எம்.ஜி.ஆரின் முதல் காதல்..! நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் -17

எம் ஜி ஆர்

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சில பிரச்னைகள் இருந்தன. 'சதி லீலாவதி' படப்பிடிப்பின் ஆரம்ப நாட்களில் பெரும் சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர். சினிமாவைப்பற்றிய அடிப்படை புரிதல்கள் அவருக்கு கைவரவில்லை.

பார்வையாளர்களுக்கும் நாடகமேடைக்கும் பல அடி துார இடைவெளி இருக்கும் என்பதால்  அந்நாளைய நாடக நடிகர்கள் வசனங்களையும் பாடல்களையும் உச்சஸ்தாயியில் பாடி நடிப்பார்கள். சினிமாவும் புதிது; சினிமாவுக்கு எம்.ஜி.ஆரும் புதிது. சொல்லவேண்டுமா எம்.ஜி.ஆர் நிலையை?...நாடக பாணியிலான நடிப்பை திரைப்படத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டார் அவர்.

வழக்கம்போலவே சினிமா வசனங்களையும் நாடக பாணியிலேயே உரத்தக் குரலில் பேசினார். சினிமாவின் நுணுக்கங்களை அவரால் முதலில் புரிந்துகொள்ளமுடியவில்லை. இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் படம்தான் என்றாலும், அமெரிக்கரான அவர் மேலைநாடுகளின் மென்மையான வசனபாணியைப் பின்பற்றி படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அத்தகையவருக்கு எம்.ஜி.ஆரின் நாடக பாணி நடிப்பும், வசன உச்சரிப்பும் எரிச்சலைத் தந்தது. ஆவேசத்தோடு இப்படி பேசுகையில் நடிப்பும் மிகையாக வெளிப்பட்டது. டங்கன் பலமுறை சொல்லியும் எம்.ஜி.ஆர் திருத்திக்கொள்ளவில்லை.

எம் ஜி ஆர்ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எம்.ஜி.ஆரை தனியே அழைத்துச்சென்று, “மிஸ்டர் ராமச்சந்திரன், சினிமா  மனித உழைப்பினால் மட்டும் உருவாவது அல்ல; பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களின் ஒருங்கிணைப்பில் உருவாகிறது. நீங்கள் இயல்பாக பேசி நடியுங்கள். நான் பார்வையாளனுக்கு தக்கபடி அதைக் கொண்டு சேர்க்கிறேன். இது தொடர்ந்தால் உங்கள் சினிமா வாழ்வு பாதிக்கப்படும்” என மென்மையாக சொல்லிப் புரியவைத்தார். 

இத்தனை அல்லல்களுக்கு மத்தியில் கிடைத்த அரியவாய்ப்பை இழக்க விரும்பாத எம்.ஜி.ஆர் பெரும் முயற்சிகளுக்குப்பின் நாடக பாணி நடிப்பிலிருந்து வெளிவந்தார். சில நாட்களில் இயக்குநர் டங்கனே ஆச்சர்யப்படும்வகையில் எம்.ஜி.ஆரின் நடிப்பு மிளிர்ந்தது.

திரைப்படத்தின் நுணுக்கங்களை புரிந்துகொண்டாலும் நாடகத்தைத்தான் எம்.ஜி.ஆர் மிகவும் நேசித்தார். சினிமாவின் யதார்த்தங்களை உணர்ந்ததால் அவர் சினிமாவுக்குரிய உடல்மொழியில் நடித்து வெற்றிபெற்றார். ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு திருப்தியளித்த விஷயமல்ல. சினிமாவின் வெற்றிக்காக அவர் விருப்பமின்றி சில விஷயங்களை தியாகம் செய்யவேண்டியதானது.

'எம்.ஜி.ஆரின் அழுகை நடிப்பு சோபிக்காது என்றும், அழுகிற காட்சிகளில் அவர் முகத்தை காமிராவுக்கு காட்டமாட்டார்' என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் ஆரம்பநாட்களில் நாடகங்களில் கூட கிளிசரின் பயன்படுத்தமாட்டார். இயல்பாக நடிப்பதையே அவர் விரும்பினார். 'என் தங்கை' நாடகத்தில் துயரமான காட்சிகளுக்குத் தக்கபடி முகத்தில் உணர்ச்சிகளை வரவழைத்துக்கொண்டு அவர் அழும்போது அவரின் அழுகை பார்வையாளர்களை உருகவைத்துவிடும். சினிமாவிலும் அப்படியே நடிக்க அவர் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் சில படங்களில் கிளிசரினை பயன்படுத்தாமல் இயற்கையாகவே அழுகை காட்சிகளில் நடித்தார். ஒரு படத்தில் நடித்துமுடித்து 'ரஷ்' பார்த்தபோது அவரது அழுகை நடிப்பு சோபிக்கவேயில்லை. காரணம் படமாக்கப்பட்டபோது இருந்த மின்விளக்கின் சூட்டினால் அவரது கன்னத்தில் வழிந்த நீர் உடனடியாக காய்ந்து உலர்ந்துபோனது. காட்சி எடுபடாமல் போனது. நாடகம் வேறு, சினிமா வேறு என்பதை அன்றுதான் முழுமையாக புரிந்துகொண்டார் எம்.ஜி.ஆர். 

