“எம்.ஜி.ராமச்சந்திரன் போடும் கத்திச்சண்டை பரவாயில்லை”- குத்தாத குண்டூசி!  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் -22 | MGR stunt scenes are better, said in Gundoosi magazine

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (16/03/2017)

கடைசி தொடர்பு:09:35 (16/03/2017)

“எம்.ஜி.ராமச்சந்திரன் போடும் கத்திச்சண்டை பரவாயில்லை”- குத்தாத குண்டூசி!  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் -22

 

எம் ஜி ஆர்

சாலிவாஹனன் படத்தின் கதாநாயகன், ரஞ்சன். வில்லன், டி.எஸ் பாலையா. கதாநாயகிகள் அன்றைக்கு கவர்ச்சிக்கன்னி என ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் கே.எல்.வி வசந்தா. கதாநாயகன் ரஞ்சன், தமிழ்சினிமாவின் முதல் அஸ்டாவதானி நடிகர்.

விமானம் ஓட்டுவார். பரதம் ஆடுவார். பாடல் பாடுவார். உடலை வில்லாய் வளைத்து சண்டைபோடுவார். வாள் சண்டை, கத்திச் சண்டை என சகல துறையிலும் திறமைபெற்ற ஒருவர். மங்கம்மா சபதம், சந்திரலேகா போன்ற அவரது படங்கள் அன்றைக்கு மாஸ்டர் பீஸ் படங்கள். ஒருவகையில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாளர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சகலகலாவல்லவர் என்று சொல்லக்கூடியவராக இருந்தவர் ரஞ்சன். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பின்னாளில் ஜெமினி தயாரித்த 'சந்திரலேகா' படத்தின்மூலம் இந்தித்திரையுலகிலும் நுழைந்து புகழடைந்தவர்.

தன் இறுதிக்காலத்தில் திரைத்துறையில் இருந்து விலகி அமெரிக்காவில் வசித்தபோதும் நடனம் கற்றுக்கொள்வதற்காக விமானம் பிடித்து சென்னைக்கு பறந்துவந்தவர். அந்தளவுக்கு கலைகளின் காதலன். மொத்தத்தில் மாஸ்டர் ஆஃப் ஆல் என்று சொல்லலாம். அப்படிப்பட்டவர் நடிப்பில் சாலிவாஹனன் திரைப்படம் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. படம் மக்களால் ரசிக்கப்பட்டபோதும் சில காரணங்களால் கடும் விமர்சனத்திற்குள்ளானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, படத்துக்கு அன்றைய பிரபல சினிமா இதழான குண்டூசி எழுதிய விமர்சனத்தை பார்க்கலாம். 

எம்.ஜி.ஆர்

“இந்தக் கதையை டைரக்டர் சீர்படுத்தவும் முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக  அந்தக் காதல் நோய் பிடித்த காமிரா, நடிகைகளின் மார்பகங்களையே பார்த்துக்கொண்டு பதிவு செய்வதில் சிரத்தை காட்டியிருக்கிறார். கே.எல். வி வசந்தாவை வெறுக்கத்தக்கபடி மேலாடை தரிக்கச் செய்திருக்கிறார். மண்மிதிக்கும்போது வசந்தாவின் மார்பகங்களையே சில நிமிஷநேரம் குளோஷப்பில் காட்டச் செய்திருக்கிறார் டைரக்டர். ராஜகுமாரி தோற்றமும் இதுபோலவே படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

ரஞ்சனுக்கு வேஷம் துளிக்கூடப் பொருத்தமில்லை. அவரது முகத்தோற்றம் அவருக்கு எதிராக நிற்கிறது. மேக் அப் சகிக்கக்கூடியதாக இல்லை. முகத்தில் வீரத்துக்குப் பதில் அசடும் அறியாமையும் தாண்டவமாடுகின்றன. அவர் தன் படங்களில் கூட நடிக்கும் நடிகைகளை வாரித்துாக்குவதை அவர் தனது டிரேட் மார்க் ஆக ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்.  அவருடன் காதல் காட்சிகளில் டி.ஆர். ராஜகுமாரி நன்றாக நடித்திருக்கிறார்.....”-  நீளமான இந்த விமர்சனத்தின் இடையே அந்த பத்திரிகை ஒரு கதாபாத்திரத்தை மட்டும் பட்டும் படாமல் ஒரேவரியில் பாராட்டியிருந்தது. 

