வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (02/03/2017)

கடைசி தொடர்பு:15:17 (15/03/2018)

“தமிழக இயற்கை வளத்தை வேட்டையாடுகிறது மத்திய அரசு!” கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்!

இயற்கை


"திட்டங்களும், சட்டங்களும் மக்களுக்காக வகுக்கப்பட்டதே தவிர, மக்களை ஒடுக்குவதற்காக அல்ல" என்று உலகப் புரட்சியாளர்கள் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள். ஆனால், தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள், பெரும்பாலும் சாமான்ய மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் திட்டங்களாகவே இருக்கின்றன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களுக்கு பலனளிக்கக்கூடிய மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், இயற்கை வளத்தைப் பாதிக்கக்கூடிய திட்டங்களையும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய திட்டங்களையும் அதிக அளவில் செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புக்காட்டிவருகிறது.

அவற்றில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின் குழாய்கள் பதிப்புத் திட்டம், நியூட்ரினோ அமில ஆய்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்கள் அடங்கும். மக்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தலாகத் திகழும் இதுபோன்ற திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிர ஆர்வம் காட்டுகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்று தெரிந்து, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், அந்தத் திட்டங்களைக் கைவிடுவதில்லை. மத்திய அரசின் இதுபோன்ற பிடிவாதப்போக்கால், மக்கள் நடத்திய போராட்டங்கள் வருடக்கணக்கில் நீடித்த வரலாறுகளும் தமிழகத்தில் உண்டு.

தனியார் நிறுவனங்களுக்கு தரகர் வேலைபார்க்கும் மத்திய அரசு

தற்போது, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பல நேரங்களில் மத்திய அரசு ஆராய்வதும் இல்லை. அத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதும் கிடையாது. 'தமிழகத்தை மட்டும் மத்திய அரசு ஏன் இப்படி நடத்துகிறது?' என்பது பற்றி ' பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் பேசினோம்.

நொடுவாசல்

"தமிழகத்தின் மீதான மத்திய அரசின் நிலைப்பாடு, மிகவும் தரம்தாழ்ந்து உள்ளது. அதன் விளைவுதான் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிற இத்தனை திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த முயல்வதற்குக் காரணம். மத்திய அரசின் இத்தகைய அடாவடித்தனத்தை, இங்குள்ள ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் தட்டிக்கேட்க அஞ்சுகிறாரகள். இவர்கள் ஊழல் கறைபடிந்த கட்சியாக, ஆட்சியாக இருப்பதால், மத்திய அரசை எதிர்த்துக் கேட்க தைரியமில்லாத சூழ்நிலையிலேயே உள்ளனர். அதன் காரணமாக, யாரும் தட்டிக்கேட்க முடியாத பலவீனமான மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. அதைப் பயன்ப்படுத்தி, இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு தரகர் வேலையை மத்திய அரசு பார்க்கிறது.

மேலும், குஜராத்தில் நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு. அந்தத் திட்டத்துக்கு அம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை நிறுத்திவிட்டது. அதேபோன்று 2008-ம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் அணு உலைகள் அமைக்க அமெரிக்கா-இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் தமிழகத்தைத் தவிர மற்ற எந்த இடத்திலும் அணு உலைகளை மத்திய அரசு அமைக்க முடியவில்லை. தமிழகத்தில், மக்களுக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தினால், கேட்பாரில்லை என்று நினைக்கிறது மத்திய அரசு. அதனால் இயற்கை வளங்களையும், விவசாயத்தையும் வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. இதில், பொதுமக்கள் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாமான்ய மக்கள் தொடர்ந்து போராட்டக்களத்தில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்" என்றார் கவலையாக.

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க காய் நகர்த்திய மத்திய அரசு

இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனிடம் பேசியபோது, "தற்சார்புக்காகக் குரல் முகிலன்கொடுத்து மக்கள் வாழ்ந்த பூமி தமிழகம். இயற்கை வளம் கொட்டிக்கிடக்கின்ற மாநிலமாக இருக்கிறது. வெறும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் ஷேல் எரிவாயு போன்ற வளங்கள் மட்டுமல்ல. இந்த நிலத்துக்குக் கீழ், 300 லட்சம் கோடி ரூபாய்  நிலக்கரி வளம் கொட்டிக்கிடக்கிறது. அதேபோன்று ஹைட்ரோ கார்பனும் பல லட்சம்கோடி மதிப்புடையது. இவற்றைச் சந்தைப்படுத்திக் கொள்ளை லாபம் பார்க்கத் துடிக்கிறது மத்திய அரசு...

அதனால், யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இந்தத் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க, எல்லா வகையிலும் காய் நகர்த்தல்களைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை மலட்டுத்தன்மை ஆக்கும் செயல்களில் மத்திய அரசு எப்போதோ தீவிரமாக இறங்கிவிட்டது. இதனை மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ தடுக்கத் தயங்குகிறார்கள். அதனால், இயற்கை வளத்தை  நம்பியுள்ள மக்களாகிய நாம்தான் பாதுக்காக்க வேண்டும்" என்றார்.

- கே.புவனேஸ்வரி


டிரெண்டிங் @ விகடன்