மறுத்த தேர்தல் ஆணையம்... மாற்றப்பட்ட மேடை... ராசி பார்க்கிறாரா தினகரன்? | Current Political Trend is not hopeful for Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (09/03/2017)

கடைசி தொடர்பு:20:26 (09/03/2017)

மறுத்த தேர்தல் ஆணையம்... மாற்றப்பட்ட மேடை... ராசி பார்க்கிறாரா தினகரன்?

தினகரன்

மிழ்நாட்டில் இதுவரை அ.தி.மு.க - தி.மு.க இடையேயான போட்டி அரசியல்தான் பிரபலம். ஆனால், இப்போது அ.தி.மு.க-வுக்குள்ளேயே போட்டி அரசியல் தலைதூக்கி விட்டது. அ.தி.மு.க கட்சியையும், தமிழக ஆட்சியையும் கைப்பற்றி இருக்கும் சசிகலா அணியை வீழ்த்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தீவிரமாக வேலைசெய்து வருகின்றனர். அதன் முன்னோட்டமாகவே ஓ.பி.எஸ் அணியினர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை பிப்ரவரி 24-ம் தேதி அன்று ஆர்.கே. நகரில் கொண்டாடி பட்டையைக் கிளப்பி விட்டனர். இந்த விழா நடைபெற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான், தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. அதன் பிறகுதான், மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்தை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஓ.பி.எஸ் அணி அடுத்தக்கட்டமாக, 'ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்' என்று ஓர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து, அதனைத் தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் நடத்தியும் முடித்துள்ளனர். இதையடுத்து, இப்போது வெளிமாவட்ட சுற்றுப் பயணத்துக்கும் ஓ.பி.எஸ் தயாராகி வருகிறார். விரைவில் அவரது சுற்றுப்பயண அறிவிப்பு வர இருக்கிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வந்த அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது முதல் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சியினரைக் கேட்டிருந்தார். 'ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் தன் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தலாம்' என்று முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. பின்னர், 'ஆர்.கே. நகரில் பொதுக்கூட்டம் வேண்டாம்; அது ராசிப்படி சரியிருக்காது' என்று கருதி, மைலாப்பூர் தொகுதியில் கபாலீஸ்வரர் கோயில் அருகே மாங்கொல்லை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மார்ச் 9-ம் தேதி இரவு கூட்டம் நடைபெற இருந்த நிலையில், முற்பகலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

சி.பி.ஐ விசாரணை கேட்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினரின் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க விரிவான ஆலோசனையில் ஈடுபட்டிருந்த தினகரனிடம் தேர்தல் அறிவிப்பு குறித்து சொல்லப்பட்டது. அவரின் முகத்தில் உடனே இடைத்தேர்தல் குறித்த சிந்தனை உருவாகிவிட்டது. அமைச்சர் டி. ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் வெற்றிவேலை உடனே அழைத்து இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை கவனிக்க உத்தரவிட்டார். இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க கீழ்மட்ட அளவில் அனைத்து நிர்வாகிகளுக்கும் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தினர். இந்தத் தொகுதியில் முதலில் வி.கே.சசிகலா நிற்பார் என்றுதான் சொல்லி வைக்கப்பட்டிருந்தது. இப்போது, சசிகலா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளதால் டி.டி.வி. தினகரனை நிறுத்தலாமா அல்லது வேறு யாரை போட்டியிட வைக்கலாம் என்ற யோசனை அ.தி.மு.க தலைமைக் கழக விவாதத்தில் மேலோங்கி இருக்கிறது. குடும்ப ஆதிக்க பிரச்னையை மையப் புள்ளியாக வைத்துதான் ஓ.பி.எஸ் அணியினர், அரசியல் செய்கின்றனர். இந்த நேரத்தில் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார் தினகரன்..

எனவே, பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்து, அவரிடம் ஆலோசனை கேட்கத் திட்டமிட்டுள்ளார் டி.டி.வி.தினகரன். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், சசிகலா ஜெயிலுக்குப் போன அன்றுதான் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். சிறைக்குச் செல்லும் முன் அவருக்கு சசிகலா இப்பதவியை வழங்கினார். ஆனால், இந்த நியமனத்துக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் ஓ.பி.எஸ் அணியினர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்த புகார் கடிதத்துக்கு, தினகரன்  கொடுத்த பதில் அறிக்கையை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முடிவையும் அவர் தள்ளி வைத்தார். இப்போது, தேர்தல் முடியும் வரை அத்தொகுதியில் எந்த நலத்திட்ட உதவிகளையும் வழங்கமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அவர் சோர்ந்து போனார். ஆனால், ஓ.பி.எஸ் அணியோ நாளுக்கு நாள் வேகமெடுத்து முன்னேறிச் செல்லும் நிலையில், டி.டி.வி.தினகரன் வேகமெடுக்காதது ஆளும்கட்சியை சோர்வடைய வைத்துள்ளது. அவரது ராசி சரியில்லையோ, என்னவோ அவரது தலையில் பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முடிவு வெளியாகும் நாள் சித்திரை மாதம் 2-ம் தேதி. சித்திரை முதல் தேதியை ஜெயலலிதா, தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அறிவித்துக் கொண்டாடி வந்தார். அந்த நாளில் அரசு விழாக்களையும் நடத்தினார். டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ், மு.க. ஸ்டாலின், ஜெ. தீபா... அந்த நாளை யார் உற்சாகமாக கொண்டாடப்போகிறார்களோ?

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்