வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (27/02/2017)

கடைசி தொடர்பு:10:06 (28/02/2017)

’பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுப்போம்!’ - நெடுவாசல் போராட்டக் குழு


நெடுவாசல்


த்திய அரசின் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15-ம் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இளைஞர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளதால் போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்து வருகிறது. இந்தநிலையில்,நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களின் பின்னணியை ஆராய வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கருத்துகளை வெளியிட்டிருப்பது, நெடுவாசல்  மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன். ராதாகிருஷ்ணன்இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு, கடந்த 15-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையறிந்த நெடுவாசல் விவசாயிகள், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தால் "விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்' என்றுகூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில், திருச்சியில் இருந்து போராட்டத்தில் பங்கேற்பதற்காக நெடுவாசல் சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோன்று நாகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்போர், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அங்கு செல்வோர் என அனைவரையும் மத்திய- மாநில அரசுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி அலங்காநல்லூரில் தொடங்கி, சென்னை மெரினா உள்பட தமிழகம் முழுவதும் இளைஞர்களிடையே பொங்கியெழுந்த எழுச்சியைப் போன்று, அதே அளவிலான புரட்சி நெடுவாசல் போராட்டத்துக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மத்திய - மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக போராட்டக்களத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்ட பின்னணியில் இருப்பவர்கள் யார்?

இல. கணேசன் இந்தநிலையில், நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களில் 5 பேரை மட்டும் முதலமைச்சரை சந்திக்க அழைத்துச் செல்வதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார், ஆனால், அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'அமைச்சரின் இந்த நடவடிக்கையின் மூலம் அ.தி.மு.க  தலைமையிலான அரசு, போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கிறது' என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளின் இந்தக் கருத்தை உறுதிசெய்யும்விதமாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

இந்தநிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், "இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய வேண்டும். இவர்கள் பின்னால் பயங்கரவாத இயக்கங்கள் இருக்கலாம்" என்று கருத்து தெரிவித்துள்ளார். நாகையிலும் அவர் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். "இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தின் நன்மை-தீமைகளைப் பற்றி ஆராயாமல் ஆளாளுக்கு எதிர்க்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் என்ன விஞ்ஞானிகளா"? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோல், "மக்கள் நலத்திட்டங்களை ஆகாயத்திலா மேற்கொள்ள முடியும் என்றும், தனிமனிதனும் தியாகம் செய்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்றும்" என்று  பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசனும் கருத்து தெரிவித்திருப்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுவாசல்


விவசாயிகளின் வாழ்வாதாரப் பின்னணியை ஆராயுங்கள்!

நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீட்புக் குழுவைச் சேர்ந்த செந்தில்தாசிடம் போராட்டம் குறித்துப் பேசினோம். "இயற்கை எரிவாயுத் திட்டத்தால் விவசாயிகளுக்கும், மண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற கொள்கையோடு போராடி வருகிறோம். அதேபோன்று பா.ஜ.கவுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அவர்களும் அந்தக் கட்சியின் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். பா.ஜ.க தலைவர்களின் கூற்றுப்படி,கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றால் எங்களைப் போன்று, அவர்களும் பயங்கரவாதிகளே, இதனை அவர்களிடம் பதிவு செய்யுங்கள். போராட்டக்காரர்களின் பின்னணி குறித்து ஆராய்வதைக் காட்டிலும், விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி ஆராய்வது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும்.இதுபோன்று ஒவ்வொரு போராட்டத்துக்கும் உள்நோக்கத்துடன் கருத்துகளை சொல்பவர்கள், அவர்களுடைய பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள அவர்கள் கையாளும் நடைமுறை என்றே கருதுகிறேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோதும் இதே கருத்தை பா.ஜ.க தலைவர்கள்  தெரிவித்தனர். அவர்கள் எங்களைப் பற்றி தெரிவிக்கும் கருத்துகளைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. இந்தத் திட்டத்தை கைவிடும்வரை எங்கள் போராட்டம் தொடரும். அதேநேரத்தில் அரசியல் கட்சிகளையோ, அரசையோ எதிர்க்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற மத்திய அரசின் இந்த திட்டத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார் அவர்.
 

- கே.புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்