அது, எம்.ஜி.ஆர் பற்றியதுதான். “எம்.ஜி.ராமச்சந்திரன் போடும் கத்திச்சண்டை பரவாயில்லை.” என்ற அந்த ஒருவரியினால் உச்சிக்குளிர்ந்துப்போனது எம்.ஜி.ஆருக்கு. கதாநாயகனை கண்டமேனிக்கு சாடியும் அதேசமயம் துணைபாத்திரத்தை பாராட்டியும் எழுதப்பட்ட இந்த விமர்சனம், 'வெறும் நடிப்புத்திறமையும் அழகும் மட்டுமே சினிமாவுக்கான மூலதனம் இல்லை. பல விசயங்களிலும் நம்மை மெருகேற்றிக்கொண்டால் மட்டுமே மற்றவர்களிடமிருந்து தாம் தனித்துத் தெரிவோம்' என்ற எண்ணத்தை எம்.ஜி.ஆர் மனதில் இன்னொரு முறை ஆழமாக விதைத்தது. அந்த உறுதியோடு முன்னைவிடவும் சுறுசுறுப்போடு தன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத்துவங்கினார் எம்.ஜி.ஆர். 

டி.ஆர்.ராஜகுமாரி

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு இரண்டாவது திருமணம் நடந்துமுடிந்திருந்தது. முதல் மனைவி பார்கவி இறந்து ஒருவருடம் ஆன நிலையில் எம்.ஜி.ஆர் விரக்தியான மனநிலையில் காலம் கழித்துவந்தார். திரைப்பட வாய்ப்புகள் அவரின் மனதை முழுமையாக மாற்றிவிடவில்லை. இதனால் குடும்பத்தினர் ஒன்றுகூடிப்பேசி அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்தனர். 
கேரளாவில் குழல்மன்னம் பகுதியைச் சேர்ந்த சதானந்தவதி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு பேசி முடித்தனர். குழல்மன்னத்தில் எரகாட் என்ற வகுப்பைச் சேர்ந்த சதானந்தவதி குடும்பம் அப்பகுதியில் வசதியான குடும்பம். அவர்களுடன் ஒப்பிட்டால் எம்.ஜி.ஆர் குடும்பம் மிக சாதாரணமானதுதான்.

எம்.ஜி.ஆர் குடும்பத்தின் பொருளாதார நிலையை கேட்டறிந்த சதானந்தவதியின் உறவினர்கள் இந்த வரனை தவிர்க்க அறிவுறுத்தினர். 'இன்னும் பெரிய இடம் சதாவுக்கு கிடைக்கலாமே' என அவர்கள் அறிவுரை வழங்கினார்கள் அவர்கள். இதனால் சதானந்தவதியின் குடும்பம் குழப்பத்தில் இருந்தபோது, சென்னையில் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து வந்த எம்.ஜி.ஆரின் புகைப்படம் எல்லா குழப்பத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அது 'சீதா ஜனனம்' படத்தின் ஸ்டில்.“ஆயிரம் சொத்துக்களோட மாப்பிள்ளைங்க வரலாம். ஆனா ராஜாப்போல இப்படி ஒரு ஒருத்தன் எம்பொண்ணுக்கு கிடைக்கமாட்டான்” என உறவினர்களின் வாயை அடைத்தார் சதானந்தவதியின் தாயார் மூகாம்பிகை அம்மாள். நீண்ட வற்புறுத்தலுக்குப்பின் எம்.ஜி.ஆரும் இரண்டாம் திருமணத்துக்குச் சம்மதிக்க, குழல்மன்னத்தில் பெண் வீட்டில் 1942-ம் ஆண்டு பிற்பகுதியில் எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சதானந்தவதிக்கு 14 வயது. எம்.ஜி.ஆருக்கு 26 வயது.

எம்.ஜி.ஆர்

திருமணத்திற்குப்பிறகு சிலமாதங்கள் சதானந்தவதி தாய்வீட்டிலேயே தங்கியிருந்தார். பின்னர் வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு குடிபுகுந்தார். கணவர், மூத்தார் சக்கரபாணி, அவரது மனைவி, மாமியார் சத்தியபாமா மற்றும் அவரது பேரப்பிள்ளைகள் என கூட்டுக்குடித்தன வாழ்க்கை சதானந்தவதிக்கு பிடித்திருந்தது. பல விஷயங்களில் முதல்மனைவி தங்கமணியின் குணங்களை ஒத்திருந்ததால் சத்தியபாமா குடும்பத்தினருக்கு அளவில்லா மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர் தன் பழைய கவலைகளில் இருந்து முழுமையாக விடுபட்டு தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார். எம்.ஜி.ஆரின் இல்லறம் இனிதாக சென்றுகொண்டிருந்தது. எல்லாம் அந்த அதிர்ச்சியான செய்தி சதானந்தவதிக்கு தெரியவரும்வரைதான். அதன்பின் எல்லாம் மாறிவிட்டது..

சதானந்தவதிக்கு அதிர்ச்சி தந்த செய்தி என்ன?

- எஸ்.கிருபாகரன்
 

                      இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்