வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (13/03/2017)

கடைசி தொடர்பு:14:20 (13/03/2017)

பாலியல் குற்றம் முதல் கடத்தல் வரை... உத்தரப்பிரதேசம் எம்.எல்.ஏ. பிரதாபங்கள்!

உத்தரபிரதேசம்

னநாயக செயல்முறைகளில் மக்களை ஆட்சி செய்யும் எம்.எல்.ஏ-க்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாக இல்லை. அரசியலில் தூய்மை என்பது வழக்கற்றுப்போன வார்த்தையாகி விட்டது. அவரை விட இவர் பரவாயில்லை என்பதாகத்தான் தேர்தலில் எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். உத்தரப்பிரதேசம் சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

103 எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குள்..

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்களும், கோடீஸ்வரர்களும் நிறைந்திருக்கின்றனர். மொத்தம் உள்ள 403 எம்.எல்.ஏ-க்களில் 103 பேர் மீது கடுமையான குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலியல் குற்றங்கள், கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் , கடத்தல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் என பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் உள்ளன.

மாஃபியா எம்.எல்.ஏ

முக்தர் அன்சாரி
103 எம்.எல்.ஏ-க்களில் அதிக அளவாக பி.ஜே.பி-யைச் சேர்ந்த 82 எம்.எல்.ஏ-க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. உ.பி-யின் மாஃபியா என்று அழைக்கப்படும் முக்தர் அன்சாரி பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவரும் இப்போது உ.பி சபைக்குள் நுழைந்திருக்கிறார். இவர்மீது 16 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதில் 8 வழக்குகள் கொலை அல்லது கொலை முயற்சி வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எந்த வழக்குகளிலும் அவர் தண்டிக்கப்படவில்லை என்பதுதான் அவர் எம்.எல்.ஏ-வாக சபைக்குள் நுழைய காரணம். இவர் 1996-ல் இருந்து 5-வது முறையாக எம்.எல்.ஏ-வாக ஆகியிருக்கிறார். அதில் 4 முறை சிறையில் இருந்தவாறே வெற்றி பெற்றிருக்கிறார்.

 

கொலை, கொள்ளை வழக்குகள்...

ராஜா பையாஇவருக்கு இணையாகப் பேசப்படுவர் ராஜா பைய்யா என்றழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப் சிங். இவர் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றுள்ளார். எனினும் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவாளர். இவர் மீது 8 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடத்தல், கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளும் அதில் அடக்கம். பொடாசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை ஆனவரும் கூட. சமாஜ்வாடி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர். இதில் கூடுதல் விநோதம் என்னவென்றால், அப்போது சிறைத்துறை பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

சமாஜ்வாடி கட்சி சார்பில் வெற்றி பெற்ற நாஹித் ஹசன் மீது மூன்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உள்ளிட்ட கடுமையான குற்றவழக்குகள் உள்ளன. தவிர பி.ஜே.பி-யை சேர்ந்த சாதனா சிங் என்ற பெண் எம்.எல்.ஏ மீது ஏழு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இன்னொரு பி.ஜே.பி பெண் எம்.எல்.ஏ- ரீட்டா ஜோஷி மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எனினும் 2012-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-க்கள் ஆனவர்களில்தான் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அதிகம். அதை ஒப்பிடும்போது இந்த முறை எம்.எல்.ஏ-க்கள் ஆனவர்களின் குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவு என்பது ஒரு சிறு ஆறுதல்தான்.

கோடீஸ்வரர்கள்

403 பேர் கொண்ட உ.பி சபையில் 322 பேர் கோடீஸ்வரர்கள். அதில் பி.ஜே.பி-யைச் சேர்ந்த அஜய் பிரதாப் சிங்குக்கு 49 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. 60 கிலோ தங்கம், 7 வாகனங்கள், 6 துப்பாக்கிகள் இருக்கின்றன. இவர் தமது தேர்தல் அஃபிடவிட்டில் தாம் ஒரு விவசாயி என்று குறிப்பிட்டுள்ளார்.

40 பேர் பெண்கள்

உ.பி சட்டசபை தேர்தலில் 479 பெண் வேட்பாளர்கள்  போட்டியிட்டனர். அவர்களில் 40 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதே போல வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களில் 290 பேர் மட்டுமே பட்டதாரிகள் மற்றும் அதற்கும் மேல் படித்தவர்கள்.

- கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்