வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (13/03/2017)

கடைசி தொடர்பு:18:30 (13/03/2017)

“எம்.ஜி.ஆரைக் கண்டு பிரமித்த சின்னப்பா தேவர்” : நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் : அத்தியாயம்-20

எம் ஜி ஆர்

1945 ல் வெளியான 'சாலிவாஹனன்' எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் பெரிய அளவு அந்தஸ்து அளித்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் திரையுலகில் வெற்றிபெறுவதற்காக எம்.ஜி.ஆர்  சில முன்னெடுப்புகளை எடுத்துக்கொள்ளக் காரணமான படம் எனலாம். பின்னாளில் தன் திரைப்பட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறப்போகும் தயாரி்ப்பாளர் ஒருவரை சாதாரண நடிகராக இந்தப் படத்தயாரிப்பின்போதுதான் எம்.ஜி.ஆர்  சந்தித்தார். அவர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவர்! 

எம்.ஜி.ஆர் தன் நெருங்கிய நண்பர்களில் சிலரைத்தான் 'முதலாளி' என அழைப்பார். அந்த அரிதான மனிதர்களில் சின்னப்பா தேவர் குறிப்பிடத்தக்கவர். தேவர், எம்.ஜி.ஆரை 'ஆண்டவனே' என்று அழைப்பார். அத்தகைய நெருக்கமான நட்பு கொண்டிருந்தனர் ஒருவருக்கொருவர். 

கோவை ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28-ம் தேதி பிறந்தவர், மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்கிற எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் அவர். 

எம் ஜி ஆர்வறுமையினால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல்,கோவை "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளியாக சேர்ந்து, தொடர்ந்து  பால் முகவர், அரிசி வியாபாரி என அடுத்தடுத்து பல தொழில்களில் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் நட்டமடைந்து பிறகு சோடா கம்பெனி ஒன்றையும்  கொஞ்ச காலம் நடத்தியவர். ஆனால் சோர்ந்துபோகாமல் தன் உழைப்பின்மீது நம்பிக்கையோடு தொடர்ந்து உழைத்தவர் சின்னப்பா தேவர்.

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடையவரான சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். ஓய்வு நேரங்களில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்றதனால் கட்டு மஸ்தான தேகத்துடன் கம்பீரமாக இருப்பார். இதுவே அவரது வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்றிருந்த புராண இதிகாச படங்களே, திரைப்படங்களாக மீண்டும் தயாரிக்கப்பட்டன. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. புராண வேடங்களுக்கு ஏற்ற உடற்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். புராண படங்களை எடுப்பதில் அப்போது புகழ்பெற்றிருந்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் அப்போது வரிசையாக அம்மாதிரி திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. பின்னாளில்  பிரபலமாக விளங்கிய கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாதச் சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மற்ற சில நிறுவனங்களிலும் அவர் தொடர்ந்து நடித்துவந்தார்.

அப்படி கிடைத்த ஒரு வாய்ப்புதான் 'சாலிவாஹனனி'ல் பட்டி என்கிற வேடம். முதன்முறையாக எம்.ஜி.ஆருடன் இணைந்த அவர் அந்தப் படத்தில், தான் எம்.ஜி.ஆரை சந்தித்த அனுபவத்தை அந்நாளைய பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்...

“கோவையில் 'சாலிவாஹனன்' படம் தயாராக ஆரம்பித்திருந்த சமயம், விக்ரமாதித்தனுக்கு துணையான பட்டி வேஷத்தை எனக்கு அதில் கொடுத்திருந்தார்கள். ஒருநாள் மேக்கப் அறையிலிருந்து முருகா என்று சொல்லியபடி வேஷம் அணிந்து வெளியே வந்தபோது, எதிரே கம்பீரத்துடன் ராஜ உடையில்  ஒருவர் நின்றிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே வசீகரப்படுத்தும் உருவம். தங்கத்தை ஒத்த மினுமினுப்பான தேகம்.உள்ளத்தின் தெளிந்த நிலையையும், களங்கமற்றத் தன்மையையும் காட்டும் முகம். கருணை கொண்ட ஒளி வீசும் கண்கள். நான் ஒரு வினாடி நின்றுவிட்டேன். என்னைப் பார்த்த அவரும் அப்படியே நின்றுவி்ட்டார். என் கண்கள் முதலில் பேசின. உதடுகள்மெல்ல அசைந்தன. 'நீங்கதான் பட்டியாக இதில் நடிக்கிறீர்களா...' குரலில் வெண்கலத்தின் எதிரொலி.

