கீக்கேரு, மேக்கேரு, அமிர்கேரு, ஆக்கேரு... இவங்களோட ஒரு நாள் வாழலாமா? | Exciting lifestyle of Kota people

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (09/03/2017)

கடைசி தொடர்பு:17:24 (09/03/2017)

கீக்கேரு, மேக்கேரு, அமிர்கேரு, ஆக்கேரு... இவங்களோட ஒரு நாள் வாழலாமா?

உயர்ந்து நிற்கும் மலைகள், உடலைச் சீண்டும் சாரல்.. இயற்கை தன் வனப்பை வாரிவாரிக் கொட்டி வைத்திருக்கிற நீலகிரி மலையில் ஏராளமான அற்புதங்கள் உண்டு. அவற்றில் ஒன்று கோத்தர்களின் வாழ்க்கை. நீலகிரியின் மூதாதைச் சமூகங்களில் முதன்மையானது கோத்தர் சமூகம். கலையும், கட்டுப்பாடுமாக வாழும் கோத்தர்களின் வாழ்க்கையில், ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள்.  

நீலகிரியைச் சுற்றியுள்ள அடர்வனங்களை ஒட்டி, கோக்கால், குந்தா கோத்தகிரி, திருச்சிக்கடி, கோத்தகிரி, கொல்லிமலை குந்தா, கூடலூர் கோக்கால், கீழ் கோத்தகிரி ஆகிய 7 இடங்களில் கோத்தர்கள் வசிக்கிறார்கள். எண்ணிக்கையில் மூவாயிரத்தைத் தாண்டாத இச்சமூகத்தினர் வசிக்கும் பகுதிகள் `கோக்கால்' என்ற பொதுவார்த்தையால் அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய பழங்குடி வகையைச் சேர்ந்த இவர்களின் மொழி கோத்தா. தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த தென்திராவிட மொழி. எழுத்து வடிவமில்லை. நீலகிரியின் தட்பவெப்பத்துக்குத் தகுந்தவாறு உடைகளையும், குடிலையும் தகவமைத்து வாழும் இவர்கள் தங்களை `கோ' (அரசன்) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆண்களின் உடை `வராடு'. ஒரு நீளமான பருத்தி வேட்டி. மேலே ஒரு போர்வை. பெண்களின் உடை `கிர்'. முழங்கால் முதல் கழுத்துவரையிலும் வெள்ளாடை உடுத்தி, மேல்பாகத்தைப் போர்த்திக் கொள்கிறார்கள். உடை நழுவாமல் இருக்க, ஒரு கயிறு கொண்டு வரிந்து கட்டிக் கொள்கிறார்கள். வழிபாடு, சடங்குகளில் வெள்ளுடை தரித்து இவர்கள் ஆடுகிற நடனம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். 

கோத்தர்களின் தொன்மம் சிவனோடு தொடர்புடையது. இன்றளவும் ஈசனையும், பார்வதியையுமே தங்கள் மூதாதைகளாகக் கருதுகிறார்கள். 

`ஒருகாலத்தில் இந்த உலகம் நீரால் அழிந்து போனபோது, வெள்ளத்தில் ஒரு பூசணிக்காய் மட்டும் மிதந்து கொண்டிருந்ததாம். அதற்குள் இரண்டு பேர் இருந்தார்களாம்.  அதை எடுத்த சிவபெருமான் பூசணிக்காயை உடைத்து, ரெண்டு பேரையும் வெளியில கொண்டு வந்தாராம். அழிந்துபோன இந்த உலகத்தை நீங்கள்தான் திரும்பவும் உருவாக்க வேண்டும் என்று சொல்லி, தொழில் கருவிகளையும், ஒரு எருமை மாட்டையும் உருவாக்கி கையில் கொடுத்து, மந்திர, தந்திரங்கள், மூலிகை வைத்தியங்களைக் கற்றுக்கொடுத்து சிவனும், பார்வதியும் அனுப்பி வைத்தார்களாம்...' 

