வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (01/03/2017)

கடைசி தொடர்பு:16:33 (01/03/2017)

எரிசக்திக்கு என்ன செய்வது என்ற ஒற்றைக் கேள்வியும்... 5 பதில்களும்!

நெடுவாசல்

“எல்லாம் வேண்டாமென்றால் எரிசக்திக்கு என்னதான் செய்வது... கற்காலத்துக்கே திரும்பப்போகச் சொல்கிறீர்களா... அரிகன் விளக்கை ஏற்றிவைத்தா இந்த நூற்றாண்டில் வாழமுடியும்?” இந்தக் கேள்வி, இப்போது உரக்கக் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. இதற்கு உரிய பதிலைச் சொல்லாமல் விடியலை நோக்கிப் பயணிக்க முடியாது. ஆம், பெருந்திட்டங்கள் வேண்டாம் என்று போராடுபவர்களும், அவையெல்லாம் வேண்டுமென்று போராடுபவர்களும் வெவ்வேறு கிரகங்களில் இல்லை. இருவரும் ஒரே இடத்தில் வசித்து வருகிறார்கள். ஒருவரின் நியாயமான கேள்விக்கு உரிய பதிலைச் சொல்லும் போதுதான் ஒத்திசைவு ஏற்படும். உண்மையான எதிரியை அடையாளம் காணமுடியும். 

சரி... இம்மக்களின் இந்த ஒற்றைக் கேள்விக்கு பதில் என்ன என்று தேடியபோது... அறிவியலாளர்கள் தந்த ஐந்து பதில்களின் தொகுப்பு இதோ...

'பயோ கேஸிஃபயர் மற்றும் பயோமாஸ்!'

‘பயோ கேஸிஃபயர்’. இது எளிமையான தொழிற்நுட்பம். அதாவது, விரைவாக வளரும் மரங்கள் மூலம் எரிசக்தியை உற்பத்தி செய்யும் முறை. அதிகம் நீர் தேவைப்படாத, வெப்பத்தைத் தாங்கி வளரும் மரங்களை நட்டு, வளர்த்து... அதன் முட்களையும் கிளைகளையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அதை ‘பயோ கேஸிஃபயர்' மூலம் ஆற்றலாக மாற்றலாம். தென்னைமர மட்டைகள், புதர் முள்செடிகள் ஆகியவற்றையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி இந்தத் தொழிற்நுட்பம் மூலம் எரிசக்தியாக மாற்றலாம். பயோ மாஸ் தொழிற்நுட்பமும் இந்த வகையைச் சார்ந்ததே. இந்தத் தொழிற்நுட்பத்தில் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். அனல்மின் நிலைய உற்பத்தி, டன் கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்றால், இந்தத் தொழிற்நுட்பத்தில் நாம் கரியை உற்பத்தி செய்கிறோம். இந்தக் கரியை விற்றும் பொருள் ஈட்டலாம். பயோ கேஸிஃபயர் தொழிற்நுட்பத்தில் 100 கி.வா மின்சாரம் தயாரிக்க அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய்தான் ஆகும். இதனைக்கொண்டு ஒரு கிராமத்துக்கே ஒளியூட்டலாம். இதன் இன்னொரு பலன், இதன்மூலமாக உள்ளூர் பொருளாதாரம் வளரும். அதாவது, இப்போது மின்சாரம் தயாரிக்கும் தொழிற்நுட்பங்கள் எல்லாம் பெரும் நிறுவனங்களின் கைகளில் இருக்கின்றன. அதற்கான நிலக்கரிச் சுரங்கங்களும் அவைகளிடமே இருக்கின்றன. ஆனால், பயோ கேஸிஃபயர் தொழிற்நுட்பம் சாமான்ய மக்களுக்கானவை. எளிய மக்கள்கூட ஒன்றிணைந்தே பயோ கேஸிஃபயர் மின்சார உற்பத்திக் கூடத்தைத் தொடங்கிவிட முடியும். அதற்கான, காய்ந்த மரமட்டைகளை விற்பதன் மூலம் விவசாயிகள் பொருள் ஈட்டலாம். 

காற்றாலை எரிசக்தி'அலைமின் உற்பத்தி!'

''கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை. இந்த வகை மின்சார உற்பத்தி முதன்முதலில் பிரிட்டனின் ஸ்காட்டிஷ் தீவுகளில்தான் தொடங்கியது. இந்தியாவிலும் கேரள மாநிலம்  ‘விழிஞ்ஜம்’ என்னுமிடத்தில் அலையாற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தியா ஏறத்தாழ 7,000 கி.மீ நீளத்துக்குக் கடற்பரப்பு கொண்டிருக்கிறது. இந்தத் தொழிற்நுட்பத்தைக்கொண்டே கடலோர மாவட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்துவிட முடியும்'' என்கிறார்கள் அறிவியலாளர்கள். 

‘காற்றாலை!'

