அரசியலில் குதிக்கிறாரா துர்கா ஸ்டாலின்?

துர்கா ஸ்டாலின்

 

ம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு குறித்து ஆளுநரிடம் தி.மு.க நேரில் முறையிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் திடீர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல் துறை கைதுசெய்தது. இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று (22-2-17) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் திருச்சியில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யபட்டிருந்தன. அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்ற நிலையில்... துர்கா ஸ்டாலின், செல்வி ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உள்ளிட்ட தி.மு.க மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர். இதுவரை ஸ்டாலின் நிகிழ்வு என்றால், அந்த ஊருக்கு மட்டுமே சென்று வந்துள்ளார் துர்கா ஸ்டாலின். அப்படியிருக்கையில், தற்போது அவர் உண்ணாவிரதத்திலும் பங்கேற்றுள்ளார்.

தி.மு.க-வில் இதுவரை கருணாநிதி குடும்பத்து பெண்களில் கனிமொழி மட்டுமே அரசியல் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது  துர்கா ஸ்டாலின் மற்றும் செல்வி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, "ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க-வின் நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களுக்கு உடன் சென்றுள்ளார். அங்கு, அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

தளபதி சென்னையில் இல்லாத காரணத்தால் அவர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து நடக்கும் போராட்டம் என்பதால், அனைவரும் பங்கேற்கலாம் என்ற அடிப்படையில்கூட அவர் பங்கேற்றிருக்கலாம். இன்றையச் சூழ்நிலையில் சில பெண்கள் கட்சியை வளர்ப்பதற்காகத் தன் கணவரோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அப்படி இவரும் உறுதுணையாக இருக்க நினைத்திருக்கலாம். பொதுவாக தி.மு.க-வில் கனிமொழி அளவுக்கு வேறு பெண்கள் அவ்வளவாக பிரபலம் ஆகவில்லை. அதனால் பெண்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்காக போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கலாம்." என்றனர்.

பெரும்பாலும் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்வுகள், போராட்டங்களுக்கு தயாளு அம்மாள் உடன் செல்வார். கருணாநிதிக்குத் தேவையான உதவிகளையும் அவர் செய்துகொடுப்பார். அதேபோன்று ஸ்டாலின் பங்கேற்ற போராட்டம் மற்றும் நிகழ்வுகளிலும் துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். அவர்,கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்காக வாக்குக்கேட்டு கொளத்தூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஏறி இறங்கினார் .

இதனைத்தொடர்ந்து தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் துர்கா ஸ்டாலின் மற்றும் செல்வி இருவரும் பங்கேற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

- கே.புவனேஸ்வரி

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!