வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (02/03/2017)

கடைசி தொடர்பு:13:51 (02/03/2017)

ப்ளஸ் டூ தேர்வில் காப்பி அடித்தால் என்ன தண்டனை?

ப்ளஸ் டூ தேர்வு

ள்ளி வாழ்க்கையின் இறுதிச்சுற்று 12-ம் வகுப்பு. இந்த ஆண்டுக்கான ப்ளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்கியிருக்கின்றன. தமிழகம் முழுவதும் 2,427 மையங்களில் 8,98,763 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று ,தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்வு எழுதுகின்றனர். 53 சதவிகிதம் பேர் மாணவிகள். 47 சதவிகிதம் பேர் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

அரைமணி நேரம் அனுமதி

காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. முதல் 10 நிமிடங்கள் கேள்வித் தாளைப் படிப்பதற்கும், 5 நிமிடங்கள் விடைத்தாளில் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்புவதற்கும் வழங்கப்படுகிறது. 10 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அரை மணி நேரம் வரை தாமதமாக வரும் மாணவர்கள், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அரைமணி நேரத்துக்கு மேல் தாமதமாக வருபவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

காப்பி அடிப்பதை ஊக்குவித்தால் நடவடிக்கை  

காப்பி அடிப்பதைத் தடுக்க கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காப்பி அடிப்பதைத் தடுக்க 8000 ஆசிரியர்களைக்கொண்ட அதிரடிப்படை வலம்வருகிறது. தேர்வில் காப்பி அடிக்கும்போது பிடிபட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. எனவே, காப்பி அடிப்பதைத் தவிர்க்கும்படி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பள்ளி மாணவிகள்

தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் சில தனியார் கல்வி நிறுவனங்களே மாணவர்களைக் காப்பி அடிக்கத் தூண்டியதாகக் கடந்த ஆண்டு கல்வித்துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் கடும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களை காப்பி அடிக்கத்  தூண்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு நடைபெறும் அறைகளில், போதுமான மின்வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  

திருத்தும் பணிகள்

மார்ச் 31-ம் தேதி வரை ப்ளஸ் டூ தேர்வுகள் நடைபெறுகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று தெரிகிறது. 32 மாவட்டங்களிலும் 60-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் 2 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

மே மாதம் முதல்வாரத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கும். அதேபோல மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியும் அதே காலகட்டத்தில்தான் தொடங்கும். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு, ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர்தான் தொடங்கும்.

- கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்