உலகம் முழுவதும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 80,000 மெ.வா. இந்தியாவும் காற்றாலை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் நான்காம் இடத்தை வகிக்கிறது. முறையான திட்டமிடல் இருந்தால், இதனை இன்னும் மேம்படுத்தி கிராமம் மற்றும் சிறு நகரங்களின் தேவையை இதன்மூலமே தீர்த்துக்கொள்ள முடியும். இந்தியா 45,000 மெ.வா காற்றாலை மின்சார உற்பத்திக்கொண்டது.

'சூரிய ஆற்றல்!'

உலக கொள்கை நிறுவனம், ‘சூரியமின்’ உற்பத்தியே வேகமாகப் பரவிவரும் மின் உற்பத்தி முறை என்கிறது. அமெரிக்கா பெருமளவு மின்சாரத் தேவையை சூரிய ஆற்றல் மூலம் பெறத் திட்டமிட்டு அதற்கான செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறது. நமது தேசமும் சூரிய மின்கொள்கை தொடர்பாகப் பல திட்டங்களை தீட்டி வருகிறது. 

'நுகர்வை குறை!'

‘நுகர்வைக் குறை’. இதுதான் நேர்மையான அறம் சார்ந்த ஐந்தாவது பதில். ஆம், நிச்சயம் நுகர்வைக் குறைத்துக்கொள்வதன் மூலம் பல அழிவுகளை நாம் தவிர்க்கலாம். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது... அறைக்கு ஒரு குளிர்சாதனப் பெட்டியையும், தொலைக்காட்சிப் பெட்டியையும் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் தனி மனிதனாகச் சில கடமைகள் நமக்கு இருக்கிறது. 

எல்லாம் சரிதான்... இதுவெல்லாம் நம் அரசாங்கத்துக்குத் தெரியாதா...? நன்றாகத் தெரியும். 2008-ம் ஆண்டு இதற்கான தேசிய செயல் திட்டத்தையும் அறிவித்தது. அதில் ஒன்று, ‘தேசிய வளங்குன்றா வாழ்க்கை வசதிகள் திட்டம்’. அதாவது, வளங்குன்றா போக்குவரத்து, எரிசக்தி சிக்கனத்துடன் கூடிய கட்டடங்கள், நகரங்களில் வளங்குன்றா கழிவுப் பொருள் மேலாண்மை உள்ளிட்டவற்றுக்கான செயல்முறைகளை மேற்கொள்வதுதான் திட்டம். ஆனால், அந்தத் திசையில் நம் தேசம் பயணிக்கிறதா என்பதுதான் பெருங்கேள்வி...?
 
'சிறியதே அழகு!'

“உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா...? அதுதான், நம் அரசாங்கம் பெரும்பெரும் சூரிய ஆற்றல் திட்டங்களைச் செயல்படுத்துகிறதே... இது போதாதா...?”  ஆம். பிரச்னையே அதுதான். பெரும்பெரும் திட்டங்கள்தான் பிரச்னை. அது, இன்னும் அழிவைக் கொண்டுவரும். சூழலியலை நாசம் செய்யும். அதுமட்டுமல்லாமல், மையப்படுத்தப்பட்ட பெரும் மின்சாரத் திட்டங்களில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும்போது விநியோக இழப்பு நேரிடும். இந்தியாவில் இத்தகைய விநியோக இழப்பு மட்டும் முப்பது சதவிகிதம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். 

2008 செயல்திட்டத்தின்படி, உண்மையாக நம் தேசம் வளங்குன்றா வளர்ச்சியைத்தான் விரும்புகிறது என்றால், அந்தந்த பகுதிகளுக்கான மின்சாரத் தேவையை அந்தந்த பகுதிகளிலேயே தீர்த்துக்கொள்வதுபோலத் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதாவது, தர்மபுரியில் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு மின்சாரம் தேவையென்றால், சிறிய அலகில் சூரிய ஆற்றல் அல்லது பயோ கேஸ்ஃபயர் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் சிறிய அளவில் தொடங்க வேண்டும். கடலோர மாவட்டத்தின் மின்சாரத் தேவைகளை அலையாற்றல் மூலமாகவும், காற்றாலை மூலமாகவும் தீர்த்துக்கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எரிசக்தி நிறுவனங்களின் கைகளிலிருந்து பஞ்சாயத்தின் கைகளுக்குச் செல்லவேண்டும். அதற்கான தொழிற்நுட்பத்தை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். அப்போதுதான், விநியோக இழப்பு குறையும், இயற்கை வளங்கள் பெருமளவில் சுரண்டப்படுவதும் நிற்கும். இதற்கெல்லாம் மேலாக, தொழிற்நுட்பம் மக்கள் கையில் இருக்கும். லாபவெறி இல்லாமல் மக்களின் நலன் முதன்மையானதாக இருக்கும். 

- மு. நியாஸ் அகமது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்