வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (24/02/2017)

கடைசி தொடர்பு:09:23 (24/02/2017)

“என் வாழ்வை வழிநடத்தியது விதி... எல்லாம் என் தலையெழுத்து!” - ஜெயலலிதா கடந்த பாதை

ஜெயலலிதா

இரும்புப் பெண்மணி, கர்வம்கொண்டவர், யாருடனும் ஒட்டாத சுபாவம்கொண்டவர் என எத்தனை அடைமொழிகளில் வேண்டுமானாலும் ஜெயலலிதாவை விமர்சிக்கலாம். ஆனால், ஜெயலலிதாவின் பிம்பம் அதுவல்ல. காலம் முழுவதும் தன்னை நிஜமாய் நேசிக்கும் ஓர் உறவை தேடித்தேடி சலித்தவர் அவர். தாய் சந்தியாவுக்குப்பிறகு அவருக்கு அப்படி ஓர் உறவு கனவிலும் அமையவில்லை. அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் நாம் கண்ட ஜெயலலிதா.

எல்லோரையும்போல் சந்தோஷத்தால் சூழப்பட்ட ஓர் உறவுகளின் மத்தியில்தான் அவர் பிறந்தார். ஆனால், அது நிரந்தரமாக அவருக்கு வாய்க்கவில்லை. தனது உலகமாய் தாயை மட்டுமே பார்த்தார். அரவணைத்து ஆறுதலடையும் வயதில் தாய் அவருடன் இல்லை. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அவர்களையே துறந்துவிட்டு பொருள் தேடிச்சென்றார் சந்தியா. மகள் பருவம் அடைந்து பணம், புகழ், அந்தஸ்து என தேடித்தேடி அதில் திளைத்த ஒருநாளில், சந்தியா இல்லாமல் போனார். இன்பமும் துன்பமும் நெருங்கி உறவாடும் இந்த நேர்க்கோட்டு வாழ்க்கை அரிதான சிலருக்கே வாய்க்கும். ஜெயலலிதா அதில் ஒருவர். அம்மா இறந்ததோடு அவரது உலகம் இருண்டுபோனது. 22 வயதில் ஓர் இளம்பெண் யாருமின்றி சென்னையின் மத்தியில் கலங்கி நிற்பது எத்தனை கொடிய அனுபவம்? ஆறுதல் சொல்வதாகக் கூறிக்கொண்டு வந்த உறவுகள் கைகளைக் குலுக்கியபடியே கொத்துச்சாவியைத் தேடினர் கண்களால். 

எழுபதுகளின் முற்பகுதியில், போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா மயக்குமுற்று நிலைகுலைந்த ஒருநாளில், அவர் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் கொத்துச்சாவியை யார் வைத்துக்கொள்வது என சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் நெருங்கிய உறவுகள். எங்கிருந்தோ வந்த எம்.ஜி.ஆர்-தான் அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியதானது. இப்படி உறவுகளால் இதயம் கசந்துபோன ஒருநாள்தான் அவருக்குத் தோன்றியிருக்கவேண்டும், “ரத்த உறவுகள் என்று கூறிக்கொண்டு ரத்தத்தைக் குடிப்பவர்களைக் காட்டிலும் ஊதியத்துக்கு உழைப்பவர்கள் உயரந்தவர்கள்” என்ற சிந்தனை. ஆனால், வித்தியாசம் பெரியதாக ஒன்றும் இல்லை. ஜெயலலிதாவின் இளகிய இதயத்தை கிழித்துப்போட உறவுகள் எடுத்துக்கொண்டது, சில மாதங்களை.... ஜெயலலிதாவின் 'நம்பிக்கைக்குரியவர்கள்' எடுத்துக்கொண்டது சில வருடங்களை! அவ்வளவுதான் வித்தியாசம். ஆக, எல்லோருக்கும் ஜெயலலிதா பொன்முட்டையிட்ட வாத்துதான். 

