நெடுவாசல் : பொதுச் சமூகம் முன்வைக்கும் 5 கேள்விகளும்... மக்களின் பதில்களும்! #SpotVisit #3MinsRead | Neduvasal People answers Frequently asked questions on Protest Against Hydrocarbon #SpotVisit #3MinsRead

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (28/02/2017)

கடைசி தொடர்பு:14:16 (28/02/2017)

நெடுவாசல் : பொதுச் சமூகம் முன்வைக்கும் 5 கேள்விகளும்... மக்களின் பதில்களும்! #SpotVisit #3MinsRead

நெடுவாசல் ஓ.என்.ஜி.சி

காலை நேரத்தின் இயல்பான குளிர்ச்சியைக் கடந்தும் கனன்றுகொண்டிருக்கிறது நெடுவாசல். காலையில் எழுந்து கடலை அறுவடையை முடித்தவுடன், போராட்டக் களத்துக்குச் செல்கிறார் அமுதா அக்கா. வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி முடித்தவுடன், போராட்டக் களமான நாடியம்மன் கோயில் நோக்கி விரைகிறார் வசந்தா அம்மா. ‘கரும்பு லோடு எடுக்க 11 மணிக்கு வர்றோம்னு சொன்னாங்க... நான் ஒரு மணி நேரம் நெலத்துக்குப் போயிட்டு வந்துடுறேன்” என்று போராட்டத்துக்கு ஒரு மணி நேரம் அனுமதி கேட்டுவிட்டுச் செல்கிறார், ராஜேஷ். இப்படித்தான் இருக்கிறது நெடுவாசல். விவசாயமும் போராட்டமும் களத்தில் பின்னிப்பிணைந்திருக்கிறது. முன்னதைக் காக்க பின்னதைக் கையிலெடுத்து, அறம் பிசகாமல் நிற்கிறார்கள் அந்த எளிய மக்கள். 

ஆனால், பொதுச் சமூகத்துக்குச் சில கேள்விகளும், சலிப்பும் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் போராட்டாமா... என்று அலுத்துக்கொள்கிறார்கள். அந்தப் பொதுச் சமூக்கத்தின் கேள்வியைப் புறக்கணித்துவிட்டு முன்னோக்கிச் செல்ல முடியாது. அவர்களுடைய கேள்விகளைப் போராடும் மக்களிடம் முன்வைத்தோம்.  

அதற்கு, நெடுவாசல் மக்கள் அளித்த பதில்... 

''இது வளர்ச்சித் திட்டம்தானே... ஏன் எப்போதும் வளர்ச்சியை எதிர்க்கிறீர்கள்... உங்களுக்கு தமிழக எதிர்காலத்தின் மீது அக்கறையே இல்லையா?''

''உங்களைவிட எங்களுக்குத் தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அதிக அக்கறை இருக்கிறது. அதற்காக நாங்கள் போராடிக்கொண்டிக்கிறோம். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்... புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்று இரண்டு வகை இருக்கிறது. நிலத்துக்கு அடியில் இருப்பது புதுப்பிக்க இயலாத ஆற்றல். இந்த ஆற்றல், உங்களுக்கு அதிக லாபம் தரும்; பொருளாதாரம் உயரும். மறுப்பதற்கில்லை. ஆனால், இதுவெல்லாம் குறுகிய காலம்தான். உங்களுடைய பகாசுர குழாய்கள் பூமிக்குள் 10,000 அடிச் சென்று அனைத்தையும் உறிஞ்சும்போது, அதிகமாக நுகரும்போது, அந்தப் புதுப்பிக்க இயலாத ஆற்றல்  தீர்ந்துவிடும். அது தீர்ந்தால், நிலத்துக்கு மேல் எதுவும் வளராது.

அதாவது, புதுப்பிக்கக்கூடிய ஆற்றலையும் சீரழித்துவிடும். இங்கு, மண் வளமாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இந்தப் பூமிக்கடியில் இருக்கும் வளங்கள்தான். நீங்கள் குழாய் போட்டு எல்லாவற்றையும் உறிஞ்சி, வளரும் ஒரு குறுகியகால வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் நிலத்துக்கு மேல் வளரும் வளம் குன்றா வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறோம்.

