வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (02/03/2017)

கடைசி தொடர்பு:10:24 (02/03/2017)

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆசான் பொன்னையன்! ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 5 

ஓ.பன்னீர்செல்வம்

2001 செப்டம்பர் 22-ம் தேதி காலை சரியாக 9 மணிக்கு, கீரின்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்தில் இருந்து வெளியில் வந்தார். தன் வீட்டைச் சுற்றி குவிந்து நிற்கும் போலீஸ், தன் காருக்கு செய்யப்படும் பாதுகாப்பு சோதனைகள், ஓயாத வயர்லெஸ் சத்தங்கள் என்று எல்லாவற்றையும் புதிதாக கொஞ்சம் மிரட்சியுடன் பார்த்தார். அதன்பிறகு சுதாரித்துக்கொண்டு, வீட்டைச்சுற்றி நிற்பவர்களுக்கு பவ்யமாக ‘வணக்கம்’ வைத்துவிட்டு காரில் ஏறினார். அந்தக் கார் நேராக கோட்டைக்குப் போகவில்லை. அதற்கு முன்னதாக, போயஸ் கார்டன் போனது. அங்கு போய் ஜெயலலிதாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார் பன்னீர்செல்வம். அதன்பிறகே அவரது கார் கோட்டைக்குப் பறந்தது. அதுவரை அமைச்சரவையில் 10-வது இடத்தில் இருந்த வருவாய்த்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், இப்போது முதல் அமைச்சர் பன்னீர்செல்வமாக கோட்டைக்குள் நுழைந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்

முதல் கையெழுத்து... முதல் பேட்டி!

பொன்னையன், தம்பித்துரை, ஓ.பன்னீர்செல்வம்ஜெயலலிதா கோட்டைக்கு வருவது ஒரு ‘சாமியின் தேர்பவனியைப் போல’ இருக்கும். நிச்சயம் அப்படிப்பட்ட படோடோபமான வருகையை பன்னீர்செல்வத்திடம் இல்லை. அதை அந்தச் சூழ்நிலைக்கைதியிடம் யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. பன்னீர்செல்வத்தின் காருக்கு முன்னால் ஒரு கார், பின்னால் ஒரு கார்... என இரண்டு கார்கள் சூழ கோட்டைக்கு வந்தார் தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவரைக் கோட்டையில் உள்ள அதிகாரிகள் வரவேற்று முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் இருக்கையில் அமராமல் தனியாக ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்தார்.

முதல் கையெழுத்தாக பத்திரப் பதிவு சம்மந்தப்பட்ட ஒரு கோப்பில் கையெழுத்துப்போட்டார். சீனியர் அமைச்சர்களான பொன்னையன், செங்கோட்டையன் பக்கத்தில் இருந்தனர். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது சுதாரித்துக் கொண்டு, அண்ணா, எம்.ஜி.ஆர் படம் மட்டும் இருப்பதைக் கவனித்துவிட்டு “அம்மா படம் ரெடி பண்ணுங்கள்” என்ற சன்னமான குரலில் உத்தரவிட்டார். உடனே, அதிகாரிகள் ஜெயலலிதாவின் படத்தைக் கொண்டுவந்து வைத்தனர். ஜெயலலிதா படம் வைக்கப்பட்ட பிறகே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதன்பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு. பத்திரிகையாளர்களின் கேள்விகளை நிதானமாக எதிர்கொண்டவர், ஒரு கேள்விக்கு அளித்த பதில் மிக முக்கியமானது. “தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்களா?”எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “பொறுப்பை உணர்ந்து அதற்குத்தக்கபடி முடிவெடுப்பேன்” என்று பதில் அளித்தார் பன்னீர்செல்வம். 

ஒருமுறை கோட்டை... இருமுறை போயஸ் தோட்டம்!

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாபத்திரிகையாளர்கள் சந்திப்புக்குப்பிறகு கோட்டையில் இருந்து கிளம்பியவர் நேராக தனது தென்பெண்ணை இல்லத்துக்குச் சென்றார். மாலையில் மீண்டும் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினார். இதையே தனது அன்றாட வழக்கமாக வைத்துக் கொண்டார் பன்னீர்செல்வம். கோட்டைக்கே ஒரு முறை செல்பவர், போயஸ் தோட்டத்துக்கு இரண்டுமுறை ஆஜர் போட்டார். ஆனால் அதிகாரிகள்தான் அந்த நேரத்தில் ரொம்பவும் திணறிப்போனார்கள்.

