'பி.ஜே.பி தலைவர்களே... நெடுவாசல் பக்கம் வாருங்கள்!' - மக்கள் அழைப்பு! | Political parties supports protest against Hydrocarbon project in Neduvasal

வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (28/02/2017)

கடைசி தொடர்பு:13:53 (01/03/2017)

'பி.ஜே.பி தலைவர்களே... நெடுவாசல் பக்கம் வாருங்கள்!' - மக்கள் அழைப்பு!

பி.ஜே.பி தலைவர்களே... நெடுவாசல் பக்கம் வாருங்கள்! என்றும், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழகம் தழுவிய போராட்டமாக மாற்றுவோம் எனவும் நெடுவாசல் கிராம மக்கள் அறிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக, கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் 13 நாள்களுக்கு மேலாகத் தொடர்கிறது.

போராட்டம் நடத்தும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டியக்கம், இனிவரும் காலங்களில் இந்தத் திட்டத்தை நிறுத்தும்வரை, முற்றுகைப் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டம் எனத் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

 டெல்டா மாவட்டங்களை, பாதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என, போராடும் மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், போராடும் மக்களுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதிலும் இருந்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறார்கள்.

நெடுவாசல் போராட்டக் களம்

த.மா.கா யுவராஜ், காங்கிரஸ் ஜோதிமணி, திரைப்பட இயக்குநர் வ.கெளதமன், விவசாய சங்கத் தலைவர்கள் மாசிலாமணி, பூ.விஸ்வநாதன் ஆகியோர் போராடும் மக்களைச் சந்தித்து, தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். நெடுவாசல் கடைவீதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தலைமையில் அந்தக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் ஆலங்குடியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

மேடையில் பேசிய முத்தரசன், "பி.ஜே.பி தலைவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் குரல்கொடுக்கிறார்கள்.  மத்திய அரசு இணை அமைச்சர், மக்கள் எதிர்த்தால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்கிறார். பி.ஜே.பி தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர்ராஜன், இல.கணேசன் உள்ளிட்டோர் நெடுவாசல் பக்கம் வந்துபாருங்கள். பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை... பொய்.ராதாகிருஷ்ணன். ஒருபோதும் இந்த திட்டத்தை நெடுவாசலில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கேயும் செயல்படுத்த விட மாட்டோம். ஓ.என்.ஜி.சி போட்ட ஆழ்துளை கிணறுகளை இப்போது தனியாருக்குத் தாரை வார்க்கத் துடிக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம்" என்றார்.

தொடந்து போராடும் மக்கள் மத்தியில் தலைவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக உரை வீச்சு நடக்கிறது. மக்கள் மத்தியில் பேசும் இளைஞர்கள், நெடுவாசலில் போராடுபவர்கள் தேசத் துரோகிகள் எனச் சொல்லும் பி.ஜே.பி தலைவர்களே, நெடுவாசலுக்கு வாருங்கள். ஏ.சி ரூம் போட்டுக்கொடுக்கிறோம். வந்து வாழ்ந்து பாருங்கள். நாங்கள் நடத்துவது எங்களுக்கான போராட்டம் இல்லை. அடுத்த தலைமுறைக்கான போராட்டம்" என முழங்கிவருகின்றனர். நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் புதுக்கோட்டையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்திலும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெடுவாசல் போராட்டத்தின் வலு இன்னும் அதிகரிக்கிறது.

- சி.ய.ஆனந்தகுமார். படங்கள் : ம.அரவிந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க