இப்போது சொல்லுங்கள்... எல்லாருக்குமான  நீடித்த வளர்ச்சியைப் பற்றிப் பேசும் நாங்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்களா... இல்லை குறுகியகால வளர்ச்சியைப் பற்றிப் பேசும் நீங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்களா...?'' 

நெடுவாசல்

''இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்கள். அப்படியானால், உங்களுக்கு இதையெல்லாம் யாரோ சொல்லித் தருகிறார்கள்... தெளிவாகப் புரிகிறது. உங்கள் ஊருக்கே சம்பந்தம் இல்லாதவர்கள்தானே உங்களைத் தூண்டிவிடுகிறார்கள்...? அதுமட்டுமல்ல, உங்களுக்கு பி.ஜே.பி மீது காழ்ப்புஉணர்ச்சி இருக்கிறது. அதனால்தானே, இந்தப் போராட்டம்...?''

“எளிய மக்களை முட்டாள் என்று நினைக்கும் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இந்தக் கேள்வி. நாங்கள் அறிவிலிகள் அல்ல. சரி... உங்கள் கேள்விக்கே வருகிறேன். நீங்கள் பெற்ற அறிவு எல்லாம், உங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் கற்றதா..? வெளியுலக அறிவுதானே... நாங்கள் அந்த அறிவைப் பெறக்கூடாதா..?

‘ஊருக்கே சம்பந்தம் இல்லாதவர்கள்தானே தூண்டிவிடுகிறார்கள்’ என்கிறீர்கள். இங்கு குழாய் போட்டு அனைத்தையும் உறிஞ்சக் காத்திருக்கும் நிறுவனங்கள் மட்டும் என்ன... எங்கள் ஊருக்குச் சம்பந்தமான நிறுவனங்களா..? எங்கள் பிள்ளைகள்... எங்கள் அண்ணன், தம்பிகள்... எங்களுக்காகப் போராடுகிறார்கள். அதில் என்ன தவறு..? முதலில் எங்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்று எங்களைக் கொச்சைப்படுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் சுய அறிவுகொண்டவர்கள். சிந்திக்கக்கூடியவர்கள். அனைத்தையும் பகுத்தாய்ந்துதான் எடுத்துக்கொள்கிறோம்.

ஹூம்... அப்புறம் என்ன சொன்னீர்கள், நாங்கள் பி.ஜே.பி-யின் மீதான காழ்ப்புஉணர்ச்சியில் போராடுகிறோமா..? இங்கு போராடுபவர்களில் பலர் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது, கட்சி அரசியல் சார்ந்த போராட்டம் அல்ல. மக்கள் நலனுக்கான போராட்டம். எல்லாக் கட்சிகளையும் சமதூரத்தில்தான் வைத்திருக்கிறோம்.”


நெடுவாசல் போராட்டம்

''இன்னும் எத்தனை காலம்தான் நிலத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கப்போகிறீர்கள்... நிறுவனங்கள் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு படித்து, முன்னேறி நகரங்களுக்குச் செல்லலாமே...? 'அதுதான் வேலை கிடைக்கும்' என்கிறார்களே...?''

''இதைத்தான் என்.எல்.சி-க்காக நிலம் கையகப்படுத்தும்போதும் சொன்னார்கள். உண்மையில், வேலை கொடுத்தார்களா என்ன...? உண்மையில், இன்னும் பலருக்கு இழப்பீடே தரவில்லை.

அப்புறம், உங்களிடம் நாங்கள் வேலை கேட்டோமா...? எங்கள் நிலம் எங்களைக் கைவிடாது. அதில், நாங்கள் சுயத்துடனும்... சுயசார்புடனும் இருக்கிறோம். எங்கள் நிலத்திலிருந்து எங்களைத் துரத்தி எங்கோ பரதேசியாக அலையவிடுவதற்கு ஏன் இந்தப் பகுமான மொழியைப் பயன்படுத்துகிறீர்கள்? நகரங்களுக்குப் புலம்பெயரச் சொல்கிறீர்கள். உங்களுடைய அழகுச் சொல்லில் மயங்கி ஏற்கெனவே நகரங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள். பிளாட்பாரங்களில்தானே அடைக்கலம் கொடுத்திருக்கிறீர்கள். எங்கள் ஊரிலிருந்தும் படித்துவிட்டுப் பெருநிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். உண்மையில் எவ்வளவு சம்பளம் கொடுத்தீர்கள்...? ரூபாய் 6,000 முதல் 10,000 வரைதானே... இதைவிட அதிகமாக எங்கள் நிலத்திலிருந்தே சம்பாதித்துக்கொள்ள முடியுமே. இந்த 40 ஆயிரம், 50 ஆயிரம் சம்பளம் எல்லாம், நிறுவனங்களில் குறைந்த சதவிகித மக்களுக்குத்தான் கிடைக்கிறது. அதைவைத்து அனைத்தையும் பொதுமைப்படுத்திப் பேசாதீர்கள்.''

