வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (28/02/2017)

கடைசி தொடர்பு:19:00 (28/02/2017)

தமிழக அரசின் கோரிக்கைகளும்... மத்திய அரசின் செயல்பாடுகளும்!

மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

மிழ்நாட்டுக்கு முதல்வர் பதவி என்பது மியூஸிக்கல் சேர்தான். எப்ப யார் இருக்காங்கன்னு தெரியாத அளவுக்கு மாறிக்கிட்டே இருக்கு. டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். பின்னர் அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா முதல்வராக வேண்டும் என்ற குழப்பம் அ.தி.மு.க-வில் தொடங்கியது. சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. அதில், ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். பிறகு, சசிகலா ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்து முதல்வராக நியமித்தனர்.

இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றார். அப்போது, தமிழகத்தின் நலனுக்காக அவர் 106 பக்க கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கினார். தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ. 39,565 கோடி வழங்க வேண்டும், தமிழகத்தில் இயற்கை எரிவாயுத் திட்டத்தை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் அதில் வலியுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, தமிழர்கள் மெரினா கடற்கரையில் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்ததற்கு தனது கோரிக்கை மனுவில் பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகள்:

தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள், வெள்ள நிவாரண நிதி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்தல், முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை மேலும் அதிகரித்தல், மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காணுதல், மீனவர்களுக்கு கச்சத் தீவில் பிரச்னை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குதல், மாநில அரசின் ஒப்புதலோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துதல், குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி, தமிழகத்தில் துறைமுகங்களை அதிகரித்தல், தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவை அதிகரித்தல், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இரட்டை குடியுரிமை வழங்குதல், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தல் என மொத்தம் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் அளித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே வழங்கிய கோரிக்கைகள்:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், டிசம்பர் 19-ம் தேதி பிரதமரைச் சந்தித்து 141 பக்க கோரிக்கை மனுவை வழங்கினார். அதில், புயல் நிவாரண நிதியாக ரூ.22,573 கோடி தமிழகத்துக்கு வழங்க வேண்டும், தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து 100 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். வர்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள், 100 நாள் வேலை திட்டம் தொடர வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குதல், காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைத்தல், மீனவர்களின் கச்சத்தீவு விவகாரத்துக்குத் தீர்வு, மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தல், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்தல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஓ.பி.எஸ் முன்வைத்திருந்தார். 

மோடியுடன் பன்னீர்செல்வம்

முன்னேற்றம் என்ன?

தமிழகத்தில் ஒவ்வொரு முறை முதல்வர் பொறுப்பேற்கும் போதும், பிரதமரைச் சந்தித்து, தமிழகத்தின் நலன்கள் தொடர்பான மனுவை அளிக்கிறார்கள். டிசம்பர் மாதம் பன்னீர்செல்வம் கொடுத்த கோரிக்கைகளுக்கும், பிப்ரவரி மாதம் முதல்வர் எடப்பாடி கொடுத்த கோரிக்கைகளுக்கும் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால், தமிழக மக்கள் அதை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்த புதிய திட்டத்துக்கு வந்த எதிர்ப்பை அடுத்து, மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் கூடுதலாக முன்வைத்துள்ளார் பழனிசாமி. ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் பன்னீர்செல்வம் பிரதமரிடம் அளித்த கோரிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தற்போதைய முதல்வரும் பிரதமரைச் சந்தித்து ஏறக்குறைய அதே கோரிக்கைகளையே முன்வைத்துள்ளார். எல்லா கோரிக்கைகளும் அறிக்கைகளாகவே இருக்கின்றன. ஆனால் அதற்கான தீர்வு ஏற்பட வழிகளோ அல்லது தீர்மானங்களோ இன்னமும் கிடப்பில் இருப்பதுதான் தமிழகத்தின் பிரச்னை. ஒவ்வொருமுறை முதலமைச்சர் மாறும்போதும் பிரதமரைச் சந்திப்பதும், அவரிடம் பக்கம் பக்கமாக கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் தற்போதைய அரசு, சரியான தலைமையின் கீழ் தொடர்ந்து செயல்படாததும், தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் மக்கள் பணிகளைச் செயல்படுத்தாமல் கட்சிப் பிரச்னைகளில் மூழ்கிக் கிடப்பதும் தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளுடன் கூடுதல் பாரமாக மாறியுள்ளன. 'ஜெயலலிதாவுக்குத்தான் வாக்களித்தோம், எடப்பாடிக்கோ? பன்னீர் செல்வத்துக்கோ அல்ல' என கூறுபவர்களாக இருந்தாலும் சரி, இல்லை, 'யாராக இருந்தால் என்ன ஒழுங்காக ஆட்சி செய்தால் போதும்' என்று கூறுபவர்களாக இருந்தாலும் சரி. இது கட்சிகள் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டை மைதானம் அல்ல; மாநில மக்களின் பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகளை எடுத்தால் மட்டும் போதும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. 

மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் எப்போதும் இருந்தது இல்லை. டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, வர்தா புயல், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றப்போன முதியோர் வங்கி வாயிலில் உயிரிழந்தது, அ.தி.மு.க-வின் உறுப்பினராக இல்லாத சசிகலா அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றது, பன்னீர்செல்வம் ராஜினாமா, சசிகலா குற்றவாளி என உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றது, எண்ணூர் துறை முகத்தில் கச்சா எண்ணெய் கழிவுகள் கொட்டியது, தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என தொடர்ந்து தமிழகத்துக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய பிரச்னைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து சரியான பதில்கள் ஏதும் இல்லை. பா.ஜ.க தமிழக தலைவர்களும் பேட்டிகளில் ஒன்றும், கட்சி நிலைப்பாட்டில் வேறொன்றுமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு, தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், தமிழக மக்கள் நலனில் சிறிதளவும் இல்லை என்பதுதான் உண்மை.

இனிமேலாவது, மத்திய அரசிடமும், பிரதமரிடமும் ஒரே கோரிக்கையை மாறி மாறி அளிக்காமல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதிலும், தற்போதுள்ள பிரச்னைகளை களைவதிலும் முதல்வரும், தமிழக அரசும் தீவிரம் காட்டினால் நல்லது.

- நந்தினி சுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்