ஜெயலலிதா

ஆறு முறை தமிழக சட்டசபையை அலங்கரித்த அவரது புகைப்படங்கள், இன்று ஒரு சாதாரண அரசு அலுவலகத்தில்கூட இருக்கக்கூடாது என தீர்ப்பு பெற்றுத்தந்தவர்கள் அந்த நம்பிக்கைக்கு உரியவர்கள்தான். விமர்சனங்களோடு வாழவைத்தும் விமர்சனங்களோடே வழியனுப்பியும் வைத்துவிட்ட அவர்கள் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னும் இப்போதும் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பாமல் ஜெயலலிதாவின் 'அரசியல் ஆடை'யில் மிளிர விரும்புவதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம். விமர்சனக் கணைகளாலும் வாட்ஸ் அப் செய்திகளாகவும் ஜெயலலிதாவை நாம் வறுத்தெடுத்துக்கொண்டிருந்த ஒருநாளில்தான், ஜெயலலிதா தன் மொத்த வாழ்க்கையையும் தன் இதயத்திலிருந்து உரித்தெடுத்து கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஒன்றில், கட்சியினர் முன்வைத்தார். 

31-1-2013 அன்று நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், ''பொதுவாக, பெண்கள் இளம்வயதில் தகப்பனாரைச் சார்ந்திருப்பார்கள்; பெரியவர்கள் ஆனபின் கணவரைச் சார்ந்திருப்பார்கள்; வயதானபிறகு பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். ஆனால், என்னைப்போன்ற சில பெண்களும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக்கூடிய ஒரு கொடுப்பினை எனக்கு இல்லை. யாரையும் சார்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை. எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் எனக்கு நானேதான் முடிவுகளை எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக்கொண்டு இப்படியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய தனித்திறமை என்று நீங்கள் சொல்லலாம். நான் சொல்லமாட்டேன். இது என்னுடைய விதி. தலையெழுத்து” - வாழ்வின் அந்திம காலத்தில் ஜெயலலிதாவிடமிருந்து வந்துவிழுந்த இந்த வேதனையான வார்த்தைகள் அவரது வாழ்வின் வாக்குமூலம் எனலாம்.

எட்டு வயது முதல் அவரது வாழ்வை வழிநடத்தியது, அவர் குறிப்பிட்டதுபோல் விதிதான். தன் திரைப்பட வாழ்வில் திறமையான நடிகை என பெயரெடுத்தாலும் அவர் அந்த லட்சியத்துடன் திரைவாழ்க்கையைத் தொடங்கியவர் அல்ல. தாயார் பிரபல நடிகையாக இருந்தபோதும் அவருக்கு சினிமா மீது பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. எட்டு வயதில் அவர் அறிமுகமான முதற்படமான, 'ஸ்ரீசைல மகாத்மியம்' அவரது விருப்பத்துக்கு மாறாகவே அமைந்தது. அவரது முதல்பட அறிமுகம் திட்டமிட்டு நடந்ததல்ல. ஒரு நள்ளிரவில் அது நிகழ்ந்தது. அப்போது அவர் பெங்களூருவில் படித்துக்கொண்டிருந்தார். விடுமுறைக்காகச் சென்னை வந்தவர், தனியே இருக்கப் பிடிக்காமல் தாயுடன் படப்பிடிப்புக்கு உடன்சென்றார்.

ஜெயலலிதா

அன்று பால பார்வதியாக நடிக்கவேண்டிய சிறுமி வரவில்லை. முக்கியக் காட்சி அது. சிறுமி இல்லையென்றால், பல ஆயிரங்கள் அன்று தயாரிப்பாளருக்கு நஷ்டம். அதனைத் தவிர்க்க படப்பிடிப்புத் தளத்தில் துருதுருவென ஓடியாடிக்கொண்டிருந்த ஜெயலலிதாவை நடிக்கவைக்க தயாரிப்பாளர் சந்தியாவிடம் கேட்டார். சந்தியா முதலில் மறுத்தார். தயாரிப்பாளரின் சம்மதத்தின்பேரில் வற்புறுத்தி நடிக்கவைக்கப்பட்டார் ஜெயலலிதா. ''இனி, இப்படி என்னை வற்புறுத்தக்கூடாது'' என்ற உத்தரவாதத்துடன்தான் நடிக்க ஒப்புக்கொண்டார் அவர். ஆனால் விதி அடுத்த 15 ஆண்டுகளுக்குப்பின் அவரது நூறாவது படத்துக்கான பாராட்டுவிழா நடைபெற வைத்தது. 

