''என் அம்மா இருந்திருந்தால் இத்தனை துயரங்கள் நேர்ந்திருக்காது...'' டி.எம்.எஸ்ஸிடம் உருகிய ஜெயலலிதா! | A conversation between Jayalalithaa and TMS

வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (24/02/2017)

கடைசி தொடர்பு:11:08 (24/02/2017)

''என் அம்மா இருந்திருந்தால் இத்தனை துயரங்கள் நேர்ந்திருக்காது...'' டி.எம்.எஸ்ஸிடம் உருகிய ஜெயலலிதா!

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று... உறுமியபடி ஆண்கள் உலவிய அரசியல் காட்டில், ஒரு பெண் அரிமாவாக அதகளம் செய்தவர் ஜெயலலிதா. மிகப் பலம் வாய்ந்த ஒரு தலைவரால் தொடங்கப்பட்ட ஒரு கட்சியில் பத்து ஆண்டுகளுக்குப்பின் இணைந்து... அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அதன் தலைவியாக மாறி அதிகார மையத்தில் அமர்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமாகிற விஷயமல்ல...போராட்ட உணர்வுமிக்க ஒருவரால் மட்டுமே முடிகிற விஷயம். 

இந்த வெற்றித்தருணங்கள் ஒவ்வொன்றிலும் எழுந்த கைதட்டல்களில் அவரின் விசும்பல் நமக்குக் கேட்காமல் போயிருக்கலாம். அரிதான தருணங்களில் அவசியமான மனிதர்களிடம் மட்டும் அவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கடந்த 2003-ம் ஆண்டு போயஸ் கார்டனில் அவரைச் சந்தித்தார் பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். அப்போது அவரிடம், அவரது தாயாரது அரிய புகைப்படங்கள் சில தரப்பட்டன. அவற்றைப் பார்த்து நெகிழ்ந்துபோன ஜெயலலிதா மனம்விட்டு, பல விஷயங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதன் இரண்டு ஆளுமைகளுக்கிடையில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்புக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறார் இயக்குநர் டி.விஜயராஜ். இவர் 'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர். ஜெயலலிதா, வாலி, எம்.எஸ்.வி முதல் ரஜினி, கமல் என திரையுலகின் இன்றைய கலைஞர்கள் வரை பங்கேற்றிருக்கும் இந்தத் தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த நாள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார் டி.விஜயராஜ்.

டி.விஜயராஜ்“அடையாறு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லுாரியில் 1989-ம் ஆண்டு நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு தொடர்ந்து தமிழ்நாடு பிலிம் டிவிஷனில் வேலைக்குச் சேர்ந்தேன். 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரான சமயம், அவரது நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கும் ஃபிலிம் டிவிஷன் குழுவில் இடம்பெற்றேன். அப்போதுதான் முதன்முறை நேரில் பார்த்தேன். அவரைப்பற்றி நேரிலேயே அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. இரும்புப் பெண்மணி என எல்லோரும் சொன்னாலும் அவர் நம் வீட்டுப்பெண்களைப்போல் யதார்த்தமான ஒருவராகவே இருந்தார். அப்போதெல்லாம் இப்போதுபோல் மீடியாக்கள் அதிகம் கிடையாது. தூர்தர்ஷனும் நாங்களும் மட்டும்தான். முதல்வரின் நிகழ்வுகளைப் பதிவுசெய்வதற்காக அவரது அறைக்கு வெளியே காத்திருக்கும் நாங்கள், ஏதாவது நிகழ்வென்றால் அழைத்ததும் தபதபவென அவரது அறைக்குள் ஓடுவோம். அப்போது குழந்தைபோல் ஒரு புன்னகையை எங்கள் பக்கம் வீசுவார். 