இந்த நம்பிக்கையில் சிவனையும், பார்வதியையும் தங்கள் மூதாதைகளாக கருதுகிறார்கள் கோத்தர்கள். தொன்மக்கதைக்கு ஏற்ப எருமைமாடு தான் இம்மக்களின் வாழ்வாதாரம். மேய்ச்சலே மரபுத் தொழில். வீட்டுக்கு 100 எருமைகள் வைத்து வளர்த்த காலமெல்லாம் உண்டு. எருமையின் பாலை இவர்கள் பயன்படுத்துவதில்லை. நெய் தான். குடிசைத்தொழில் போல நெய் தயாரிப்பு நடக்கிறது. வழிபாடு, சடங்குகளிலும் நெய்தான் பிரதானம். கடந்த 25 ஆண்டுகளில் வனச்சட்டங்கள் காரணமாக இம்மக்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு ஒரு எல்லைக்குள் முடக்கப்பட்டார்கள். மேய்ச்சல் முடங்கியது. இன்னொருபுறம், சிறுத்தை, புலிகள் என விலங்குகளுக்கு இரையாகின எருமைகள். தற்போது வீட்டுக்கு, ஒன்றோ, இரண்டோ எருமைகள் வைத்திருக்கிறார்கள். விவசாயமே பிரதானமாகிவிட்டது. கேழ்வரகு, சாமை, வரகு, கோதுமை பயிரிடுகிறார்கள். மலையை ஆக்கிரமித்திருக்கும் தேயிலைத் தோட்டத்திலும் கூலியாக வேலை செய்கிறார்கள். 

கோத்தர்கள் - பழைய படம்

பிற பழங்குடிகளுக்கு இல்லாத ஒரு தனித்தன்மை கோத்தர்களுக்கு இருக்கிறது. எதற்காகவும் பிற மக்களைத் தேடி இவர்கள் செல்வதில்லை. புழங்கு பொருட்களில் இருந்து வைத்தியம் வரைக்கும் எல்லாவற்றையும் இவர்களே செய்து கொள்கிறார்கள். அந்த அளவுக்குக் கைவினைத்திறன் மிகுந்திருக்கிறது. பிரசவத்துக்குக் கூட மருத்துவர்களை நாடுவதில்லை. கத்தி, அரிவாள், கடப்பாரை, மண்கொத்தி, கோடாரி, மணி, வளையல், கடுக்கன் என தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே செய்து கொள்கிறார்கள். 

சிவன், பார்வதியை `அய்யனோர்', `அம்மனோர்' என்று அழைக்கிறார்கள். அய்யனோர் கருவறையில் லிங்கமும், அம்மனோர் கருவறையில் மூன்று அடுப்புகளும் உள்ளன. இக்கோவில் திருவிழா தான் கோத்தர் சமூகத்தின் மிகப்பெரும் மரபு விழா. பக்திக்கு இணையாக கொண்டாட்டமும் இவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. அனைத்து சடங்குகளுமே வாழ்க்கையோடு பிணைந்து நிகழ்கிறது. 

வெள்ளி தான் இம்மக்களின் பிரதான உலோகம். பெண்கள் மணிகட்டில் இரண்டு வளையல்களும், முழங்கைக்கு மேலாக இரண்டு வளையல்களும் அணிந்து கொள்கிறார்கள். பச்சைக்குத்துவதை வைத்திய முறைகளில் ஒன்றாக வைத்துள்ளார்கள். பிரச்னையின் தன்மைக்கேற்ப இடத்தேர்வு செய்து பச்சை குத்துகிறார்கள். ஆண்களும், பெண்களும் கண்டிப்பாக கொண்டை வைத்துக் கொள்ள வேண்டும்.  அப்படி வைத்தால் தான் கோவில் உரிமை. அதிலும் பெண்கள், கொண்டை போட்டு ஊசியொன்றை சொருகிக் கொள்கிறார்கள். மாதவிடாய் நேரங்களில், புற்களால் செய்யப்பட்ட பந்துபோன்ற தலைச்சூடியை மாட்டிக்கொள்ள வேண்டும். அதுவே அடையாளம். அப்போது வெளியில் நடமாடக்கூடாது. `தேல்வாழ்' என்று தனியாக ஒரு பொதுவீடு உண்டு. அதற்குள் சென்றுவிட வேண்டும். அங்கேயே சமையல், சாப்பாடு. பெரியவர்களின் முகத்தைக் கூட பார்க்கக்கூடாது. 

