"அவர் அப்படி சொல்லவில்லை; நான் இப்படி சொல்லவில்லை" பொன். ராதாகிருஷ்ணன் புதுவிளக்கம் | Minister Pon Radhakrishnan Speaks about Hydrocarbon Project

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (04/03/2017)

கடைசி தொடர்பு:08:32 (04/03/2017)

"அவர் அப்படி சொல்லவில்லை; நான் இப்படி சொல்லவில்லை" பொன். ராதாகிருஷ்ணன் புதுவிளக்கம்

பொன்னார் - பொன். ராதாகிருஷ்ணன்


'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு' தெரிவித்து நெடுவாசல் போராட்டக் களம் சூடு பறக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் விஞ்ஞானிகளா?' என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாக வெளியான செய்தி பலத்த சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணனிடமே இதுகுறித்துக் பேசினோம்... 

''ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் விஞ்ஞானிகளா? என்று கேட்டிருக்கிறீர்கள்...''

(இடைமறித்து)

''விஞ்ஞானிகளா? என்று நான் கேட்கவில்லை. நானும் விஞ்ஞானி கிடையாது. ஆனால், இந்த விஷயத்தைப் பொருத்தவரை விஞ்ஞானப்பூர்வமாகத் தெரிந்தவர்கள் சொல்வதைக் கேட்பதா, அல்லது திட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்பதா? 

'ஏற்கெனவே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை' என்று துறை சார்ந்த அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனாலும் பிரச்னை இருக்கிறதா, இல்லையா என்று  நமக்கு சந்தேகம் வருகிறதென்றால், நமக்கு வேண்டியது தெளிவு. அதற்கு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இருக்கும்போது அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதுதான் சரியான வழிமுறை. நான் அறிந்தவரையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதுதான். ஒருவேளை அப்படி பிரச்னை இருக்கிறதென்றால், இந்தத் திட்டமே வேண்டாம் என்றுதான் நானும் சொல்கிறேன்.''

''நாட்டின் முன்னேற்றத்துக்காக தியாகம் செய்யவேண்டும் என்று இல.கணேசன் சொல்கிறார். அப்படியென்றால், இந்தத் திட்டத்தினால் பாதிப்பு இருக்கிறது என்றுதானே அர்த்தம்...?''

''இத்தனை ஆண்டுகாலமாக தமிழ்ச் சமுதாயத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் 'நீங்கள் அழிந்தாலும் பரவாயில்லை... தியாகம் பண்ணுங்கள்' என்று எப்படி சொல்வார்? ஒருநாளும், தமிழர்களுக்கும் தமிழ் நாட்டின் நலனுக்கும் எதிராகப் பேசக்கூடியவர் அல்ல இல.கணேசன். உதாரணத்துக்காக சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி அவர் பேசியிருக்கலாம். மற்றபடி அவர் என்ன காரணத்துக்காகப் பேசியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது.''

ஸ்டாலின்

 

''போராட்டக்களத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினும் பொதுமக்களோடு கைகோத்திருக்கிறாரே...?''

''இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தவர்களே அவர்கள்தான். 50 ஆண்டுகாலமாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்த தமிழ்நாட்டுக்கு செய்ததெல்லாம் துரோகம்தானே...? 2007-ல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஆய்வுகளை நாங்கள் பண்ணவில்லை என்று இவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம்? திட்டத்துக்கு கையெழுத்து போட்டுவிட்டு தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டோம் என்பார்கள். அவ்வளவு விவரம் இல்லாதவர்களா? ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டு, ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்காமல் விட்டுவிடுவார்கள். பீட்டா அமைப்பைக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.

ஒரு அரசாங்கம் கொண்டுவந்த திட்டத்தை அடுத்து வருகிற அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என்றால், நாடு எப்படி முன்னேறும்? மதுரவாயல் பறக்கும்சாலைத் திட்டம், நாங்குநேரி தொழில்நுட்பப் பூங்காத் திட்டம் எல்லாமே கிடப்பில் கிடக்கிறதே.... இதுமட்டுமல்ல... கிழக்கு மாவட்டங்களில் ஆரம்பித்து ஒட்டுமொத்த தமிழகத்திலும் தொழில் வளர்ச்சித் திட்டங்கள் என்று எதுவுமே செயல்படுத்தப்படவில்லை. 50 வருடங்களாக இவர்களுக்கு தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்ததுதானே மிச்சம்?''

ஹைட்ரோகார்பன் திட்டம்''தமிழக அரசும், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்காது என்று கூறியிருக்கிறதே...?''

''கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தபோதும்கூட மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது திடீரென்று சில அமைப்புகளோடு சேர்ந்து அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், மாநில அரசும் மக்களின் சந்தேகத்தைப் போக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டுமே தவிர பொறுப்புகளை தட்டிக்கழிக்கக்கூடாது. விஞ்ஞானிகளையும் துறை சார்ந்த அதிகாரிகளையும் மக்களிடம் பேசவைத்து, தீர்வு காண வேண்டும்.''

''மத நம்பிக்கையை உதாரணம் காட்டி, சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்கும் பி.ஜே.பி, ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மட்டும் மக்களின் கருத்தை ஏற்க மறுப்பது ஏன்?''

''ராமர் பாலம் என்பது ஒரு மத நம்பிக்கை மட்டுமே கிடையாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாட்டுக்கு இயற்கையாகவே அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அரணாகவே அதனை எடுத்துக்கொள்ளவேண்டும். அண்டை நாடுகள் கடல்வழியாக நம் நாட்டின்மீது போர் தொடுத்தால், பலியாகப்போவது நமது அண்ணன், தம்பிகள்தானே...? அந்தவகையில், கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு என்றால், கப்பல் போகாததும் ஒருவகையில் பாதுகாப்புதான். சேது சமுத்திரத் திட்டப் பிரச்னை என்பது காங்கிரஸ், தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ள வழக்கு. நீங்கள் இதனைச் சொல்கிறீர்கள், நான் என்ன நினைக்கிறேன்... 'சிங்களத் தீவினுக்கோர்  பாலம் அமைப்போம்' என்ற நோக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்போது அங்குள்ள தமிழனும் பாதுகாக்கப்படுவான். இந்த விஷயத்தை இவ்வளவு பெரிய விவாதமாக எடுத்துப்பேசுகிற தமிழ் ஆர்வலர்களில் எத்தனைபேர் இனயம் துறைமுகத்துக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்? களத்தில் நின்று போராடியிருக்கிறார்கள்? இன்றைக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இனயம் வர்த்தக துறைமுகத்தை நாங்கள்தானே கொண்டுவருகிறோம். ஏற்கெனவே இதேத் துறைகளில் அமைச்சர்களாக ஜி.கே.வாசன், டி.ஆர்.பாலு எல்லோரும் இருந்திருக்கிறார்களே... ஏன் கொண்டுவரவில்லை?''

- த.கதிரவன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்