ஒருமுறை, சீனத் தூதரக அதிகாரி தலைமைச் செயலகம் வந்தார். அதைப் படம்பிடிக்கத் தோளில் 'டெக்'குடன் ஓடினேன். கீழே இருந்த கேபிள் ஒயர் தடுத்ததால், அப்போது முன்னே சென்ற தூர்தர்ஷன் கேமராமேனின் கேமராவில் என் தலை மோதியது. சொல்லமுடியாத வலியால் என்னையும் அறியாமல் அந்தச் சூழலை மறந்து, 'ஐயோ... அம்மா' எனக் கத்தினேன். அங்கிருந்தவர்கள் சாதாரணமாக என்னைப் பார்த்தார்கள். ஆனால், முதல்வர் வேகமாக என் பக்கம் திரும்பி, 'தம்பி பார்த்து... பதற்றமில்லாம வேலை பாருங்க' என்றதோடு என்னை நோக்கி நெருங்கிவந்தார். 'ஒண்ணும் இல்லீங்கம்மா... தேங்க்ஸ்' என்றேன். 'கேபிளை ஓரமாகப் போடக்கூடாதா...' என கேமராமேனைக் கண்டித்ததோடு, 'அவருக்கு மெடிக்கல் ஹெல்ப் வேணுமானு கேளுங்க' என என்னைக்காட்டி அருகிலிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டுச் சென்றார். அது, ஆச்சர்யமாக இருந்தது. 

உண்மையில், அவர் என் தலையைத் தடவிக்கொடுப்பதுபோல்தான் நெருங்கிவந்தார். அதற்குள் அதிகாரிகள் தடுத்துவிட்டனர். ஒரு முதல்வர் சாதாரண ஓர் ஊழியனிடம் காட்டிய அந்தப் பரிவை இன்று நினைக்கும்போது பின்னாளில் அவர் 'அம்மா' என தொண்டர்களால் அழைக்கப்பட்டது சரியென இப்போது உணர்கிறேன். ஒரு முதல்வராகப் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் இருந்தாலும் அவர் மக்களிடம் நெருங்கிப்பழகவே விரும்பினார். ஒருமுறை அண்டை மாநில புயல் பாதிப்பு நிதிக்காக தமிழக அரசு நிதி வசூலித்தது. சாமான்யர்களும் அவரது அறைக்குள் வந்து மேஜையில் இருந்த உண்டியலில் பணம் போட்டனர். அப்போது ஒரு முதியவர் பணம் போட்டுவிட்டு, ஜெயலலிதாவின் அருகில் சென்று, 'அம்மா... நான் உங்க ரசிகன். இன்னமும் உங்க படம் எங்கே போட்டாலும் போய்ப் பார்ப்பேன்” என்றவர், அவர் நடித்த ஒரு படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'அதில் நல்லா நடிச்சிருந்தீங்க' எனச் சொன்னார். முதல்வரிடம் அவரது நடிப்பை விமர்சிக்கிறாரே என அடுத்த நொடி, அதிகாரிகள் அவரை விரட்ட முயன்றனர். ஆனால், சிரித்தபடி பெரியவரை அருகில் அழைத்த ஜெயலலிதா, அவரிடம் சகஜமாகப் பேசினார். 'தனக்கு வீடு வாசல் கிடையாது. கஷ்டப்படுற குடும்பம்' எனப் பெரியவர் சொல்ல... அருகிலிருந்த அதிகாரிகளிடம், 'அவரிடம் ஒரு மனு வாங்கி ஆவன செய்யுங்க' எனச்சொல்லி பெரியவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஜெயலலிதா.

ஒருமுறை சிலை திறப்பு விழா கவரேஜுக்காக அவருடன் சென்றிருந்தோம். உணவு இடைவேளையின்போது, அவர் உணவருந்த நாங்கள் ஓர் ஓரமாக நின்றிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு எங்களுக்கும் உணவு பரிமாறச் சொன்னார். ஆனால், முதல்வர் அருகில் அமர்ந்து எப்படி உண்பதென தயங்கி நின்றோம். அதைப் பார்த்தவர், “என்னை படம்பிடிக்கத்தானே வந்திருக்கீங்க... அப்ப நான் சொல்றதைக் கேளுங்க. நீங்க சாப்பிடாம கேமராவைத் தூக்கினீங்கன்னா, நான் உங்களுக்கு போஸ் தரமாட்டேன்' என புன்னகைத்தபடி கூறினார். அதனால், பிறகு சாப்பிட்டோம். 