''நீங்கள் எல்லாம் என்ன விஞ்ஞானிகளா.... உங்களுக்குத் தொழிற்நுட்பம் குறித்து என்ன தெரியும்...?''

''எங்களுக்குத் தொழிற்நுட்பம் தெரிகிறதோ, இல்லையோ... நிறுவனங்களைப் பற்றி நன்கு தெரியும். ஏற்கெனவே, எங்கள் ஊர் சுற்றுவட்டாரத்தில் எண்ணெய் எடுத்த ஓ.என்.ஜி.சி என்ன செய்திருக்கிறது. தன் வேலை முடிந்ததும், எண்ணெய்க் கழிவுகளைக்கூட அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டது. கருக்காகுறிச்சி, வடகண்காடு போன்ற கிராமங்களைப் பாருங்கள். நாகப்பட்டினத்தில் ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் குழாய்கள் சேதமாகி விபத்துகள் ஏற்படவில்லையா... அந்தக் குழாய்கள் உடைந்து பாசனக் கால்வாயில் எண்ணெய் கலக்கவில்லையா...? இதை விஞ்ஞானிகளா என்று கேட்கும் அதிகாரவர்க்கம் மறுக்க முடியுமா...?''

நெடுவாசல் எண்ணெய் கசிவு

''திட்டம் செயல்படுத்தப்பட்டால்தானே சாதக பாதகங்கள் தெரியும்... தொடக்கத்திலேயே எதிர்க்க என்ன காரணம்...? பாதகம் என்றால் பி.ஜே.பி தலைவர்கள் சொல்வதுபோல தேசத்தின் வளர்ச்சிக்கு உங்கள் ஊரைக் காவுகொடுத்தால்தான் என்ன...?''

''எவ்வளவு வன்மமான வார்த்தைகள் அவை. திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபின் எதிர்த்தால், பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாகிவிட்டது. இப்போது எதிர்த்தால் என்ன நியாயம் என்பீர்கள். அப்படித்தானே கடந்த காலங்களில் சொல்லியிருக்கிறீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம்... இது எங்கள் ஊர் பிரச்னை மட்டுமல்ல. ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, அவர்கள் எங்கள் நிலத்தை மட்டும் சீரழிக்கப்போவதில்லை.... நாளை இதை எடுத்துச் செல்ல ஊர் முழுவதிலும் குழாய் பதிப்பார்கள்... அதற்கு நிலத்தைக் கையகப்படுத்த வருவார்கள். பின், அந்தக் குழாய் அருகில் எல்லாம் விவசாயம் செய்யக் கூடாது என்பார்கள்.... ஆக, ஒரு பெரும்பரப்பை நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் தொடக்கம்தான் இது. எப்போதும் எளிய மக்கள்தான் தியாகம் செய்ய வேண்டுமா...? போபாலில் ஆயிரக்கணக்கான மக்கள், நீங்கள் சொல்லும் வளர்ச்சிக்காகத் தியாகம் செய்திருக்கிறார்களே... தேசம் வளர்ச்சி அடைந்ததா...? மெர்க்குரி கழிவால் கொடைக்கானல் மக்கள் தங்கள் நிலங்களைப் பாழாக்கி, உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டு தவிக்கிறார்களே... அதன்பின் எந்தத் தேசம் வளர்ச்சி அடைந்தது? இவர்கள் காவு கேட்பது ஒரு சில நிறுவனங்களின் வளர்ச்சிக்காக... பெருநிறுவனங்களின் வளர்ச்சி மட்டும் தேசத்தின் வளர்ச்சி அல்ல...!''   

- மு.நியாஸ் அகமது

படங்கள்:ம.அரவிந்த், த.யோகேஸ்வரன்(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close