"எங்களை அழிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுவருகிறது...!' தீபா கணவர் மாதவன் | We are under Life threat says Deepa's Husband

வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (07/03/2017)

கடைசி தொடர்பு:18:35 (07/03/2017)

"எங்களை அழிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுவருகிறது...!' தீபா கணவர் மாதவன்

தீபா

'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஏகப்பட்ட அமளிதுமளிகள் நடந்தேறி வருகின்றன. அந்தக் கட்சியில் நடைபெற்றுவரும் திடீர் குழப்பங்களாலும், அறிவிப்புகளாலும் பல தொண்டர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனிடையே, தீபாவுக்கும் அவரது கணவரான மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், மாதவன் அதனாலேயே மாதவன், கட்சிப் பணியைக் கவனிக்க மறுக்கிறார் எனவும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

இதுகுறித்து மாதவனிடம் பேசினோம். "எங்க கட்சியிலே எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சியையும், எங்களையும் பழிவாங்குவதற்காக, சில சதிகாரக் கும்பல் இதுமாதிரி செய்திகளைப் பரப்புறாங்க. கட்சி நிர்வாகிகள் அறிவிப்பைக்கூட நானும், தீபாவும் தனித்தனியா வெளியிட்டதாகச் சொல்றாங்க. அப்படி எதுவும் இல்லை. தீபா வெளியிட்டதுதான் உண்மையான அறிவிப்பு. கட்சி சம்பந்தமா இதுவரைக்கும் எதையும் நான் வெளியிடலை. தொண்டர்கள் எங்க கட்சியைவிட்டு வெளியே போயிட்டதா சொல்றாங்க. இது சுத்த பொய். தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தீபாவைச் சந்தித்து கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பற்றி ஆலோசனை செய்றாங்க. இதுமட்டுமில்லாம சமூக வலைதளத்துல எனக்கும், தீபாவுக்கும் பிரச்னை அதனால, கட்சியை நான் கவனிக்கலைனு செய்தியை வெளியிடுறாங்க. இதையெல்லாம் யார் செய்றாங்கனு தெரியலை. இப்படிப் பண்றதால அவுங்களுக்கு என்ன கிடைக்கப்போகுதுன்னும் தெரியலை. உண்மையில் எனக்கும் தீபாவுக்கும் ஒரு பிரச்னையும் இல்லை. 

நான் ஏன் கட்சியைப்பத்தி அதிகம் பேசுறது இல்லைனா, கட்சியோட முழுப்பொறுப்பும் தீபாகிட்டத்தான் இருக்கு. அவுங்களே நல்ல முடிவை எடுத்துக்கிட்டு இருக்காங்க. அப்படியிருக்க, நான் எதுக்கு தனியா ஒரு முடிவை எடுக்கணும்? எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, தேர்தலில் ஜெயிச்சி தமிழ்நாட்டுக்கு நெறைய நல்லது செய்யும்னு மக்கள் நம்புறாங்க. அந்த நம்பிக்கையைக் கண்டிப்பாக தீபா காப்பாத்துவாங்க. அவங்களுக்கு ஆலோசனை தேவைப்படும் பட்சத்தில் நான் அதற்கு ஆதரவாக இருப்பேன். நாங்க, கட்சி ஆரம்பிக்கிற முடிவில் இருந்ததிலிருந்து இப்பவரைக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்துக்கிட்டு இருக்கு. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுற ஆளு நாங்க கிடையாது. அவ்வளவு ஏன், எங்களை அழிக்கிறதுக்கு ஒருகூட்டமே மிகப்பெரிய சதிச்செயல்களைச் செஞ்சிக்கிட்டு இருக்கு. அவுங்க, எவ்ளோ பெரிய சதிச்செயல்களைச் செஞ்சாலும், மிரட்டல்களைக் கொடுத்தாலும் நாங்க பின்வாங்கமாட்டோம். எங்களை நம்பிவந்த தொண்டர்களையும், தமிழக மக்களையும் நாங்க ஒருபோதும் கைவிடமாட்டோம். தொண்டர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் சதிகாரர்கள் பரப்பும் செய்திகளை நம்பவேணாம். எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதை தீபாவே வெளியிடுவார்" என்றார், நெகிழ்ச்சியுடன்.

சதிச்செயல் செய்வது யாரோ?

- ஜெ.அன்பரசன் | படங்கள் : சொ.பாலசுப்ரமணியன் 


டிரெண்டிங் @ விகடன்