சதி லீலாவதி திரைப்படம் வெளியாகி அபார வெற்றிபெற்றது. படத்தின் வெற்றியைவிட திரையுலகில் நாமும் நுழைந்துவிட்டோம் என்பதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் மகிழ்ச்சி. சதி லீலாவதியைத் தொடர்ந்து 'இரு சகோதரர்கள்' வாய்ப்பு. முதல் இரண்டு படங்களுக்குப்பின் வாய்ப்பின்றி இருந்தவருக்கு மீண்டும் எம்.கே.ராதா மூலம் 3-வது படவாய்ப்பு கிடைத்தது. 1938-ம் ஆண்டு 3-வது படமாக 'தட்சயக்ஞம்' வெளியானது.  இதில் கதாநாயகன் தட்சனாக எம்.ஜி.நடராஜபிள்ளை என்பவர் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு மகாவிஷ்ணு வேடம். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கல்கத்தாவிலேயே நடந்தது. இது கம்பெனி தயாரித்த மாயா மச்சீந்திரா படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஒரு வேடம் கிடைத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளியான படம் வீர ஜெகதீஸ்....இந்த படம் வெளியான சமயம் எம்.ஜி.சக்கரபாணிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது. 

எம் ஜி ஆர்இதனால் பெரியவனைப்போல் சின்னவனுக்கும் திருமணம் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படவில்லை. “சினிமாவில் பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் லட்சியம். திருமணம் அதற்குத் தடையாக இருக்கும். சினிமாவில் அப்படி ஒரு நிலையை எட்டியபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திப்பேன்” என உறுதியாக தெரிவித்துவிட்டார். 

உள்ளம் உறுதி காட்டினாலும் 22 வயது வாலிபனால் இயற்கையான உணர்ச்சிகளை ஒளித்துவைக்கமுடியுமா?... அப்போது எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே ஒரு இளம்பெண் வசித்துவந்தார். இளமையும் அழகும் இணைந்த வசீகரமான இந்த இளம்பெண் மீது எம்.ஜி.ஆருக்கு  ஒருவித ஈர்ப்பு இருந்தது.

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமயங்களில் அந்தப் பெண் எம்.ஜி.ஆர் வீட்டுக்குள் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வருவார். அப்போது அவளைக் கவர்வதற்காக எம்.ஜி.ஆர் ஒரு ஆர்மோனியப் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டு ஏதாவது கத்திப்பாடுவார். அதை அந்தப் பெண் ஓரக்கண்ணால் பார்த்தபடி செல்வதைக் கண்டு ரசிப்பார் எம்.ஜி.ஆர்.

கொஞ்சநாளில் இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்ளத்துவங்கினர். அரசல் புரசலாக சத்தியபாமாவின் காதுகளுக்கு இந்த சேதி வந்துசேர்ந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் என்ன ஆகும் என பழுத்த அனுபவசாலியான அவருக்குத் தெரியாதா?! கொஞ்சநாட்களில் அந்த வீட்டை காலி செய்துகொண்டு வேறு இடத்துக்கு குடிபுகுந்தார்.எம்.ஜி.ஆர் தாடிவிட ஆரம்பித்தார்.

அதன்பின் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார் சத்தியபாமா. சக்கரபாணியுடன் கலந்துபேசியவர், எம்.ஜி.ஆரின் 'வீரஜெகதீஷ்' பட ஸ்டில் ஒன்றைப் பையில் பத்திரப்படுத்தியடி பாலக்காட்டுக்கு ரயில் ஏறினார்...

சத்தியபாமா எதற்கு பாலக்காடு புறப்பட்டுச் சென்றார்...

இந்த தொடரின்  முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
 

- எஸ்.கிருபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!