பன்னீர்செல்வம் எப்போது கோட்டைக்கு வருகிறார்... எப்போது வெளியேறுகிறார் என்பதை அவர்களால் கணிக்கவே முடியவில்லை. ஜெயலலிதா கோட்டைக்கு வருகிறார் என்றால் முதலில் போலீஸ்காரர்கள் வந்து குவிவார்கள். ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே போலீஸ்காரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கிவிடும். கோட்டையில் உள்ள அதிகாரிகள் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பார்கள். முதலமைச்சரிடம் மனுக்கொடுக்க வரும் பொதுமக்கள் ஒருபக்கம் குவிந்து நிற்பார்கள். வெளியூர்களில் இருந்து வரும் கட்சிக்காரர்கள் கறைவேட்டி, கஞ்சிபோட்ட சட்டையோடு அணிவகுத்து நிற்பார்கள். இந்த வரிசையை எல்லாம் சீர்படுத்துவதில் போலீஸ் மூச்சுத் திணறிப்போகும். ஆனால் பன்னீருக்கு அப்படியில்லை! 

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆசான் பொன்னையன்!

பொன்னையன் பன்னீர்செல்வம்கோட்டைக்கு சத்தமில்லாமல் வரும் பன்னீரை சரியாக அறிந்து வைத்திருந்தவர் பொன்னையன்தான். வருவாய்த்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, துறை ரீதியாக தனக்கு எழும் சந்தேகங்களை அன்றைய நிதி மற்றும் சட்டத்துறை அமைச்சர் பொன்னையனிடம்தான் கேட்பார். அந்த வழக்கம் அவர் முதலமைச்சர் ஆனபிறகும் தொடர்ந்தது. ஒரே வித்தியாசம், இப்போது பொன்னையன் ஓ.பன்னீர்செல்வத்தின் அறையைத் தேடிப்போகிறார். தினமும் ஒரு மணிநேரம் முதலமைச்சரின் பணிகள் குறித்து பொன்னையன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிளாஸ் எடுக்கிறார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இருந்த அதிகாரிகள்தான் பன்னீர்செல்வத்தைச் சுற்றியும் இருந்தனர். அவர்கள் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் பற்றி கார்டனுக்கு தனியாக ஒரு அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோக, சசிகலாவுக்கு வேண்டிய அதிகாரிகள் அவருக்கும் அறிக்கை அனுப்பிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியவர், என்ன பேசப்போகிறார் என்று மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் குறுகுறுப்பு. வந்தார்கள். “அம்மா மீண்டும் இந்த நாற்காலியில் வந்து அமருகிறவரை எனக்கு நிம்மதியில்லை” என்று பேசினார். அனைத்து அமைச்சர்களும் அதற்கு ஆமாம் என்று தலையாட்டுவதைத்தவிர வேறு வழியில்லை.  

யாருக்கு விசுவாசம்... பரிதவித்த பன்னீர்செல்வம்!

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன்

அந்தநேரத்தில் பன்னீர்செல்வம் தனது விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், தன் அரசியல் குரு தினகரனுக்கும் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அன்றாடம் தோட்டத்துக்கு அட்டெண்டன்ஸ், நீட்டிய பைல்களில் கையெழுத்து, இருபத்து நாலு மணி நேர கண்காணிப்பு என்று தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட பச்சைக் கிளியைப்போல் பரிதவித்தார் பன்னீர்செல்வம். அது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதேநேரத்தில் எதிர்காலத்தில் எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்கான பாடங்களாகவும் அமைந்தன. யாருக்கு தன் விசுவாசத்தைக்காட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவே பன்னீருக்கு வகுப்பெடுத்தார். அதில் பன்னீருக்கு ஜெயலலிதா மூன்று கட்டளைகள் கொடுத்தார். அந்தக் கட்டளைகளில் ஒன்றுதான், தினகரனுக்கும் பன்னீருக்கும் இடையில் லேசான விரிசல் உருவாகக் காரணமாக அமைந்தது. 

பயணம் தொடரும்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஜோ.ஸ்டாலின்
படங்கள் - சு.குமரேசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்