக்குத்தான் ஓட்டு போட்டுள்ளீர்கள்... சின்னம்மாவுக்கு ஆதரவு தெரிவிப்பது எனது தனிப்பட்ட உரிமை. அதையெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-வான மைலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த நடராஜனிடம் பேசியபோது, ''பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்கு என் தொகுதி மக்கள்  வரவேற்றுள்ளார்கள். பன்னீர்செல்வத்துக்கும் என்னுடைய தொகுதியில் மிகுந்த செல்வாக்கு  உள்ளது. தொடர்ந்து மக்களை  நான் சந்தித்து வருகிறேன்." என்றார்.

அனைத்து விவகாரங்களும் மறந்துபோன பிறகு தொகுதி பக்கம் தலைகாட்டலாம் என்று  காத்திருக்கிறார்களா?

 - கே. புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்