தான் மட்டுமல்ல, தன் தாயார் நடிப்பதிலுமே அவருக்கு விருப்பம் இல்லை. டாக்டர், இன்ஜினீயர் மகள்களாக தன் வகுப்புத் தோழிகள் இருக்க, நடிகையின் மகள் எனச்சொல்ல அவருக்கு வெட்கமாக இருந்தது. சர்ச் பார்க் கான்வென்டில் அவர் படித்துக்கொண்டிருந்தபோது, இன்றைய ஜெமினி மேம்பாலம் உள்ள இடத்தின் அருகே சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. சந்தியா அரைகுறை ஆடையில் இருப்பதுபோன்ற அந்த போஸ்டரைக் குறிப்பிட்டு ஜெயலலிதாவைக் கேலி கிண்டல் செய்தனர் அவரது தோழிகள். “உன் அம்மா, யார் தோளுலேயோ ஒய்யாரமா சாஞ்சிக்கிட்டு இருக்காங்கடி. பார்க்கலையா நீ.”  ''அது என் அம்மா இல்லை... அவங்க அப்படியெல்லாம் நடிக்கமாட்டாங்க'' என எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேலி குறையவில்லை. அவமானத்துடன் பாதி வகுப்புடன் வீட்டுக்குப் புறப்பட தலைமை ஆசிரியரிடம் சென்று பர்மிஷன் கேட்டார். காரணம் கேட்க, நடந்ததைச் சொன்னார்.

ஜெயலலிதாதோழிகளை விசாரித்தபோது... அவர்கள், போஸ்டர் விவகாரத்தைச் சொல்லியுள்ளனர். ''படிக்கிற வயசுல சினிமா போஸ்டரைத்தான் பார்த்துட்டிருக்கீங்களா'' என மாணவிகளைக் கண்டித்த ஆசிரியை,  உடனடியாகப் பள்ளி ஊழியர் ஒருவரை அனுப்பி போஸ்டரைப் பார்த்துவரச் சொன்னார். அதன்பின்னர்தான் தெரியவந்தது. போஸ்டரில் இருப்பது தமிழ் நடிகை சந்தியா அல்ல... சாந்தாராம் பட கதாநாயகியான வட இந்திய நடிகை சந்தியா. தோழிகள் ஜெயலிதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இதுமுதல்தான் தாயாரை சினிமாவிலிருந்து விலகச்சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தார். ஆனால் விதி, அடுத்த 2 வருடங்களில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகும்படிச் செய்தது.

1964-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெட்ரிக் பள்ளித்தேர்வு முடிந்து தன் கல்லுாரிக் கனவில் இருந்த ஜெயலலிதாவை, மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி வந்தது. பொருளாதாரச் சிக்கலைச் சொல்லி, அதற்கு மகளை சம்மதிக்கவைத்தார் சந்தியா. ஆதர்த்தி சுப்பா ராவ் என்ற பிரபல கன்னட இயக்குநரின் படம் அது. அம்மாவின் வற்புறுத்தலுக்காக மூவி டெஸ்ட்க்குச் சென்றார் மகள். முதல்நாளோடு அவரைத் திருப்பியனுப்பிய இயக்குநர், அதற்காகக் குறிப்பிட்ட காரணம் என்ன தெரியுமா...?