இவர்களின் குடியிருப்பும் வித்தியாசமானது. கீக்கேரு, மேக்கேரு, அமிர்கேரு, நடுக்கேரு, ஆக்கேரு, ஈக்கேரு என இச்சமூகத்தில் ஆறு உட்பிரிவுகள் உண்டு. இவற்றில் கீக்கேருவும், மேக்கேருவும் மாமன், மச்சான் வகையறா. மற்றவை சகோதர உட்பிரிவுகள். குடியிருப்புக்கு நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடும். அந்த வாய்க்காலுக்கு மேற்கே இருக்கும் வீடுகள் அனைத்தும் மேக்கேரு பிரிவினருடையவை. கிழக்கே இருப்பவை, கீக்கேரு பிரிவினருடையவை. அய்யனோர், அம்மனோர் கோவிலுக்கு, கீக்கேருவுக்கு தனியாகவும், மேக்கேருவுக்குத் தனியாகவும் பூசாரிகள் இருக்கிறார்கள். எல்லாப் பண்டிகைகளிலும் இரு தரப்புக்கும் இடையே வேடிக்கையும், விளையாட்டும் களைகட்டும்.  ஊர் நிர்வாகம் மிகவும் கட்டுக்கோப்பானது. 

கோத்தர் மக்களின் நடனங்கள் ஆதிவடிவமானவை. பக்தியை முன்னிறுத்தி ஏராளமான வாய்மொழிப்பாடல்கள் இருக்கின்றன. நாதஸ்வரம் வடிவிலான `கொல்' என்ற ஊதுகருவியை பயன்படுத்துகிறார்கள். கட்டைக்குழலை ஒத்த கருவி. இதன் இசை சூழலை உக்கிரமாக்குகிறது. தபக், பர், குணர்.. இதெல்லாம் தப்பட்டை, கொட்டு வடிவிலான தோல்கருவிகள். கொப் என்பது கொம்பு. முற்காலத்தில் விலங்குகளின் கொம்புகளால் ஆன இக்கருவி இப்போது செம்பால் செய்யப்படுகிறது. இதுதவிர வட்டமணித்தட்டு, ஜால்ரா கருவிகளும் உண்டு. 

ஆண்களின் நடனத்துக்குப் பெயர் கண்மு ஆட்டு. பின்பகுதியில் தொங்கும் குஞ்சமுடைய தலைப்பாகை, நெஞ்சுப்பகுதியை மறைக்கும் நீண்ட துணி, முழுக்கைச் சட்டை, இடுப்புப்பட்டை, கால் வரையிலான பாவாடை.. இதுதான் ஆண்களின் ராஜஉடை. நடனமாடும்போது, ஏழு பிரிவுகளில் ஒவ்வொருவரைத் தேர்வுசெய்து இந்த ராஜஉடையை அணிவிக்கிறார்கள். பிற ஆண்கள் தங்கள் பாரம்பர்ய முண்டுவுடனே ஆடுகிறார்கள். கண்டிப்பாக கொண்டை வைத்த ஆண்களுக்கு மட்டுமே நடமாட அனுமதி. பெண்களின் நடனம் பெமுஆட்டு. பெண்கள் இயல்பான உடையிலேயே ஆடுகிறார்கள்.