ஜெயலலிதா

ஒருமுறை அவரது பிறந்தநாளின்போது, எங்கள் குழுவுக்கு இனிப்பும் 501 ரூபாய் பணத்துடன் மணிபர்ஸும் பரிசாகத் தந்தார். அவரின் நினைவாக அதைப் பல வருடங்கள் வைத்திருந்தேன். அதைப் பார்ப்பதற்காக வாங்கிச்சென்ற என் தங்கை, அதைத் தொலைத்துவிட்டார். இந்த வருத்தம் இன்னமும் இருக்கிறது மனதில். 1998-ல் எனக்கு மிகவும் பிடித்த டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 13 வாரங்களுக்கு அது படம்பிடிக்கப்பட்டது. அதுதொடர்பாக ஜெயலலிதாவையும் சந்திக்க முயன்றேன். டி.எம்.எஸ் கொடுத்த கடிதத்தினால் உடனே அப்பாயின்மென்ட் கிடைத்தது. 1999-ம் ஆண்டு ஜுன் மாதம் டி.எம்.எஸ்., அவரது மகன் பால்ராஜ் இவர்களுடன் நானும் சென்றேன். போயஸ் கார்டனில் அவர், நாங்கள் இருந்த அறைக்குள் நுழைந்ததும் டி.எம்.எஸ்., 'நான் உன்னை அழைக்கவில்லை... என் உயிரை அழைக்கிறேன்...' என அவரது படத்தின் ஒரு பாடலைப் பாட, 'ஐயா என் உடல் எல்லாம் சிலிர்க்கிறது' என நெகிழ்ந்து அந்தப் பாடல் முழுவதையும் ரசித்துக் கேட்டார் ஜெயலலிதா.

தொடர் பற்றிய விபரங்களைக் கேட்டவர், என்னிடம் திரும்பி... 'தம்பி, வாழும் காலத்திலேயே ஒருவர் தன்னைப்பற்றிய புகழ்வார்த்தைகளைக் கேட்பது எல்லாருக்கும் கிடைக்காத பாக்யம். அது டி.எம்.எஸ்ஸுக்கு வாய்த்திருக்கிறது. அவரால் புகழ்பெற்ற எங்களைப்போன்றவர்கள் செய்யவேண்டிய பணியை நீங்கள் செய்கிறீர்கள். அதற்குப் பாராட்டுகள். கட்சி சார்பில் டி.வி ஒன்று தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். அதில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்கிறேன். அவர் பிறந்த வீடு தொடங்கி ஒரு விஷயத்தையும் மறக்காமல் பதிவுசெய்யுங்கள்' என இன்னும் சில அறிவுரைகளைச் சொல்லி வாழ்த்தி அனுப்பினார். அவரின் அறிவுறுத்தலில், 'இமயத்துடன்' என்ற பெயரில் வேறொரு கோணத்தில் திட்டமிட்டு 2001-ல் எனது குரு ஏ.சி.திருலோக்சந்தரின் கரங்களால் ஏ.வி.எம்மில் படப்பிடிப்பைத் தொடங்கினேன். அதில் டி.எம்.எஸ்ஸின் சமகாலத்து கலைஞர்கள் ஒவ்வொருவரையும் அவருடன் கலந்துரையாடவைத்து பதிவுசெய்தேன். 

ஜெயலலிதா

அப்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகியிருந்த நேரம். ஒருநாள் படப்பிடிப்பில் இருந்தபோது, டி.எம்.எஸ்ஸுக்கு இயல் இசை நாடகமன்ற தலைவராக நியமிக்கப்பட்ட தகவலைக் கோட்டையிலிருந்து அதிகாரிகள் போன் செய்து சொன்னார்கள். சில தினங்களில் அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக டி.எம்.எஸ் சென்றார். நானும் உடன் சென்றேன். போயஸ் கார்டனில் நடந்த அந்தச் சந்திப்பின்போது ரொம்ப நெகிழ்வாக இருந்தார் ஜெயலலிதா. சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளுக்குப்பின் டி.எம்.எஸ்ஸுடன் ஜெயலலிதா, 'சூரியகாந்தி', 'அன்பைத்தேடி', 'வந்தாளே மகராசி' என மூன்று படங்களில் இணைந்து பாடியுள்ளார். அதில், ஒரு பாடல் பதிவின்போது எடுத்த படத்தை அவரிடம் தந்தேன். அதை, மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். அப்போது நான், 'மேடம்... என்னிடம் மேலும் மூன்று படங்கள் இருக்கின்றன. அவை, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்' என்றேன். 'அப்படியா, என் படங்களா' என்றார். 'இல்லை மேடம். உங்களின் தாயாரின் படங்கள்' என்றேன். அடுத்த நொடி, அவரது முகத்தில் மின்னி மறைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை. 