“ஷீ ஈஸ் அன்ஃபிட் ஃபார் ஃபிலிம். சினிமாவுக்கேற்ற முகவெட்டோ, அழகோ துளியும் இந்ப்த பெண்ணிடம் இல்லை.” - பின்னாளில் ஜெயலலிதாவைப் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல போயஸ் கார்டனில் காத்துநின்ற கார்களில் அவருடையதும் ஒன்று. விதிதானே இது?! அதன்பிறகு வந்த வாய்ப்பு, 'நன்ன கர்த்தவ்யா.' வேதாந்தம் ராகவய்யா இயக்கிய அந்தப் படத்தில் சந்தியாவும் நடித்திருந்தார். படத்தில் இளம்பெண் வேடத்துக்கு ஆள் தேவைப்பட, அன்றைய தனது பொருளாதாரச் சூழலை எடுத்துச் சொல்லி மகளைச் சம்மதிக்கவைத்தார் சந்தியா. திரையுலகில் ஜெயலலிதா முறையாக அறிமுகமான முதற்படம் இதுதான். பெரும் மத, சடங்கு சம்பிரதாயங்களில் மூடத்தனமான நம்பிக்கை கொண்டவராக பின்னாளில் விமர்சிக்கப்பட்ட ஜெயலலிதா, இந்தப் படத்தில் ஏற்றிருந்த வேடம் என்ன தெரியுமா... இளம் விதவை! 

தமிழில் அவர் அறிமுகமான படத்தின் பெயர், 'வெண்ணிற ஆடை'. அதே விதவை வேடம்தான். தன் பிள்ளையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் முதல் பட வாய்ப்பு அமங்களமாக அமைந்ததில் சந்தியாவும் கவலைகொள்ளவில்லை. ஜெயலலிதாவும் அலட்டிக்கொள்ளவில்லை. பின்னாளில் சினிமா இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன் முதல் பட அனுபவம் குறித்து பேசிய அவர், போகிற போக்கில், “ஒரு இன்ட்ரஸ்டிங் என்ன தெரியுமா... இந்தப் படத்தில் நான் ஏற்றது இளம்விதவை வேடம். சிறுவயது, அதுவும் முதற்படம்... மகளை இந்த வேடத்தில் நடிக்கவைக்கலாமா என குடும்ப நண்பர்கள் என் அம்மாவிடம் கேட்டதற்கு, நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடுமா என அவர்களின் வாயை அடைத்தார்” என சாதாரணமாகச் சொன்னார்.

இன்னொரு பேட்டியில் இதே கேள்விக்கு, “ஆன்டி சென்டிமென்ட் என்பார்களே... என்னைப் பொறுத்தவரை அது பொருளற்ற வார்த்தை. என் முதல் படத்தில் விதவை வேடம். மேலும், அந்தப் படம் வெளிவரவே 2 ஆண்டுகள் ஆயின. ஆனாலும் இன்று நான் ஒரு பிரபல நடிகையாக இருக்கிறேன் அல்லவா” என்றார். பகுத்தறிவு நிறைந்த ஒருவரை அப்படியே நேர்மாறான பிம்பத்தை பொருத்திப் பார்த்தது விதியன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்? 

ஜெயலலிதா

பெங்களூரு, சென்னை என தான் படித்த இரு இடங்களிலும் ஜெயலலிதா படிப்பில் படுசுட்டி. ஆங்கிலமும் வரலாறும் அவருக்கு அநாயாசமாக வந்தன. வகுப்பில் எப்போதும் முதல் மாணவி அவர்தான். ''அவரது நுனி நாக்கு ஆங்கிலம் அசாதாரணமானது'' என்பார்கள். எம்.ஜி.ஆரின் முதற்படத்தை இயக்கிய அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் பாராட்டிய ஆங்கில அறிவு அவருடையது. ஆங்கில இலக்கிய ஆசிரியை ஆவதுதான் அவரது இளம்வயது கனவாக இருந்தது. ஆனால், மெட்ரிக் பள்ளியில் மாநில அளவில் முதலிடம் பெற்று, இந்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைக்கப்பெற்று இன்னும் சில தினங்களில் ஸ்டெல்லா மேரீஸில் சேர இருந்த நிலையில்தான் வெண்ணிற ஆடை வாய்ப்பு வந்து கதவை தட்டியது. பிரபல இயக்குநர் படத்தில் முதல் தமிழ்ப்பட வாய்ப்பு, அரிதான விஷயம், குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல் எல்லாம் சேர்ந்து ஸ்காலர்ஷிப் கடிதத்தை டிரங்க் பெட்டிக்கு அனுப்பியது. மேக்கப் பெட்டியை கும்பிடவைத்தது. 

