''ஜெயலலிதா மரணத்தில் ஏதோ மர்மம்!’’ பொன். ராதாகிருஷ்ணனின் சந்தேகம் | Pon .Radhakrishnan Raises doubt on Jayalalithaa's death

வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (07/03/2017)

கடைசி தொடர்பு:15:18 (15/03/2018)

''ஜெயலலிதா மரணத்தில் ஏதோ மர்மம்!’’ பொன். ராதாகிருஷ்ணனின் சந்தேகம்

ஜெயலலிதா

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பிவருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ஜெ. மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கோரி மார்ச் 8-ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு, அரசியல் களத்தைச் சூடாக்கியிருக்கும் நிலையில்... ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கையை மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த 6-ம் தேதி வெளியிட்டிருந்தார். திடீரென்று தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்முத்தரசன்

''காலம் கடந்த அறிக்கை எதற்கு?''

இரா.முத்தரசன், (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்): "ஜெயலலிதாவின் சிகிச்சை அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது வெளியிட்டிருப்பது காலம் கடந்த நடவடிக்கை. மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தக் காலகட்டங்களில் அரசு சார்பில் முதல்வருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரத்தை அளிக்காததே, இத்தனை குழப்பங்களும் சந்தேகங்களும் உருவாகக் காரணமாகியுள்ளன. ஜெயலலிதாவின் மரணத்தில் நிகழ்ந்துள்ள தவறுக்கு தமிழக அரசுதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்துத் தெரிவிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. அத்தகைய கடமைகளைத் தமிழக அரசு செய்ய தவறியதன் விளைவே குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்ற கட்சிகளைவிட அந்தக் கட்சியில் இருப்பவர்கள்தான் சந்தேகத்தையும் எழுப்பிவருகிறார்கள். காலம் கடந்து இதனை வெளியிட்டிருப்பது கவலைக்குரியது.''

''சந்தேகத்தை தீர்க்காத அறிக்கை!''  

தொல்.திருமாவளவன் தொல்.திருமாவளவன், (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்): ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போது ஒரு புகைப்படம்கூட வெளியிடாதது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. இது, அ.தி.மு.க-வில் இருதரப்புக்குமான மோதல் காரணமாக ஒ.பி.எஸ் தரப்பில் மட்டுமே எழுப்பும் சந்தேகம் அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களும் எழுப்புகிற சந்தேகம். அதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவருடைய புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சந்தேகங்களை இவர்கள் தீர்க்க வேண்டாம். ஆனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களையாவது தீர்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த அறிக்கையைத் பொன் ராதாகிருஷ்ணன் தற்போது அரசு வெளியிட்டிருப்பதால், இதுவரை இருந்து வருகிற சந்தேகம் இதனால் முழுமையாக தீர்ந்துவிடாது. மேலும் அந்த மருத்துவ அறிக்கையில் பாமர மக்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் தகவல்கள் சொல்லப்பட்டு உள்ளன.''

"ஜெ. மரணத்தில் ஏதோ விஷயம் உள்ளது!''  

பொன்.ராதாகிருஷ்ணன், (மத்திய அமைச்சர்): "மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு அவருடன் இருந்தவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதேபோன்று இந்தச் சந்தேகத்தை ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்கள்தான் எழுப்பியுள்ளனர். அப்படிச் சந்தேகத்தை எழுப்புகிறபோது... ஓர் அமைச்சர் சொல்கிறார், 'விசாரிப்பதாக இருந்தால் முதலில் ஒ.பன்னீர்செல்வத்திடம்தான் விசாரிக்க வேண்டும்' என்று. அதனால் ஏதோ ஒரு சம்பவம், ஜெயலலிதாவின் மரணத்தில் நிகழ்ந்துள்ளது என்றுதானே அர்த்தம். அந்தச் சம்பவம் என்ன என்பது ஜி.ராமகிருஷ்ணன் குறித்து அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் விளக்க வேண்டும். ஒருவரையொருவர் குற்றம்சொல்லிக் கொண்டிருக்காமல் நடந்தவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒ.பன்னீர்செல்வம் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த காரணத்தால்தான் அவசர அவசரமாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.''

''வெளிப்படைத்தன்மை இல்லை!'' 

ஜி.ராமகிருஷ்ணன், (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்): ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நேரத்தில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைப் பார்க்க அனுமதித்திருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை இல்லாமல் போனதால் சந்தேகம் எழுந்துள்ளது. அ.தி.மு.க-வில் உள்ள இரு தரப்பினரும் தற்போது ஆட்சித்தலைமையை கைப்பற்றுவதற்காக ஜெயலலிதாவின் மரணத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.''

- கே. புவனேஸ்வரி


டிரெண்டிங் @ விகடன்