சந்தியாமன அமைதியற்ற ஒரு குழந்தை உலகிலேயே தான் அதிகமாக நேசித்த ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு... அது கிடைத்தால் அதன் உள்ளம் எப்படித் துள்ளிக்குதிக்குமோ... அப்படியான ஒரு முகபாவம் அது. நான் என் பையிலிருந்து அவற்றை எடுப்பதை ஆவலாக பார்த்தபடி இருந்தார் அவர். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் மைசூரில் எதிர்பாராதவிதமாக இறந்தபிறகு பிழைப்புக்காக சந்தியா சென்னை வந்தார். குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், அன்றைய பிரபல ஸ்டூடியோவான கோவை பக்ஷிராஜா ஸ்டூடியோவிலும் சென்று வாய்ப்பு கேட்டிருக்கிறார். அப்போது ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட டெஸ்ட் படங்கள்தான் அவை. அபூர்வமான படங்கள்!

டி.எம்.எஸ்., தொடருக்காக அங்கு படப்பிடிப்பு நடத்தியபோது... ஸ்டூடியோவின் தற்போதைய உரிமையாளரிடம் இருந்து நான் வாங்கிவந்தேன். அவற்றைத்தான் ஜெயலலிதாவிடம் தந்தேன். வறுமையின் வாட்டமும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் கூடவே இளமையின் அழகும் இணைந்தபடி அவர் தந்த போஸ்கள் ஜெயலலிதாவை என்னவோ செய்தன. தன் இருகரங்களாலும் ஏந்தி வாங்கிக்கொண்டவர், வைத்த கண் வாங்காமல் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து, அவர் நிமிர்ந்து பார்த்தபோது கண்களில் குளம்போல் கண்ணீர். டி.எம்.எஸ்., ஜெயலலிதாவைத் தேற்றினார். 'எப்படி இந்தப் படங்கள் கிடைத்தன' என்றார். நடந்ததைச் சொன்னேன். 'நான் இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையே என் அம்மாதான். அவரைத் தவிர்த்து இந்த உலகில் எனக்கு வேறு எதுவும் தெரியாது. இந்தப் படங்களை என் சிறுவயதில் என் அம்மா காட்டியிருக்கிறார். ஆனால், அதை நான் பத்திரப்படுத்திவைக்கவில்லை. அவரது ஆரம்பகாலப் படங்களான இதைத் தேடித்தந்திருக்கிறீர்கள். தேங்க்ஸ்' என என்னிடம் கூறிவிட்டு, டி.எம்.எஸ்ஸிடம் தனது அம்மாவைப்பற்றி ஏதோ சொல்லத் தொடங்கினார். 

நெகிழ்ச்சியான அந்தச் சூழலில் அந்நியனாக நான் இருக்கவேண்டாம் எனக்கருதி, 'வெளியே வெயிட் செய்றேன் மேடம்' என நான் கிளம்ப முயன்றேன். ஆனால் ஜெயலலிதாவோ, 'உட்காருங்கள்' என்றார். நான் தயங்கி நிற்பதைப் பார்த்து, 'உட்காருங்கள்' என அழுத்தமாகச் சொன்னார். அமர்ந்துவிட்டேன். தொடர்ந்து டி.எம்.எஸ்ஸிடம் பழைய நினைவுகளில் மூழ்கிப் பேச ஆரம்பித்தார்.