'வெண்ணிற ஆடை'க்குப்பின் அன்றைக்கு பெரிய நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஒரு புதுமுகத்துக்கு அது பெரும் அதிர்ஷ்டம். ஆனால், படத்தின் முதல்நாளே அது முடிவுக்கு வரும் நிலை உருவானது. படத்தின் நாயகனை அவமதித்துவிட்டதாக இயக்குநர் குறைபட்டுக்கொள்ள கோபத்தில் வீடு வந்தவர், கதவை சாற்றிக்கொண்டுவிட்டார். பந்துலுவே வந்து கேட்டும், ''இனி, தான் நடிக்கப்போவதில்லை'' என உறுதியாகச் சொல்லிவிட்டார். ஆனால், விதி வலியது. அது, சந்தியாவின் நாக்கில் நயமாக உட்கார்ந்து மீண்டும் அம்முவை அரிதாரம் போடவைத்தது. விதி இத்தோடு நிறுத்தியதா...

 

ஜெயலலிதா

பிரபல நடிகையான பின்னும் ஒரு பெண்ணுக்குரிய இயல்பான வாழ்வைத்தான் அவர் விரும்பினார். இளம் வயதில் ஆங்கில நடிகர் ராக் ஹட்சன்தான் அவரின் ஆதர்ஷ நாயகன். ''வாழ்க்கையில் ஒருமுறையாவது அவரைச் சந்தித்து ஆட்டோகிராப் வாங்குவேன்'' என சபதம் செய்தார். “எல்லோரையும்போல் தோள் சாய்ந்துகொள்ள ஒரு கணவன், ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என இரு பிள்ளைகள்.” - இதுதான் திரையுலகில் இருந்து விலகியபின் தனது வாழ்க்கையாக இருக்கும் என ஒரு பெண்ணாகத் தனது ஆசையை பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் புகழ்பெற்ற நடிகையாக இருந்தபோது, அவரைத் திருமணக்கோலத்தில் 'போட்டோ ஃபியுச்சர்' கட்டுரை வெளியிட்டிருந்தது. புகைப்படங்களில் ஒரு நடிகைக்குரிய செயற்கையான பாவங்கள் இன்றி ஒரு மணமகளாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால், சந்தியாவின் திடீர் மரணமும் அதைத்தொடர்ந்த சம்பவங்களும், அவரது ஆசைகளின் இறக்கைகளை ஒடித்துப்போட்டுவிட்டன.

அந்தப் பேட்டியில், '' 'சுமதி என் சுந்தரி' படத்தில் சுமதி என்ற நடிகையாகவே நடித்திருக்கிறேன். நடிகைக்கு உள்ளே ஒளிந்துவாழும் பெண்மைச் சிறப்பை எடுத்துக்காட்டும் அந்தப் பாத்திரப் படைப்பை ஏற்று நடிக்கும்போது நான் சுமதியாக அல்ல; ஜெயலலிதாவாக நினைத்தே என் பாத்திரத்தை வெளிப்படுத்தினேன்” என்றவரின் கல்யாண ஆசை இறுதிவரை நிறைவேறவில்லை.

1973-ம் ஆண்டு 'ஆனந்த விகடனு'க்கு அளித்த பேட்டியில், ''உங்களுக்கு எப்போது திருமணம்'' என்ற கேள்விக்கு, ''இந்த விபரங்களை எல்லாம் ஆண்டவனிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என விரக்தி மேலிட பதிலளித்தார். 