'ஆமாம்.' 

மேலே நான் ஏதோ கேட்க விரும்புகிறேன் என்பதை அவர் எப்படியோ புரிந்துகொண்டுவிட்டார். 

'நான்தான் இதிலே விக்கிரமாதித்தன். என் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன். உங்கள் பெயரை நான் தெரிந்துகொள்ளலாமா?' என்றார் அடக்கத்துடன்.

ஆச்சர்யம் விலகாமல் என் பெயர் ஊர் வகுப்பு இவற்றை சொல்ல ஆரம்பித்தேன். 

அப்போது நான் நல்ல திடகாத்திரமாக இருப்பேன். அகன்ற மார்பு, குன்றுகளை நிகர்த்த தோள்கள் என்றெல்லாம் சொல்வார்களே அதேபோல எனது தேகமும் இருக்கும். இதற்குக் காரணம்  நான் செய்துவந்த தேகப்பயிற்சியும் கலந்துகொண்ட விளையாட்டுக்களுமே.

எனது தேகத்தை பார்த்த எம்.ஜி.ஆர், 'உங்க பாடியை நன்றாக வைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறீர்களா' என்று வினவினார். 'ஆம்' என்றேன். இப்படி எங்களது அறிமுகம் எங்களுக்குள்ளேயே நடந்தது. வேறு யாரும் எங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. வணக்கம் என்ற வார்த்தையுடன் அன்று நாங்கள் பிரிந்தோம். ஆனால் அதே வார்த்தையுடன் மறுநாள் மீண்டும் சந்தித்தோம்.

எம் ஜி ஆர்

தொடர்ந்து எங்களைப்பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது. ஆலவிருட்சத்தின் வேர்களைப் போன்று ஆழமாகப் பதிந்து அதன் விழுதுகளைப்போல படர ஆரம்பித்தது.

கோவை ராமநாதபுரத்தில் வீரமாருதி தேகப்பயிற்சி சாலை என ஒன்றுள்ளது. அங்கு அடிக்கடி நான் போய் தேகப்பயற்சி செய்வேன். எம்.ஜி.ஆருடன் அறிமுகமானபின் அங்கு நாங்கள் சேர்ந்தே செல்வோம். எம்.ஜி.ஆர் அங்கு அடிக்கடி வந்து பலவிதமான தேகப்பயிற்சிகளை செய்வார். பளுதூக்குதல், பார் வேலைகள் செய்தல், மல்யுத்தம், குத்துச்சண்டை கத்திச்சண்டை சிலம்பம், கட்டாரி இப்படியாக பலப் பயிற்சிகளில் ஈடுபடுவார். 

அவர் மட்டுமே பயிற்சிகளைச் செய்துவிட்டு போக மாட்டார். அங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் இவற்றை பொறுமையுடன் சொல்லிக்கொடுப்பார். அவர் கற்றுக்கொடுப்பாரே தவிர, அவருக்கு யாரும் எதையும் கற்றுக்கொடுத்து நான் பார்த்ததில்லை. இவற்றையெல்லாம் நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கும் இம்மாதிரியான ஸ்டண்ட் வேலைகளில் விருப்பம் அதிகமுண்டு என்பதை தெரிந்துகொண்ட அவர், என்னை அழைத்து. 'சினிமாவில் இப்படித்தான் கத்திச்சண்டை இருக்கவேண்டும். கம்புச் சண்டைகளும் சிலம்புச் சண்டைகளும் இப்படித்தான் அமைக்கவேண்டும்' என்று சொல்வார். 

