வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (22/02/2017)

கடைசி தொடர்பு:20:59 (22/02/2017)

எந்த கடவுள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கச் சொல்கிறார்?

கடவுள்

ந்தியாவில் கடவுள்  என்னும் சொல் மிகப்பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. மதங்களும் இதனை விட்டுத்தருவதாக இல்லை. கடவுளை அடிப்படையாகக் கொண்டு வன்முறை தொடங்கி சொத்துக்குவிப்பு வரை அனைத்து பிரச்னைகளையுமே இங்குள்ளவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 'பிரச்னைகளை கடவுளிடம் முறையிட்டால் எல்லா பிரச்னையும் தீர்ந்து விடும்' என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. அதற்காக கடவுளிடம் மண்டியிட்டும், கட்டளையாகவும் வழிபடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தாங்கள் வேண்டியது நடந்தால் காணிக்கை செலுத்துவதாகவும் கடவுளிடமே ஒப்பந்தமும் போடுகிறார்கள் சிலர். இன்னும் சிலரோ கடவுளை வைத்தே வியாபாரம் செய்கிறார்கள். மக்கள் இப்படிச் செய்வதை கடவுள் உண்மையில் எதிர்பார்க்கிறாரா?

கடவுள் நம்பிக்கை என்ற மூட நம்பிக்கை 

காலம் காலமாக கடவுள் நம்பிக்கை - வழிபாடு என்ற பெயரில் பலரும் தங்களின் உடலை வருத்திக்கொண்டு பரிகாரங்களும், சம்பிரதாயங்களும் செய்து வருகிறார்கள். 'கடவுளிடம் சொன்னால், கண்டிப்பாக நிறைவேறும்' என்ற நம்பிக்கை ஒருவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு வழிபாடுகளும் தீவிரமாகின்றன. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையிலும் இதுபோன்ற நம்பிக்கைகள் நிறைந்து கிடக்கின்றன. வேண்டுதல்கள், காணிக்கைகள், வழிபாடுகள் எல்லாமே அவரவர் வசதிக்கும், வயதுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. ஒருவரின் உடலை வருத்திக் கொண்டு பரிகாரங்கள் செய்வதை எந்தக் கடவுளும் விரும்புவதில்லை. 

திருப்பதி கோயிலுக்குத் தங்கம்

இந்தியாவின் பணக்கார கடவுள்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான்.! நாளுக்கு நாள் அந்த கோயிலுக்கு வரும் வருமானம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த மாநில மக்கள் மட்டும் இல்லாமல், வேறு மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களும் கோடிகளைக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திருப்பதி கோயிலுக்கு 5.6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வழங்கியுள்ளார். தினசரி கோடிகளை பார்க்கும் கோயிலுக்கு, முதலமைச்சரும் கோடிகளை வழங்கியுள்ளார்.

திருப்பதி

Courtesy:The newsminute

133 ஏக்கரில் சிவன் சிலை

கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில், ஈஷா யோகம் மையம் சார்பில், ஆதியோக சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. 133 ஏக்கர் நிலத்தை வளைத்து  112 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை, நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்யப்பட்ட தொகைகளைக் கொண்டே இதற்கான செலவுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை யார் தருகிறார்கள்? இந்த சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியும் வரவிருக்கிறார். விவசாய நிலங்களை அபகரித்தும், இயற்கை வளங்களை அழித்துமே இந்த ஆதியோக சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒருவேளை உணவுக்கான திண்டாட்டம்

இப்படி கோடிகளில் கடவுளுக்காக செலவு செய்யும் ஊரில்தான் ஒருவேளை உணவு இல்லாமல் உயிரை இழக்கும் அவலமும் நடக்கிறது. தெருக்களில் வாழ்க்கை நடத்தும் மக்கள் உண்ண உணவும், உடுத்த உடையும் வாங்க காசில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 

கல்வி மற்றும் மருத்துவம்

அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் கட்டாயம் கிடைத்தாக வேண்டும். தனியொரு மனிதனுக்குத் தேவையான கல்வியும் மருத்துவ வசதியும் போதிய அளவுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் நாடே தன்னிறைவு அடைந்த நாடாகக் கருதப்படும். 

இப்படி கடவுள்களுக்காக ஒரு ஆண்டில் கொட்டப்படும் தொகையைக் கொண்டு நம் நாட்டையே தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றிவிட முடியும் என்பதுதான் இங்கே நாம் கவனிக்கத்தக்கது. 

வறுமை

மக்களிடம் மாற்றம் தேவை

கடவுளுக்காக பணத்தை செலவிடுவது அவரவர் வசதியையும், விருப்பத்தையும் பொருத்தது. ஆனால், பசியால் மக்களின் உயிர் போய்க் கொண்டிருக்கும் சூழலில், கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்பவர்களையும், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மத்தியில், கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில் கொட்டித் தீர்ப்பவர்களையும் மனநிலை மாற்றம் செய்ய வேண்டிய தருணம் இது. 

கடவுள் மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது கோடிக்கணக்கான பணமோ, உடலை வருத்திக் கொள்ளும் பரிகாரமோ இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒருவருக்கு மன நிம்மதியும், சந்தோஷமும் வேண்டுமெனில் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், போட்டிகள் பொறாமைகள் இல்லாமலும் இருந்தாலே போதும்; எல்லா வகையான இன்பங்களும் தானாகவே வந்து சேரும். 

உணவுக்கு திண்டாடுபவருக்கு ஒருவேளை உணவளித்தால் அவரின் வாழ்த்து ஈடு இணை இல்லாதது. 'அனைவரும் சரிசமம்' என்ற எண்ணத்தோடு பார்க்க ஆரம்பித்தாலே கடவுளின் அத்தனை அருளும் கிடைக்கும் என்ற சிந்தனை மக்களுக்கு வர வேண்டும்.

இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் வேரோடு அழித்துவிட்டு கோயில்களும் மண்டபங்களும் கட்டுவதால் மட்டும் உண்ண உணவு கிடைத்து விடாது. விவசாயம் அழிந்தால், அதன்பிறகு கோடிகள் வைத்திருந்தாலும் ஏழைகளாக இருந்து உயிர் இழக்கும் சூழல்தான் அனைவருக்கும் ஏற்படும். கடவுள் இருப்பதை நம்பி, அவரிடம் குறைகள் கூறி முறையிடுவோர் முதலில் சிந்திக்க வேண்டியது இதைத்தான்.

கடவுள் உங்களை காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பதெல்லாம் தனிப்பட்ட கருத்து. கடவுளின் பெயரால் நடக்கும் வர்த்தகத்தையும், மூட நம்பிக்கைகளையும் வளர்த்துவிட வேண்டாம்.  கடவுளை விற்பனை பொருளாக்காதீர்கள். சக மனிதனுக்கு தேவைப்படும் உதவியை உங்களால் இயன்றவரையில் செய்யுங்கள். அதுதான் கடவுள் தன்மை. நம் உடன் இருப்பவரின் மகிழ்ச்சியில் கடவுளை காண்போம். அதில் வர்த்தகம் இருக்காது.!

 - நந்தினி சுப்பிரமணி

படங்கள்: தி.விஜய், வீ.சக்தி அருணகிரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்