'என் சித்திதான் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார். அம்மா சுமாரான அழகுடையவர்தான். ஆனால், தன்னம்பிக்கையுடன் எங்களின் எதிரகாலத்துக்காகச் சினிமாவைத் தேர்ந்தெடுத்தார்; பிரபலமானார். ஆனால், எனக்கு விவரம் தெரிந்தபோது... அவர் சினிமாவில் நடிப்பதை நானும் என் அண்ணனும் விரும்பவில்லை. காரணம், எந்நேரமும் படப்பிடிப்புக்கு அவர் ஓடிக்கொண்டிருந்தது. தூக்கம் வராத நாட்களில் தனது சினிமா அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தப் படங்களில் காணப்படும் அவரது முகபாவம் எங்களை அவர் வளர்க்க கஷ்டப்பட்டதைத் தெளிவாகச் சொல்கிறது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை எல்லாருக்கும் உண்டு என்றாலும், எங்களின் தாயார் எங்களுடைய எதிர்காலத்துக்காக எங்களையேகூடப் பிரிந்திருந்தார்' என்றார். 'அம்மா நினைத்ததைவிட இப்போ அம்மு பெரிய அரசியல்வாதியாகி முதல்வராவும் ஆகிட்டீங்களே... அவர் ஆத்மா ரொம்ப திருப்தியாக இருக்கும்' என்றார் டி.எம்.எஸ்.

'இல்லை ஐயா, என் சிறுவயதில் அம்மாவை ரொம்பவும் மிஸ் செய்துவிட்டேன். அவர் பிஸியான நடிகையாக இருந்ததால் நினைத்த நேரத்தில் அவரை எங்களால் பார்க்க முடியாது. அவருக்குப் படவாய்ப்புகள் குறைந்து ஓய்வில் இருந்தபோது நான் நடிகையாகி பிஸியாகிவிட்டேன். ஒரு மகளாக அவருடன் நீண்ட நாட்கள் கழிக்கவில்லை என்ற வேதனை இன்றுவரை என் மனதில் நிறைந்திருக்கிறது. நானும் விருப்பமில்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். 'தன் மகள், சினிமா நடனம் என கலைத்துறையில் ஏதோவென்றில் சாதிக்க வேண்டும்' என்பதுதான் என் தாயாரின் அதிகபட்ச விருப்பம். சினிமாவில் நான் பிரபலமடைந்ததும் என்னைப்பற்றிய கவலை அவருக்கு அறவே போய்விட்டது. மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டதாகக் கருதி நிம்மதியடைந்துவிட்டார்.

ஜெயலலிதா

பிள்ளைகள் எந்தக் கஷ்டமில்லாமல் பணம், புகழ் சிறப்பான வாழ்க்கை வாழவேண்டும் என்பது மட்டும்தான் அவரது எதிர்பார்ப்பு. ஆனால், இதில் அரசியல் அப்படியல்ல. இன்று, அரசியலில் ஈடுபட்டு நான் விமர்சனங்களாலும் வேறுவிதங்களாலும் எதிர்க்கட்சிகளால் வசைபாடப்படுகிறேன். என் தாயார் ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம் என்னை அரசியலுக்கு அனுமதித்திருக்கமாட்டார்.' போராட்டமான துயரங்கள் சூழ்ந்த இந்த வாழ்க்கையில் தன் மகள் அவதிப்படுவதை அவர் விரும்பியிருக்கமாட்டார், எனக்கு அவர் சுபாவம் நன்றாக தெரியும்...” இப்படி நீண்டது ஜெயலலிதாவின் பேச்சு. 

ஜெயலலிதா

நான், ஒரு முதல்வரின் கவலைகளை நேரில் பார்த்தபடி சிலையாய் அமர்ந்திருந்தேன். ஒரு முதல்வராக, கட்சித்தலைவியாக, உறுதிமிக்க ஓர் அரசியல்வாதியாக மக்கள்முன் நிற்கும் அவருக்குள்ளும் ஒரு மகளின் ஏக்கம் உறைந்துபோய் இருந்ததை நேரில் கண்ட அந்த நாளை என்னால் வாழ்வில் என்றும் மறக்கமுடியாது. 'எனக்கு மட்டுமே அவசியமான படத்தை நீங்கள் சிரமப்பட்டு தேடிக் கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி தம்பி... ஐயாவின் படத்தை முடிங்க... என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்' என டி.எம்.எஸ்ஸிடம் ஆசி வாங்கிக்கொண்டு வழியனுப்பிவைத்தார் எங்களை.''

- எஸ்.கிருபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close