குறிப்பாக சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளை எப்படி புகுத்தவேண்டும் எந்த இடத்தில் புகுத்தவேண்டும், எப்படி அமைக்கவேண்டும் என்பதையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்தான்.

எம்.ஜி.ஆர்கோவையில் என் வீடும் அவர் தங்கியிருந்த இடமும் சில அடி தூரங்களில்தான் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நாங்கள் உலாவுவோம். அப்படி பல சமயங்களில் மருதமலை முருகன் கோவிலுக்குப் போவோம். 

ஜுபிடரில் ஸ்ரீமுருகன் படத்தில் நடித்து முடித்தபின் அவருக்கு 'ராஜகுமாரி' வாய்ப்பு வந்தது. ஆனால் அத்தனை எளிதாக அது கிடைக்கவில்லை. போராடித்தான் அப்படியொரு வாய்ப்பை பெற்றார். அதுவும் நிச்சயமானதா என்று நிலையில்லை.

அந்த படத்தில் கதாநாயகனுடன் சண்டையிடும் ஒரு முரடன்வேடம் உண்டு. 'அதில் நீங்கள்தான் நடிக்கவேண்டும்' என்றார். எனக்கு மகிழ்ச்சிதான். மறுநாள் தயாரிப்பாளர்களை சந்தித்து என்னை அந்த வேடத்துக்குப் போடும்படி சிபாரிசு செய்தார். 
'உங்களை கதாநாயகனாகப்போட்டு படம் எடுப்பது இதுதான் முதல்தடவை. அப்படியிருக்க பிரபலமில்லாத  ஒருவரைப்போய் நீங்கள் இப்படி சிபாரிசு செய்யலாமா?... பெரிய ஆளாகப்போட்டு எடுத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும்' என்று அவர்கள் எதிர்வாதம் செய்தார்கள். 
ஆனால் எம்.ஜி.ஆர் விடவில்லை. 

'நம்மிடையே திறமையுள்ளவர்கள் இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? படம் எடுத்துப்பார்ப்போம். திருப்தியாக இருந்தால் வைத்துக்கொள்வோம். எந்தவித வாய்ப்பும் தராமல் ஒருவரின் திறமையை எடைபோட்டுவிடக்கூடாது தேவரையே போடுங்கள்' என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.  தனது நிலையே  ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் எதிராளிக்கு சிபாரிசு செய்த நல்ல உள்ளம் கொண்ட ஒரு நடிகரை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.  

இறுதியாக அந்த வேடத்தை எனக்கே தந்தார்கள். 

'அண்ணே இந்த ஃபைட்டிங் சீன்ல பிச்சு உதறுறீங்க.. பிரமாதமாக செய்யுங்க...' என்று படம் முழுக்க உற்சாகப்படுத்தினார்.

முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம். அதேசமயம் எனக்கும் அவருக்கும் சேர்ந்து கிடைத்திருக்கும் முதல் பெரிய சந்தர்ப்பம். இரண்டும் எங்கள் உற்சாகத்தை வளர்த்தன.”  

இப்படி தான் புகழடையாத காலத்திலேயே மனிதாபிமானம் மிக்கவராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததை விவரித்திருக்கிறார் தேவர். 
எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால நண்பரான தேவர் பின்னாளில் படத்தயாரிப்பாளராக மாறி படங்களைத் தயாரித்தபோது எம்.ஜி.ஆர் மீதான ஒரு அவப்பெயரை நீக்கி எம்.ஜி.ஆரின் வாழ்வில் முக்கியமான ஒரு நபராகவும் மாறினார். 

திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இருந்த அவப்பெயர் என்ன...அதை தேவர் எப்படி நீக்கினார்?...

     இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

- எஸ்.கிருபாகரன்

                 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்