காலடித்துள்ளல் ஆட்டம், ஒற்றைக்கால் வைத்து ஆடுவது, இரண்டு காலை முன்வைத்து ஆடுவது, திரும்பி ஆடுவது, சுற்றி ஆடுவது என இந்நடனத்தில் பலவகைகள் உண்டு. இசையின் தன்மைக்கு ஏற்ப நடனத்தின் வேகம் கூடும். கைகளை விரித்தும், குவித்தும், கால்களை தாளநடைக்கேற்ப வைத்தும் நிகழும் இந்நடனக்கலை உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. இசையைக் குலைக்காமல், இடையிடையே ஓஹோ.. ஓஹோ.. என்ற சத்தமும் எழுப்புகிறார்கள்.  

திணை விதைப்பையும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள் கோத்தர்கள். அன்று வீட்டுக்கு வீடு பொங்கல் வைத்து அய்யனோர், அம்மனோருக்குப் படைத்து வழிபடுகிறார்கள். இரவு, வழக்கம் போல் ஆட்டக்களம் அதிர்கிறது. ஐம்பூதங்களையும் அழைக்கும் பாடல்களைப் பாடி ஆடுகிறார்கள். அதேபோல் அறுவடைத் திருவிழா. இதுதவிர, மாடுகளுக்கு உப்பு புகட்டும் நிகழ்வையும் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக உப்பு புகட்டுவதாகச் சொல்கிறார்கள்.

ஊர்கூடி கொண்டாடும் இன்னொரு பண்டிகையும் இருக்கிறது. கில்லிப் பண்டிகை. பொங்கலை ஒத்த பண்டிகை. அறுவடையான புதுத்தானியங்களால் பணியாரம் சுட்டு விருந்தினர்களுக்கும், உறவுகளுக்கும் வழங்குகிறார்கள். சண்டை, சச்சரவால் மன வருத்தத்தில் இருப்பவர்களை அன்றையதினம் தங்கள் வீடுகளுக்கு அழைத்து விருந்து வைக்கிறார்கள். அதன்மூலம் உறவு புதிதாகிறது. அன்று பகல், கில்லி விளையாட்டு களை கட்டும். மேக்கேரு மக்கள் ஒரு அணியாகவும், கீக்கேரு மக்கள் ஒரு அணியாகவும் களத்தில் மோதுகிறார்கள். மாமன் மச்சான்களுக்குள்ளான விளையாட்டு. பூசாரிகள் தான் கேப்டன்கள். கோத்தர்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. அன்றிரவும் விடிய, விடிய ஆட்டம், பாட்டு, இசை. பூசாரிகளும் கைகோர்த்து ஆடுகிறார்கள்.  

இச்சமூகத்தைச் சேர்ந்த பலர் அரசுப்பணிகளில் இருக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். ஆனாலும் கட்டுப்பாடு குலையவில்லை. யாராக இருந்தாலும் பஞ்சாயத்துத் திண்டில் பூசாரிக்குக் கீழே தான் அமரவேண்டும். பூசாரி முகம் பார்த்துப் பேசக்கூடாது. முறையான உறவில் காதலித்தால் பிரச்னையின்றி திருமணம் செய்து வைக்கிறார்கள். 

இம்மக்களின் பாரம்பர்ய நிலங்களை மதுவுக்கும், புகையிலைக்கும் ஏமாற்றி பறித்துக்கொண்டதாக குமுறுகிறார்கள். எருமை மேய்ச்சல், கைவினைப்பொருள் உற்பத்தி என எல்லாத் தொழிலும் நசிந்து விவசாயத்தில் வந்துநிற்கும் இவர்களுக்கு நிலஉரிமை மிகப்பெரும் சிக்கலாக இருக்கிறது. இம்மக்களிடத்தில் இன்னொரு சோகமும் இருக்கிறது. பலநூறு வருடங்களாக இம்மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை. ஒன்று பிறந்தால் ஒன்று இறந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். சோகம், சுகம் எதுவானாலும் அதற்கு ஆட்டக்கலையே வடிகாலாக இருக்கிறது. வனத்தோடும், இயற்கையோடும் ஒன்றி வாழும், மனித சமூகத்தின் ஆதிவித்துக்களான இம்மக்களின் துயரம் போக்க வேண்டியது அரசின் கடமை. 

- வெ.நீலகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்