ஜெயலலிதா

அரசியல் ஆசையும் அவருக்கு லட்சியமாக இருந்ததில்லை. ''நீங்கள் முதல்வரானால், என்ன செய்வீர்கள்'' என்ற ஒரு கேள்விக்கு, “கேட்பதுதான் கேட்கிறீர்கள் காசா பணமா? பிரதமரானால் என்ன செய்வீர்கள் என கேட்கக்கூடாதா'' என கிண்டலாக பதில் கொடுத்தார். “தேர்தலில் நின்றால் உங்களது தேர்தல் வாக்குறுதி என்னவாக இருக்கும்” என்ற கேள்விக்கு, “கொடுத்த கால்ஷீட்படி ஒழுங்காக நடிக்க வருவேன் என தயாரிப்பாளர்களுக்கு வாக்குறுதி தருவேன்” எனச் சொன்னார். மற்றொரு சமயம், ''அரசியலில் இறங்கப்போகிறீர்களா'' என்ற கேள்விக்கு, ''படப்பிடிப்பு உள்ளிட்ட வழக்கமான வேலைகளைச் செய்யவே பாதி மூச்சு போய்விடுகிறது. இதில், அரசியலில் ஈடுபட எவ்வளவு நாள் ஆகுமோ'' எனச் சொன்னார். ஆனால், அடுத்த 17 வருடங்களில் அவர் தமிழகத்தின் முதல்வராகியிருந்தார். 

சமீபத்திய அ.தி.மு.க பிளவின்போது, சசிகலா தரப்பு சொன்ன ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. ''ஜெயலலிதாவின் அரசியல் களத்தில் சோதனையான ஆண்டாக அமைந்த 1989-ம் ஆண்டு அவர் உயிருக்கும், ஒரு பெண்ணாக அவரது கற்புக்கும் பெரும் ஆபத்து உருவானது. அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு சோர்வடைந்த ஜெயலலிதா, அரசியலை விட்டு விலகப்போவதாகவும் அதற்காகக் கடிதம் எழுதிவைத்ததாகவும் சொல்லப்பட்டது. அப்போது அவர் தொடர்ந்து அரசியல் களத்தில் மனதிடத்துடன் இயங்க தாங்களே காரணம்'' என சசிகலா சொன்னார். இது, உண்மையானால் பரபரப்பான அரசியல் களத்திலிருந்து ஒதுங்கி அமைதியாக காலத்தைக் கழிக்க நினைத்த ஜெயலலிதாவையும் வலுக்கட்டாயமாக அரசியலுக்கு கொண்டுவந்து அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கி அதனால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாக்கி அப்போலோ வரை கொண்டுசென்றதும்கூட சசிகலா வடிவில் வந்த விதிதானோ!

ஜெயலலிதா

வாழ்வில் விரும்பாத அத்தனை விஷயங்களையும் தொட்டுச் செல்கிற இந்த வாழ்க்கை முறை விதி வகுத்தது என்பதைத்தான், மேற்சொன்ன அவரது பொதுக்குழுப் பேச்சு உணர்த்துகிறது. 

வாழ்க்கை முழுவதும் அவரை விரட்டிக்கொண்டிருந்த விதிதான், இப்போது மறைவுக்குப்பின்னும் அவரைவிட மனமில்லாமல் தொடர்கிறது. ஒரு குற்றவாளியாகச் சிறை செல்லவேண்டிய அவருக்கு மரணத்தின்மூலம் விதிவிலக்கு அளித்திருக்கிறது விதி. ஆனால், தமிழர்களின் மனதில் சுமார் அரைநுாற்றாண்டுக் காலம் இயல்பாகவும், இயல்புக்கு மீறியும் படிந்துவிட்ட, தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குற்றவாளி என்ற முறையில், 'இனி அரசு அலுவலகங்களில் இடம்பெறக்கூடாது' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது ஜெயலலிதா குறிப்பிட்ட அதே விதியன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?! 

- எஸ்.கிருபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்